Motivation Image
Motivation Imagehttps://pixabay.com

வலுவான உறவுக்கு உதவுவது நம்பிக்கையா? பாசமா?

மது வாழ்க்கையில் எத்தனையோ உறவுகள் மலரும். அதேபோல் எத்தனையோ உறவுகள் உதிரும். ஒரு உறவை நாம் ஏற்படுத்திக்கொள்வது சுலபம். ஆனால், அதே உறவை தக்கவைத்துக் கொள்வது மிகமிக கடினம்.

உறவென்றால் சண்டைகள் இல்லாமல் இருக்கவே இருக்காது. ஆனால், எந்த உறவு சண்டைகளையும் தாண்டி, நிலைத்திருக்கிறதோ அது மிக வலுவான உறவு என்றே கூற வேண்டும்.

சண்டைகளிலும் ஓர் உறவு வலுத்து நிற்பது எப்படி? அதற்கு காரணம் பாசமா? நம்பிக்கையா?

ந்த இரண்டு சின்ன சொற்களுக்கும் இடையில் எவ்வளவு பெரிய அர்த்தம் இருக்கிறது என்று தெரியுமா? உண்மையில், இச் சொற்களுக்கான வித்தியாசங்கள் தெரிந்துக்கொண்டாலே போதும், நாம் அந்த சண்டைகளினால் மனம் உடையாமல் இருக்கலாம். சண்டையால் ஏற்படும் வருத்தம் இல்லையென்றால், அதுபோதுமே ஒரு உறவு நிலைத்து நிற்க!

‘நம்பிக்கை’… இந்த சொல்லின் அர்த்தம் சிறிது மாறினாலும் நம்முடைய சந்தோஷம் மற்றும் துக்கத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். நாம் ஒருவர் மீது அதிக நம்பிக்கை வைத்தபிறகு அந்த உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டாலும் நம்மால் ஏற்றக்கொள்ளவே முடியாது. அந்த நம்பிக்கையின் விளைவாக அவர் நம்மை ஏமாற்றி விட்டார் என்றுதான் நினைக்கத் தோன்றும். அப்போது நாம் அவரை வெறுக்கும் சூழ்நிலை ஏற்படும். பிறகு அந்த உறவே முறிய நேரிடும். நம்பிக்கை வீழ்ந்தால் பாதிப்பு மிக அதிகம்.

இதுவே நாம் ஒருவர்மீது பாசம் வைத்திருந்தால் அன்பான வார்த்தைகள், சிறிது நேரம் செலவிடுதல் தவிர வேறு எதுவுமே தேவையில்லை அந்த உறவுக்கு.

நம்பிக்கையை விட பாசத்திற்கு வலிமை அதிகம். பாசம் என்ற வார்த்தையில் அனைத்துமே அடங்கிவிடும்.

இவை இரண்டும் பொதுவாக பார்க்க ஒரேமாதிரி இருப்பதுபோல்தான் இருக்கும். ஆனால், ஆழமாகப் பார்த்தால் அர்த்தம் வேறு.

உதாரணத்திற்கு, ஒருவர் தொழில்ரீதியாகவும் மனரீதியாகவும் உங்களை மேம்படுத்துகிறார். தனிப்பட்ட முறையில் நீங்கள் கஷ்டப்படும்போது, உங்களுடன் அவர் துணை நிற்கிறார். அப்போது அவர்மீது தன்னையறியாமல் நீங்கள் பாசம் வைக்கிறீர்கள். இருவரும் நண்பர்களாகிவிடுகிறீர்கள். ஆனால், தொழிலில் ஏதோ ஒரு கருத்து வேறுப்பாட்டால் பேசிக் கொள்வதில்லை. பிறகு நீங்கள் வேறு வேலைக்கு சென்று விடுகிறீர்கள். அதன்பிறகும் அவரை பற்றி நினைத்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

பல நாட்கள் கழித்தும் யாரோ உங்களுக்கு தெரிந்தவர் உங்கள் நண்பரை பற்றி தவறாக பேசும்போது, உங்களுக்கு கோவம் வந்து நண்பரை விட்டுக் கொடுக்காமல் அவரிடம் சண்டைப்போடுகிறீர்கள்.

இதையும் படியுங்கள்:
பொய் சொல்வதை ஏன் தவிர்க்க வேண்டும்?
Motivation Image

உண்மையில் இதற்கு பெயர்தான் பாசம். உங்கள் நண்பர் உங்களுடன் சண்டைப் போட்டு நம்பிக்கையை உடைத்துவிட்டார் என்றாலும், அவர் மீது உள்ள பாசம் அப்படியே இருக்கும். பேசவில்லை என்றாலும் உறவு அப்படியே இருக்கும். நேரில் பார்க்கும்போது அவரைக் கட்டி அணைத்து அழத்தான் தோன்றும்.

ஒருவர் மீது நம்பிக்கை உடையும்போது பாசம் உடையாது. ஆனால் பாசம் இல்லாமல் போனால் நிச்சயம் நம்பிக்கை உடைந்துபோய் வெறுப்பை உண்டாக்கும்.

ஆகையால் ஒரு நபரிடமோ அல்லது அந்த உறவின் மீதோ பாசத்தை வையுங்கள்! உறவு என்றும் நிலைத்து நிற்கும்!

logo
Kalki Online
kalkionline.com