'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது' என்பது நாம் இன்றளவும் பயன்படுத்தும் வழக்குமொழி. போஜனம் (உணவு) கிடைக்குமோ, இல்லையோ பொய் சொன்னால் நம்முடைய நம்பகத்தன்மை காலாவதியாகிவிடும். இதனால் குடும்பம், பணியிடம் மற்றும் பல இடங்களில் மதிப்பிழந்து போய், உண்மையிலேயே போஜனத்திற்கு துன்பப்பட வேண்டி வரும். எனவே, பொய் சொல்வதை ஏன் தவிர்க்க வேண்டும் என்ற ஏழு காரணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
1. உண்மையே வீரம்: மிகவும் சிக்கலான பொய்யை சொல்வதை விட, மிகவும் மோசமான உண்மையை சொல்வது வீரமாகக் கருதப்படும். உறுதியான மற்றும் புத்திசாலியான மனிதர்களின் முன்நிறுத்தப்படும் முதன்மையான விஷயம் உண்மை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
2. நம்பிக்கையை தகர்த்துவிடும்: 'நீ என்னிடம் பொய் சொன்னால் நான் வருத்தமடைகிறேன். இப்பொழுதிலிருந்து நான் உன்னை நம்ப மாட்டேன்' என்று பிரெடெரிக் நீட்சே ஒருமுறை சொல்லியிருந்தார். பொய்யர்களை யாரும் நம்புவதில்லை என்பதையே இந்த வார்த்தைகள் குறிப்பிடுகின்றன. எனவே, பொய் சொல்பவர்கள் தங்களுடைய அதிகாரத்தை இழந்து, மதிப்பை இழந்து விடுவார்கள் என்பது திண்ணம்.
3. குறைந்த மன அழுத்தம்: நீங்கள் உண்மை பேசும்போது, உங்களுடைய மனம் மிகவும் இலேசானதாகவும் மற்றும் சோர்வடையாமலும் இருக்கும். ஏனெனில், நீங்கள் சொல்லிய பொய் வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் உங்களிடம் இல்லை. மேலும், உண்மையை சொல்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, சிந்தனை சக்தி கூர்மையாகி விடுகிறது. எனவே, உங்களுடைய மன அழுத்தத்தின் அளவை குறைக்க விரும்பினால், உண்மையை உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக வைத்திருங்கள். மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழும் மனிதர்களின் உடலில் மட்டுமே 'மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள்' உற்பத்தியாகும். எனவே, உண்மையை சொல்வது உங்களை மிகவும் ஓய்வாகவும், அமைதியாகவும் வைத்திருக்கும்.
4. மனப் போராட்டங்கள்: பொய் சொல்வதால் உங்களுக்குள் பல்வேறு விதமான மனப் போராட்டங்களும், அழுத்தமும் உருவாவதால், உங்களுடைய எண்ணங்களை அவை பெரிதும் பாதித்து, மேலும் பல பிரச்னைகளை வரவழைக்கின்றன. மேலும், பொய் சொல்லும்போது, ஒரு பொய்யை காப்பாற்றும் பொருட்டாக, அடுக்கடுக்காக மேலும் பல பொய்களை சொல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதன் மூலம் மனப்போராட்டங்கள் உருவாகி, எதையுமே செய்ய முடியாத நிலைக்கு நாம் மாறி விடுகிறோம்.
5. பெரிய பிரச்னைக்கான அறிகுறி பொய்: எல்லா நேரங்களிலும் பொய் சொல்லும் மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த மனிதர்கள், சாதாரணமாக பொய் சொல்லத் தூண்டப்படும் நிலைக்கு ஆளாகி, இதனை ஒரு பழக்கமாக மாற்றிக்கொண்டிருப்பார்கள். இந்த வகையில் நீங்கள் பிரச்னைகளை எதிர்கொண்டால், வல்லுநர்களின் உதவியை நாடிச் செல்லுங்கள். இதன் மூலம், உளவியல் ரீதியாக பொய் சொல்வதற்கு நீங்கள் அடிமையாகும் நிலையிலிருந்து, உங்களை விலகி இருக்கச் செய்ய முடியும்.
6. திருப்தியற்ற வாழ்க்கை: பொய்யர்கள் தங்களுக்காகவே 'வெற்றிகரமான' வாழ்க்கை வரலாறு ஒன்றை உருவாக்குவதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், தங்களுக்குள் திருப்தியில்லாத போலி வாழ்க்கையை வாழ்வதை அவர்கள் உணர்ந்திருப்பதில்லை. அவர்களுடைய வெற்றிகள் எல்லாம் ஒன்றுமற்ற விஷயங்கள் என்பதை உணர்ந்து, உண்மையான விஷயங்களில், வெற்றிகளில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் பொய் சொல்லுவதை விட்டு விடும்போது, நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கான கதவு உடனடியாக திறக்கும்.
7. பொய் பிரச்னையை தீர்க்காது: அண்டப்புளுகுகளை அள்ளி விட்டு விட்டால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்து விடுமா என்ன? எந்தவொரு சூழலிலும், நேர்மைதான் சிறந்த கொள்கை என்பதை மறந்து விடாதீர்கள். எனவே, பொய் சொல்லும் மோசமான விளையாட்டை நிறுத்தி விட்டு, உண்மையை சொல்லத் தொடங்குங்கள். உங்களுடைய செயல்களின் விளைவை துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். பொய் சொல்லுவது மிகவும் ஆபத்தானது மற்றும் அழிவைத் தரக் கூடியது. எனவே, இந்த பழக்கத்தை நிறுத்த உங்களால் முடிந்ததை செய்து மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் வாழத் தொடங்குங்கள்.