நாமாக தேடிச்சென்று யாரிடமும் சண்டையிட வேண்டாம். ஆனால், நம்மைத் தேடிவந்து சீண்டுபவர் களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஒருவரால் வாழ்க்கையில் எந்நேரமும் அகிம்சையை கடைப்பிடிக்க முடியுமா? இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
அந்த ஊர் எல்லையில் ஒரு நாய் வாழ்ந்து வந்தது. அந்த பக்கமாக வரும் மக்களை அந்த நாய் தொடர்ந்து கடித்துக் கொண்டு இருந்தது. இதனால் அந்த ஊர் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு வயதான துறவி வந்தார். அவருக்கு எல்லா விலங்கிடமும் பேசத் தெரியும். இப்போது துறவியை பார்த்து அந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த நாயால் ஏற்படும் பிரச்னையை சொல்கிறார்கள்.
இதைக்கேட்ட துறவி அந்த நாயிடம், 'இதற்கு பிறகு நீ யாரையும் கடிக்கவே கூடாது' என்று சொல்லிவிட்டு அந்த ஊரைவிட்டு கிளம்பி சென்று விடுகிறார். அந்த துறவி சொன்னதிலிருந்து நாய் யாரையும் கடிப்பதில்லை.
ஆனால், கொஞ்ச நாட்களிலேயே மக்களுக்கு நாயின் மீது உள்ள பயம் போய்விட்டது. இதற்கு மேல் அந்த நாய் நாம் என்ன செய்தாலும் கடிக்காது என்று நினைத்து அந்த நாயை அடித்து துன்புறுத்த ஆரம்பித்தனர்.
பல மாதங்கள் கழித்து அந்த துறவி மறுபடியும் அந்த ஊருக்கு வருகிறார். அப்போது ஊர் எல்லை அந்த நாய் அடிப்பட்டு பரிதாப நிலையில் இருப்பதைப் பார்க்கிறார், ‘என்ன ஆனது?’ என்று துறவி கேட்கிறார். அதற்கு நாய் நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்கிறது. இதைக் கேட்ட துறவி அந்த நாயிடம் என்ன சொன்னார் தெரியும்.
'நான் உன்னை யாரையும் தேவையில்லாமல் கடிக்க வேண்டாம் என்றுதான் சொன்னேனே தவிர, யாராவது உன்னை துன்புறுத்தினாலும் கடிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறவில்லையே?' என்றார்.
இந்த கதையில் வந்தது போலத்தான் நாமும் யாரையும் துன்புறுத்தக்கூடாது. நம்மையும் யாரும் துன்புறுத்த அனுமதிக்கக்கூடாது. அகிம்சையை கடைப்பிடிப்பது தவறல்ல. எந்நேரமும் அமைதியாக இருப்பதுதான் தவறு. இதைப் புரிந்துக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.