நாம் பேசும் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு. வார்த்தைகளில் நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை என்பது இருக்கிறது. நல்ல வார்த்தைகளை பேசும் போது பாசிட்டிவிட்டியும், கெட்ட வார்த்தைகளை பேசும் போது நெகட்டிவிட்டியையும் உருவாக்குகிறது. எனவே, எப்போதும் நல்ல வார்த்தைகளை பயன்படுத்துவது நன்மையை தரும். இதைப்பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரின் வழியாக முனிவர் ஒருவர் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அவரிடம் வந்து, தனக்கு உடல்நலம் சரியில்லாத குழந்தை இருப்பதாகவும், அந்த குழந்தையை குணப்படுத்தி தரும்படியும் முனிவரிடம் கேட்கிறார்.
இதைக்கேட்ட முனிவர் குழந்தையை தூக்கிக்கொண்டு வரும்படிக்கூறி மரத்தடியில் அமர்ந்துக்கொள்கிறார். அதற்குள் கிராமத்தில் இந்த விஷயம் பரவி கொஞ்சம் கூட்டம் கூடி விடுகிறது. அந்த பெண்ணும் தன் வீட்டிற்குச் சென்று குழந்தையை தூக்கி வருகிறார். முனிவர் பிரார்த்தனை செய்து குழந்தையை ஆசிர்வதிக்கிறார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், 'எத்தனை மருந்து, மாத்திரை கொடுத்தும் குணமாகாத இந்த குழந்தை உங்கள் பிரார்த்தனையால் மட்டும் குணமாகிவிடுமா?' என்று ஏளனமாக கேட்கிறார். உடனே முனிவர், 'உனக்கு இதைப்பற்றி என்ன தெரியும்? நீ ஒரு அறிவில்லாத முட்டாள்' என்று எல்லோர் முன்னிலையிலும் அந்த நபரை திட்டுகிறார்.
இப்படி பலபேர் முன்னிலையில் அவமானப் படுத்திவிட்டாரே? என்று கேள்வி கேட்டவரின் முகம் கோவத்தில் சிவக்கிறது. அந்த நபர் எப்படியாவது முனிவரை பதிலுக்கு மோசமான வார்த்தையில் திட்டி அவர் மனதைக் காயப்படுத்த வேண்டும் என்று நரநரவென்று பற்களைக் கடித்துக்கொண்டு நிற்கிறார்.
முனிவர் புன்னகைத்துக் கொண்டே அந்த நபரின் அருகில் வந்து, 'நான் சொன்ன வார்த்தைகளால் நீ கோபமாகவும், சூடாகவும் முடியுமென்றால், நான் சொல்லும் நல்ல வார்த்தைகளால் ஏன் அந்த குழந்தையின் பிரச்னை குணமாகாது என்று நினைக்கிறாய்?' என்று கேட்டார். அப்போது தான் அந்த நபருக்கு முனிவர் கூற வருவதன் பொருள் புரிந்தது.
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமையுண்டு. நல்லதை பேசினால் நிச்சயம் நல்லது நடக்கும் என்று முனிவர் கூறிவிட்டு செல்கிறார். நல்ல எண்ணங்களும், நல்ல வார்த்தைகளும் நம் வாழ்க்கையை அழகாக்கும். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.