பட்டாம்பூச்சியை பார்க்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றும்? எந்த கவலையும் இன்றி பலவண்ணங்களில் அழகழகாக பறந்து கொண்டிருக்கும் பட்டாம்பூச்சியின் அழகு நம் மனதை மயக்கும் அல்லவா? அத்தகைய பட்டாம்பூச்சியை வைத்து ஒரு குட்டி வாழ்க்கை தத்துவத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பட்டாம்பூச்சியை பார்க்கும்போது அதை பிடித்து நம் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எப்போதாவது உங்களுக்கு வந்ததுண்டா? அப்படி அந்த பட்டாம்பூச்சியை பிடிக்க அதன் பின் சென்றாலும் அதை பிடிக்கவே முடியாது. அது நம் கைகளில் சிக்காமல் நழுவிக் கொண்டே போகும். சிறுவயதில் நாம் இவ்வாறு முயற்சி செய்து பார்த்து களைத்துப் போயிருப்போம்.
அப்படி அலுத்துப்போன பிறகு நம் கவனத்தை வேறு எதுமேலாவது திருப்பி ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கும் போது அதே பட்டாம்பூச்சி நம் மீது தானாகவே வந்து அமரும். கவனித்ததுண்டா? நாம் துரத்தி சென்றும் பிடிக்க முடியாதது. இப்போது தானாகவே நம்மிடம் வருகிறது.
அதேபோலத்தான் சில நேரங்களில் நாம் எவ்வளவோ முயற்சி செய்தும் நம்முடைய 100% உழைப்பை போட்டும் சில விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கவில்லையே என்று தோன்றும். கடின உழைப்பிற்கான வெற்றி கிடைக்கும், உழைத்ததற்கான ஊதியம் கிடைக்கும் என்று சொல்வார்கள். சில நேரங்களில் நமக்கு பிடித்த விஷயமாகவே இருந்தாலும் அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு வாழ்க்கையின் பயணத்தை ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படி ரசித்துக் கொண்டு செல்லும்போது நாம் ஆசைப்பட்டது தானாகவே நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்ப்பாராத விதத்தில் நம்மிடம் வந்து சேரும்.
Mario Quintana என்பவர் கூறியது, ‘பட்டாம்பூச்சிகளை துரத்தி சென்று நேரத்தை வீணாக்காதீர்கள். ஒரு தோட்டம் அமையுங்கள், உங்களைத் தேடி பட்டாம்பூச்சிகள் வரும்’ என்று கூறியிருக்கிறார். இதுவும் நல்லாதான் இருக்கு என்று தோன்றியது.
Kaleidoscope என்ற விளையாட்டு பொருளை சிறுவயதில் வைத்து விளையாடியிருப்போம். அதன் வழியாக பார்க்கும் போது, ஒவ்வொரு முறை அதை திருப்பும் போதும் ஒவ்வொரு டிசைன் தெரியும். ஒருமுறை வந்த டிசைன் திரும்ப வராது. அதுபோலத்தான் ஒரு பிரச்சனையை தீர்க்க அதற்கு ஒரு தீர்வுதான் இருக்க வேண்டும் என்றில்லை. ஒரு பிரச்சனைக்கு ஆயிரம் தீர்வுகள் இருக்கலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசிக்கலாமில்லையா? மேலே கூறியக் கருத்துக்களை போலவே!
எந்த கருத்தாக இருந்தாலும் அதன் மையப்பொருள் ரிலாக்ஸாக இருங்கள். எல்லாம் தானாகவே கைக்கூடி வரும் என்பதுதான். நீங்களும் இதை முயற்சித்துப் பாருங்களேன்.