
உண்மையில் இந்தியா என்பது பட்டினியால் வாழும் மக்கள் நிறைந்த நாடு என்று கேள்விப்படுகிறார்.
இந்தியாவில் விமான வழிச் சேவை பயன்படுத்துவோர்களின் எணணிக்கை வெறும் 1% சதவிகிதம் தான் என்றும் கேள்விப்படுகிறார்.
அவரது மனம் என்னவோ செய்கிறது. யோசனைகள் பல விதமாக வந்து போகிறது. மனதை பிசைகிறார். மாத்தியோசி... மாத்தியோசி... மாத்தியோசித்தார்... ஜி.ஆர்.கோபிநாத்.
“உண்மையில் இந்தியா என்பது பட்டினியால் வாழும் மக்கள் நிறைந்த நாடு அல்ல... இது பட்டினியால் வாடும் நுகர்வோர்கள் நிறைந்த நாடு“ என்று யோசித்தார். இந்தியாவின் வான் வழி சேவையை பயன்படுத்தாத 99 % சதவிகித மக்களை தன் வாடிக்கையாளராக கருதினார். விண்ணைத் தொட்டது “மக்கள் விமானமாக“ ஏர்டெக்கான்! இந்திய உள்நாட்டு விமான நிறுவனம்.
மாற்றங்கள் அவர் வாழ்க்கையில் எப்படி நடந்தன என்பதை அறிந்து கொள்வோம்.
கர்நாடக மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் உள்ள கொரூர் என்ற சின்னஞ் சிறிய கிராமத்தில், ஒரு மத்தியதரக் குடும்பத்தில் பிறந்தவர் ஜி.ஆர்.கோபிநாத். அவரது தந்தை ஒரு ஆசிரியர் என்பதால், துவக்க கல்வியை வீட்டிலேயே தான் பெற்றார்.
பிறகு, பள்ளிக்கூடத்தில் நேரிடையாக 5 ஆம் வகுப்பு சேர்ந்தார். பின்னர் சைனிக் பள்ளிக்கூடத்தில் சேர்வதற்காக தேர்வு எழுதினார். வெற்றியும் பெற்றார். இது தான் அவரது முதல் வெற்றி. அப்போது அவருக்கு வயது 11. பின்பு டிஃபன்ஸ் அகாடெமி, இந்திய ராணுவம் என அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பறந்தார். ராணுவப் பணி சலிப்பை ஏற்படுத்தியதால், நண்பருடன் இணைந்து பிரபலங்களுக்கு வாடகைக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்க எண்ணினார். டெக்கான் ஏவியேஷன் உருவானது.
தன்னுடைய ஹெலிகாப்டரில் பறக்கும் போது, பாறைகளுக்கு மேலேயிருந்து எதிரொலி வருவது கேட்டு பரவசம் அடைந்தார். இன்னும் கீழே இறக்கமாக செல்ல விமானியிடம் உத்தரவு போட்டார். ஹெலிகாப்டர் இன்னும் கீழிறங்கி பறந்து கொண்டிருந்தது. அப்போது ஊரின் நடுவே டீவி ஆண்டெனாக்கள் ஆங்காங்கே இருப்பதைக் கண்டதும், எப்பவோ நண்பர் சொன்னது நினைவுக்கு வந்தது. “உண்மையில் இந்தியா என்பது பட்டினியால் வாழும் மக்கள் நிறைந்த நாடு“ மனதில் யோசனைகள்... திடீரென்று பொறி தட்டியது. மாத்தி யோசிக்கலானார்.
“உண்மையில் இந்தியா என்பது பட்டினியால் வாழும் மக்கள் நிறைந்த நாடு அல்ல... இது பட்டினியால் வாடும் நுகர்வோர்கள் நிறைந்த நாடு“ என்பதை கண்டடைந்தார்.
“இந்தியாவில் விமான வழிச் சேவை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை வெறும் 1% சதவிகிதம் தான்“ எப்பவோ பேசிய நண்பரின் உரையாடல் காதில் ஒலிக்கிறது. ‘Necessity is the mother of invention’ தேவைதான் கண்டுபிடிப்பின் தாய் எனும் வாசகத்திற்கு ஏற்ப, இந்தியாவின் வான் வழிச் சேவையை பயன்படுத்தாத 99 % சதவிகித மக்கள் தான், தமது வாடிக்கையாளர் என்பதை கண்டடைந்தார்.
சாமானிய இந்தியனும் வான் வழியில் பறக்க வேண்டும். பலருக்கும் விமானப் பயணத்தை சாத்தியமாக்க வேண்டும். அதற்கான வழிகளை யோசிக்கத் தொடங்கினார்.
15 வருட பழமையான விமானம் ஒன்றை வாங்கி பறக்க விட்டார். விமானப் பயணம் ஒரு கனவு என்றிருந்தவர்களும் பறக்க வழி அமைத்தார்.
குறைந்த கட்டணத்தில் விமானப் பயணங்களை வழங்கும் ஒரு வான் வழிப் புரட்சியை ஏற்படுத்தினார். இந்திய உள்நாட்டு விமான நிறுவனமாக ஏர் டெக்கான் விமான நிறுவனம், குஜராத்தில் உள்ள அகமதாபாத்திலிருந்து இயங்கும் பிராந்திய விமான நிறுவனமாக உயர்ந்தது.
எதெல்லாம் மற்ற விமான நிறுவனங்களுக்கு செலவாக இருக்கிறதோ, அதெல்லாம் ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு வரவாக மாற்றி அமைத்தார், ஜி.ஆர். கோபிநாத்.
இந்தியாவின் பல பகுதிகளுக்கு ஏர் டெக்கான் விமானங்கள் பறந்தன. 500 விமான நிலையங்களை விரிவான பட்டய சேவைகளுடன் இணைக்கும் திட்டத்திலும் ஈடுபட்டு வானில் பறந்து திரிந்தன.
இறுதியாக கோபிநாத், ஆல்ஃப்ரட் டென்னிஸனின் கவிதையை மேற்கோள் காட்டுகிறார்.
“பயணத்தில் இருந்த நான் ஓய்வு பெற முடியாது. வாழ்க்கையை கடைசி சொட்டுவரை பருகுவேன். தேடல்... தாகம்... கண்டடைதல்... விட்டுக்கொடுக்காமை, அதுவே நான், என் பயணம் முடிவுறாது“
மாத்தியோசியுங்கள்... உங்கள் வாழ்க்கையிலும் மாற்றங்கள் நிகழும்.