
சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். பலரும் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை எப்படி சரி செய்யலாம் என்று சாணக்கியர் வழி கூறியுள்ளார்.
உலகத்தில் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்னையே, பிரச்னைகளில் இருந்து எப்படி மீள்வது என்பதுதான்.
பிரச்னைகள் இல்லாத ஆளே இருக்கமாட்டார்கள். ஆனால் பிரச்னைகள் பெரும்பாலும் ஒருவர் மூலமாகதான் வரும். இதனால் சாணக்கியர் சில நபர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது என்று கூறுகிறார்.
ஒரு முட்டாள் நபருக்கு ஒருபோதும் அறிவுரைக் கொடுக்கக்கூடாது. இதைச் செய்வதில் எந்தப் பலனும் இல்லை. மாறாக, இழப்புகளை தான் சந்திக்க வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு, பறவை மற்றும் குரங்கின் கதையைக் கூறலாம். இதில் முட்டாள் குரங்குக்கு வீடு கட்ட அறிவுரை கூறியதன் மூலம் பறவை தனது கூட்டை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல், ஒரு முட்டாள் நபருக்கு சரியான ஆலோசனை வழங்குவதன் மூலம், அறிவுரை கூறிய நபர் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
வாழ்க்கையில், பொல்லாத எண்ணம் கொண்டவரை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது. அத்தகையோர் எந்த நேரத்திலும் உங்களை ஏமாற்றலாம். மேலும் இவர்கள் உங்கள் சொத்தை, பணத்தை கைப்பற்றி ஏமாற்றுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உயிருக்கே அச்சுறுத்தலாகவும் மாறலாம். அத்தகைய மனிதர்ககளுடன் நட்பு வைத்துக் கொள்வதன் மூலம், துக்கத்தைத் தவிர வேறு எதையும் பெற முடியாது.
சாணக்ய நிதி கூறுகையில், செல்வத்தை அழித்தவர்களை, அதாவது திவாலானவர்களை, நம்பி கடன் கொடுக்கக் கூடாது. அத்தகையவர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பணத்தை சரியாக பயன்படுத்த தெரியாமல், இருப்பவர்களுக்கு கடன் கொடுப்பதால், உங்களுக்கு தான் நஷ்டம் ஏற்படும்.
எப்போதும் சோகமாகவோ அல்லது மகிழ்ச்சியற்றவராகவோ இருக்கும் ஒருவரின் சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும் என்று சாணக்யர் கூறுகிறார். அத்தகையவர்களுக்கு அவநம்பிக்கையான சிந்தனை இருக்கும். அவர்களுடன் வாழும் மக்களும் இப்படித்தான் ஆகிவிடுவார்கள். சோகத்தை வெல்வது தெரியாமல் போய் விடும். இதனால், வெற்றி அவர்களை விட்டு ஓடத் தொடங்குகிறது.