
சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். பலரும் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர். மகிழ்ச்சிக்கான வழிகள் குறித்து அவர் அப்படி என்னதான் சொன்னார் பார்ப்போமா?
வாழ்க்கையில் பலரும் மகிழ்ச்சியை தேடி தான் ஓடி கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஏதோ ஒரு வழியில் நாம் தினசரி பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். பணத்தாலோ, சக மக்களாலோ, வேலையினாலோ கவலையுற்று வருகிறோம். ஒரு நாளாவது நிம்மதியாக இருக்கணும், மகிழ்ச்சியா இருக்கணும் என்ற வார்த்தையை பலர் கூறி கேட்டிருப்போம். அப்படி நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன வழி என்பது குறித்து சாணக்கியர் கூறியுள்ளார்.
'வாழ்க்கையில் நீங்கள் எப்படி இருந்தால் சந்தோஷமா இருக்க முடியும்? என்று நிச்சயம் உங்கள் மனதுக்கு தெரியும். அதனை சரியா பின்தொடர்ந்தாலே வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்' என்கின்றார்.
வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க ஊரோடு ஒத்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருப்பது மகிழ்சியை அழித்துவிடும்.
'காட்டில், நேராக வளர்ந்து நிற்கும் மரத்தைத் தான் முதலில் வெட்டுவார்கள். எனவே சில விடயங்கள் உங்களின் விருப்படி நடக்க வேண்டும் என்றால் உங்களின் பிடிவாத குணத்தை விட்டுக்கொடுத்தால் தான் சாத்தியமாகும்' என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
திருமணத்தின் பின்னர் கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி வேண்டும் என்றால், கணவன் மனைவி சிறந்த நண்பர் போல் இருக்கவும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
பிறப்பிலேயே பணக்காரனாக இருந்தாலும், நிச்சயம் கல்வி கற்க வேண்டும் என்கின்றார் சாணக்கியர். செல்வம் இருக்கின்றதே என கல்வியில் அக்கறை அற்றவனாக இருப்பது வாழ்ககையை துன்பம் நிறைந்ததாக மாற்றிவிடும். அனைத்தையும் இழந்துவிட்டோம் என்ற நிலையில் கூட, கல்வி என்ற ஒரு விடயத்தை கொண்டு அனைத்தையும் மீட்டெடுக்க முடியும். வாழ்வில் உண்மையான மகிழ்சியையும் பாதுபாப்பையும் கல்வியால் மட்டுமே கொடுக்க முடியும்.
வாழ்க்கையில் கோபத்தை விடக் கொடிய நெருப்பு வேறு இருக்க முடியாது. இந்த கோபத்தை கட்டுப்படுத்த தெரிந்தவர் வாழ்வில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.