
ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு அனுபவம் கிட்டுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் உலகையே மெச்சி வணங்கும் எழுத்தாளனாக கட்டாயம் வர முடியாது என்பதைப் போன்று நினைப்பவர்கள், எச்.ஜி. வெல்ஸின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் படித்தால் தங்களுடைய எண்ணங்களைக் கட்டாயம் மாற்றிக்கொண்டு விடுவார்கள்.
எச். ஜி. வெல்ஸ் 1665-ஆம் ஆண்டில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பலதரப்பட்ட சாமான்களை விற்கும் ஒரு பெட்டிக்கடையை நடத்தி வந்தார். அவருக்கு கிடைக்கும் வரும்படியிலிருந்து குடும்பத்தை நடத்தவே அவர் கஷ்டப்பட்டார்.
அவருக்கு குழந்தைகள் நிறைய பிறந்துவிட்டதினால் அவருடைய வீட்டில் ஏற்கனவே குடிகொண்டிருந்த வறுமையின் அளவு பல மடங்குகள் பெருகிவிட்டன. அவருடைய தாய், குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்க சில வீடுகளில் வேலைக்காரியாக வேலை பார்த்துவந்தார்.
எச். ஜி. வெல்ஸ் சிறு பையனாக இருக்கும்போது ஒரு பணக்கார வாலிபன் அவரை மேலே தூக்கிப் போட்டு பிடிக்காமல் கீழே விழும்படி விட்டுவிட்டான். எக்கச்சக்கமாக அடிபட்டு வெல்ஸினுடைய கால் எலும்பு முறிந்துவிட்டது.
அந்த வாலிபனின் தாய் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்து, ருசி மிகுந்த சத்துள்ள உணவையும், மேலும் படிப்பதற்காக பல நல்ல புத்தகங்களையும் கொண்டு வந்து கொடுத்தார். வெல்ஸ் அந்த புத்தகங்களை ஆர்வத்துடன் பலமுறைகள் படித்து முடித்தார்.
அப்போதே ஒரு சிறந்த எழுத்தாளராக வரவேண்டுமென்ற ஆசை அந்த பிஞ்சு உள்ளத்தில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டது. பல வருடங்கள் கழித்து வெல்ஸ் புகழ்பெற்ற எழுத்தாளனாக மாறிய பின்பு இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து கால் எலும்பு உடைந்ததினால்தான் புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்து எழுத்தாளனாக வரவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.
வீட்டில் படிப்பதற்கான பொருளாதார வசதியில்லாததினால் அவருக்கு 14 வயது நடந்து கொணடிருக்கும்போது படிப்பை நிறுத்திவிட்டு வேலையில் சேர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவருடைய தந்தை வேலை ஏதும் செய்ய முடியாதபடி நோயாளியாக மாறி படுக்கையில் படுத்துவிட்டார்.
வெல்ஸ் வேலை பார்த்துக்கொண்டே இரவு பகல் என்று அனுப்பிய அனைத்தும் பிரசுரமாகாமல் திரும்பி வந்தன. எழுத்துத் துறையில் ஒருவருட உழைப்பிறகு அவருக்கு ஒரே ஒரு பவுன் வரும்படிதான் கிடைத்தது.
அப்போதும் அவர் எழுதுவதை விட்டுவிடவில்லை. அவருடைய உள்ளத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் அலைமோதின. கற்பனை கொடிகட்டிப் புறந்தது. சமூகத்தில் காணப்படும் குறைகளை விளக்கி, பல சமூக நாவல்களை எழுதினார் .மேலும் கட்டுப்பாடில்லாமல் அசுர வேகத்தில் வளர்ந்துவரும் விஞ்ஞானத்தினால் ஏற்படும் தீமைகளை விளக்கி மக்களுடைய மனங்களில் பதியும்படி பல புத்தகங்களை எழுதினார்.
ஆகாயத்தில் மனிதன் பறப்பதற்கு முயற்சிகள் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும் சமயத்தில் 'வாயு மண்டலத்தில் சண்டை' என்ற சுவையான புத்தகத்தை எழுதினார்.
ராக்கெட் கண்டுபிடிப்பதற்கு முன்பே சந்திரனுக்குச் சென்று அங்கு இறங்கிய மனிதர்களின் அனுபவங்களை கற்பனையில் கண்டு அவைகளை விவரித்து ஒரு புத்தகம் எழுதினார். நம்முடைய பிரபஞ்சத்தில் கோடானுகோடி உலகங்கள் இருக்கின்றன. அவைகள் எதிர்காலத்தில் ஒருநாள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளக்கூடும் என்று கருதினார்.
அதன் அடிப்படையில் உலகங்களுக்கிடையே யுத்தம்' என்ற புத்தகம் அவருடைய கற்பனையில் பிறந்தது. அவர் கற்பனையில் கண்டு எழுதிய நிகழ்ச்சிகளில் பல பிற்காலத்தில் உண்மை நிகழ்ச்சிகளாக நடந்திருக்கின்றன. வெல்ஸின் வாழ்க்கைச் சரித்திரம் மனித இனத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சிறிதுகூட சந்தேகம் இல்லை.
நம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் வெற்றிகாணலாம்.