
எதிர்மறை மனிதர்களுடன் சில நிமிடங்கள் பேசினாலே பலமணி நேரம் சித்ரவதை அனுபவித்த உணர்வு தோன்றும். அவர்கள் சென்ற பின்னும் அவர்கள் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீள நீண்ட நேரம் ஆகும்.
தவிர்க்க 5 வழிகள்
நகைச்சுவையாக பேசுங்கள்.
அவர்கள் ஏதாவது வம்பு பேசினாலோ, எதிர்மறையாகப் பேசினாலோ, சாமர்த்தியமாக அந்த விஷயத்துக்கு திசை திருப்பி விடுங்கள். எதிர்மறையாகப் பேசினால் சமீபத்தில் டி.வியில் பார்த்த காமெடி, பத்திரிகையில் படித்த ஜோக் என ஏதாவது சொல்லி அவர்கள் சொல்ல வந்ததை மறக்க வைத்துவிடுங்கள்.
தனியாக உரையாடாதீர்கள்.
முடிந்தவரை அவர்களுடன் தனியாக உரையாடுவதை தவிருங்கள். நண்பர்கள் கூட்டத்திலோ, அலுவலகத்தில் மற்ற ஊழியர்களுடன் சேர்த்தோ அவரை சந்தித்தால், அவர்களால் எதிர்மறை உணர்வுகளை விதைக்க முடியாது.
சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது அவர்கள் சோகத்தை நிரப்ப முயற்சிப்பார்கள். உங்கள் காபி தம்ளரில் தவறுதலாக தண்ணீர் ஊற்றினால் அதைக் குடிக்க முடியுமா? அதைக் கீழே ஊற்றிவிட்டு வேறு குடிப்போம் அல்லவா?
அவர்கள் சொன்ன வார்த்தையை தூக்கி எறிந்துவிட்டு மகிழ்ச்சிக்கு தாவுங்கள். இதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளாாதீர்கள்.
சுருக்கமாக பேசுங்கள்.
அவர்கள் உங்கள் நெருங்கிய நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ, அலுவலகத்தில் பணிபுரிவர் களாகவோ இருக்கலாம். அவர்களை தினம் தினமோ அடிக்கடியோ பார்க்க வேண்டி இருக்கும். பேசவேண்டி நேரும்போது, பேச்சை உரையாடல்களை, பேசுவதை சுருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். பரபரப்பான வேலையில் நீங்கள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துங்கள். அவர்களால் பேச முடியாமல் போய்விடும்.
தவிர்த்து விடுங்கள்.
இவ்வளவுக்கும் பிறகும் அவர்களை சமாளிக்க முடியவில்லையா? வேறு வழியில்லை அவர்களைத் தவிர்த்து விடுங்கள். தினமும் சில நிமிடங்கள் பேசுவதை, மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை என மாற்றுங்கள். போனில் பேசுவதும் ஒருமுறை என மாறினால் அவர்களை தவிர்க்கிறீர்கள் என்பதை அவர் புரிந்து கொள்வார்.
உங்கள் உறவு முக்கியம் என்றால், அவர் ஒருவேளை மாறக்கூடும். எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வதை தவிர்ப்பதே நல்லது.