நூல் என்ற ஏணியில் ஏறுங்கள்!

Climb the ladder of thread!
Reading Books
Published on

கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.

மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம்.

மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.

இப்படி நம்முள்ளும் நமது வாழ்வினுள்ளும் நமது சமூகத்தினுள்ளும் பின்னிப் பிணைந்திருப்பவை நூல்கள்.

ஒரு மனிதனின் நல்லறிவானது, அவர் படித்து மகிழும் நல்ல நூல்களைப் பொருத்து அமையும்.

மனிதனின் அறிவுத் தேடலை நிறைவடையச் செய்பவை நூல்கள். மனிதனை அறிவில் சிறந்தவனாகவும் ஆளுமை நிறைந்தவனாகவும் மாற்றுவதில் நூல்களின் பங்கு அளப்பரியது. ஒவ்வொரு நூலும் மனிதனை விசாலாமாக்குகிறது. வாசிப்பு அவனுக்குள் ஒரு பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கார்ல் மார்க்ஸ், தனது 'மூலதனம்' எனும் நூல் உருவாக்கத்திற்காக பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை நூலகத்திலேயே கழித்தார்.

மாவீரன் அலெக்ஸாண்டர் போர்க்களத்திற்குக்கூட ஹோமருடைய காவியங்களை எடுத்துச் சென்று படித்தார் என்று சொல்வார்கள்.

அலெக்ஸாண்டர் ஒவ்வொரு நாடாக வெற்றி கண்டு அந்தச் செய்தியை தனது குருவான   அரிஸ்டாட்டிலுக்கு தெரிவித்தபோது, நாடு உனக்கு முக்கியமாக இருக்கலாம். அந்த நாட்டில் உள்ள அறிஞர்கள் எழுதிய ஏடுகள் எனக்கு முக்கியம் அவற்றை எனக்கு அனுப்பி வை என்று கேட்டாராம். அவ்விதமே அலெக்ஸாண்டரும் அனுப்பி வைத்தாராம்.

மில்டன் ஐந்து ஆண்டுக் காலம் கிரேக்க காவியங்களைப் படித்துக் குறிப்பெடுத்தார். பின்பு சொர்க்க இழப்பு (பாரடைஸ் லாஸ்ட்) எனும் அழியாத காவியத்தைப் படைத்தார்.

அக்பர் தன்னுடைய நூல்நிலையத்தில் 20000 கையெழுத்துப்பிரதிகள் கொண்ட பல்வேறு நூல்களைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். ஐசக் நியூட்டன் இளமையில் மாடு மேய்க்கச் சென்றபோது, அவை புல்மேயும்போது, தான் எடுத்துச் சென்ற புத்தகங்களைப் படிப்பார்.

இதையும் படியுங்கள்:
வெற்றியின் மொழி மெளனம்!
Climb the ladder of thread!

ஜான் ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்ற நூல் தான் காந்தியடிகளின் வாழ்வைப் புரட்டிப் போட்டது.

பகத்சிங்கை தூக்கில் போடும் நேரம் நெருங்கியபோது, லெனின் எழுதிய 'அரசும் புரட்சியும்' என்ற நூலின் கடைசி அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருந்தார். காவல் அதிகாரிகளிடம், ஐந்து நிமிடங் கள் அனுமதி வாங்கி, அந்த அத்தியாயத்தையும் படித்து முடித்துவிட்டு, அந்த நூலை ஒழுங்காக மூடி வைத்துவிட்டுத்தான் தூக்கு மேடைக்குச் சென்றார்.

ஒரு மனிதன் சிறந்தவனாக உருவாகவும் முன்னேற்ற மடையவும் முதலில் புத்தகங்களை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தகம் படிக்காமல் என்னால் தூங்கவே முடியாது என்று ஓர் அறிஞர் கூறியிருக்கிறார். தமக்கு அத்தனை தீவிர மனப்பான்மை வராவிட்டாலும் புத்தகங்களைப் படிப்பது அவசியம் என்ற மனப்பான்மை இருந்தாலே போதுமானது. நூல்களைக் கால இயந்திரம் என்றே கூறலாம்

நூல் எனும் ஏணி, நமக்காக காத்திருக்க, நாமும் ஏறத் தயாராகலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com