மௌனம் 'காதல் மொழி' என்கிறார்கள். உண்மையில் அது 'வெற்றிக்கான அடிப்படைச் சூத்திரம்'. வாழ்க்கையில் அசாதாரணமாக சக்தியை வெளிப்படுத்தியவர்கள் மௌனத்தையே நெறியாகக் கடைப்பிடித்து ஜெயித்திருக்கிறார்கள். மௌனம், சாதனையாளர்களுக்கு ஓர் ஆயுதம், மௌனம், மென்மையாய் தோற்றமளிக்கும் ஆனால் உண்மையில் அது வலிமையில் வெளிப்பாடு.
இதற்கு சரியான எடுத்துக்காட்டு மகான் அரவிந்தர். 1908 மே 5லிருந்து 1909 மே 6 வரை அலிப்பூரில் 9 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட தனிச்சிறையில் அடைக்கப்பட்டவர் அரவிந்தர். வேறு வழியின்றி, அவரின் பிரார்த்தனையும், தியானமும் அவரை மெல்ல மௌனத்தை நோக்கிச் செல்ல வைத்தது. அவர் கடைப்பிடித்த மௌனம் அவருக்குள்ளேயே மாற்றத்தை உருவாக்கியது.
அந்த மாற்றத்தின் உச்சமே அவர் பெற்ற இறைத்தன்மை. 'பிரிட்டிஷ் அரசு கோபத்தின் ஒரே பயன், நான் இறைவனை அடைந்ததே' என்று அரவிந்தரே தன் வரலாற்றில் எழுதுகின்றார். மௌனம், அவரையும் அறியாமல் தெய்வீக நிலைக்கு உயர்த்தியது. மௌனத்தைக் கடைப்பிடித்தவர்கள் தனி மனிதர்களாக, புதியச் சரித்திரங்களை உருவாக்கி யிருக்கிறார்கள்.
ஆனால், சாதாரணமானவர்கள் 'புறம் பேசியே' அடுத்தவர்களை நோகடித்திருக்கின்றார்கள். சக்தியை இழந்திருக்கிறார்கள். தன்னைச் சுற்றியிருக்கும் சூழலை, அடுத்தவர்களின் மனோபாவங்களைப் புரிந்து கொள்ளாமல், தேவையின்றி பேசியே பலரும் 'கோமாளிகளாக' பார்க்கப்பட்டு வருகிறார்கள்.
எதைப் பற்றியும் யோசிக்காமல் பேசுபவர்கள் விரக்தி மனோ நிலைக்கு சென்று விடுவார்கள். வாழ்க்கையில் பிடிப்பின்றி, உற்சாகமின்றி விரக்தியில் இருப்பவர்களும், எதிர்காலம்
குறித்த கவலையிலிருப்பவர்களும் எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பொதுவாக, அதிகமாக, அவசரப்பட்டு பேசுபவர்களை யாரும் நம்ப மாட்டார்கள்.
இவர்களைச் சுற்றியிருப்பவர்கள் நம்பவும் மாட்டார்கள். அதிகமாகப் பேசிக்கொண்டே இருப்பவர்களுக்கு நம்பிக்கையான நண்பர்களும் இருக்க மாட்டார்கள். அளவிற்கதிகமாக எப்போதும் பேசிக் கொண்டே இருப்பவர்கள் அலட்சியப்படுத்தப்படுவார்கள்.
இந்த உண்மையை 'தொணத் தொணப்பவர்கள்' அறிதல் அவசியம். "இப்போது நான் பேசப்போகும் வார்த்தை அவசியம் தேவைதானா? என்ற உள்ளுணர்வோடும், பொறுப்புணர்வோடும், தொடங்கும் எந்தப் பேச்சும் மிகச் சரியாக அமையும். நோக்கமும் நிறைவேறும். உலகப் பிரசித்தி பெற்றவர்கள் இதைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
எதைப் பேசினாலும், காலம், சூழல், தேவை அறிந்து சுருக்கமாக பேசுவது வெற்றியாளர்களுக்கான அடையாளம். தேவையற்ற நேரங்களில் 'மௌனம்' தலைசிறந்த பதில். இன்று முழுவதும் இதைப் பற்றியே சிந்தியுங்கள். பேசுவதைக் குறைத்து மௌனம் காப்பதில் பயிற்சி செய்துப் பாருங்கள். வித்தியாசத்தை உணர முடியும். ஆளுமையும் உயரும். அறிவாற்றலும் கூர்மையாகும்.
'மௌனம்' பெரும் பாதுகாப்பு!