சுவைகளில், நகைச்சுவைக்கு தனி இடம் உண்டு. இந்த அழுத்தங்கள் மிக்க சூழ்நிலை வாழ்க்கையில் நகைச்சுவை ஒரு பெரிய stress buster என்றால், மிகையாகாது. இந்த விசிட்டிங் ப்ரொபசர் வகுப்புகளில் பாடங்கள் நடத்தும்பொழுது நகைச்சுவை கலந்து பாடங்களைப் புரியும்படி கூறுவதில் வல்லவர்.
வகுப்பு ஆரம்பித்ததும் அவர் படித்த ஒரு சிறு நிகழ்வைக் கூறினார்.
ஒரு அழகான நடிகைக்கு அயல் நாட்டு நீதிபதி முன்பு தோன்றி விளக்கம் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது அவரது விவாகரத்து தொடர்பான வழக்கு. இந்த நடிகைக்கு அந்த நாட்டு மொழி தெரியாது. ஆனால், அங்கு அந்த நாட்டு மொழி மட்டும்தான் கோர்ட் நடவடிக்கைகள் உட்பட உபயோகிக்கப்பட்டன.
அந்த நடிகையின் வக்கீல் முதலிலேயே கூறினார், "நீதிபதி கேட்கும் கேள்விக்கு நீங்கள் தலையை ஆட்டினால் போதும். அவர் கேட்பார் உங்களுக்கு விவாகரத்து வேண்டுமா? என்று. 'ஆம்!', என்பதற்கு ஒரு முறை தலை ஆட்டுங்கள்" என்று கூறியிருந்தார்.
வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி கேட்ட கேள்விக்கு இந்த நடிகை, ஒரு முறை தலையை ஆட்டினார். இருந்தும் இவருக்குச் சந்தேகம் நீதிபதி சரியாக கவனித்தாரா என்று. எதற்கும் இருக்கட்டும் என்று அழுத்தமாக மேலும் ஒரு முறை தலையை ஆட்டினார். கோர்ட் ரூமில் குழுமியிருந்தவர்கள் உற்சாமாக ஆரவாரித்தனர். நடிகைக்கோ குஷி தனக்கு டைவர்ஸ் கிடைத்துவிட்டதை அவர்கள் கொண்டாடுகிறார்கள் கைதட்டி வாழ்த்தி, என்று.
அவரது, வக்கீல் இவரிடம் ஓடி வந்தார். நடிகை பெருமையுடன் வினவினார், "எனக்கு, டைவர்ஸ் கிடைத்துவிட்டது அல்லவா, மிக்க நன்றி!", என்றார்.
அதற்கு அந்த வக்கீல், "கிடைத்துவிட்டது. ஆனால், இப்பொழுது நீங்கள் அந்த நீதிபதியின் மனைவி ஆகிவிட்டீர்கள்!" என்று முடித்தார்.
நடிகைக்கு தூக்கி வாரிப்போட்டது. வெளிரிய முகத்துடன் கேட்டார் வக்கீலிடம், "என்ன..?" என்றார்.
பதில் வந்தது அவரிடம் இருந்து.
"உங்களிடம் ஒரு முறைதானே தலை ஆட்டச் சொன்னேன். முதல் முறை நீதிபதி கேட்டது உங்களுக்கு டைவர்ஸ் வேண்டுமா?" என்று.
அவர் கொடுத்து விட்டு," என்னை மணந்துக்கொள்ள விருப்பமா?"என்றார்.
"அதற்கும் நீங்கள் தலை ஆட்டினீர்கள். அதுதான் நீங்கள் அவர் மனைவி ஆகிவிட்டீர்கள், இந்த நாட்டு சட்டப்படி", என்று முடித்தார்.
இதை கேட்ட மாணவர்கள், மாணவியர்கள் கைகளை தட்டி சிரித்து மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினர்.
அந்த விசிட்டிங் ப்ரொபசர் விளக்கினார். தேவைக்கு அதிகமாக ரியாக்ட் செய்தால் சாதகமாக முடிவு கிடைப்பதற்குப் பதிலாக பாதகமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கலாம்.
விவரம் தெரியாவிட்டால் அறிந்து, தெரிந்துக்கொண்டு அடுத்தக் கட்டத்திற்குச் செல்வதுதான் உசிதம். எல்லாம் தெரிந்தமாதிரி, கேட்டு தெரிந்துக்கொள்ள தயங்கி, தனக்கு தெரியாதது எதுவும் இல்லை என்ற ஸ்டைலில் படு மேதாவி தனமாக செயல்பட்டால், எதிர்பாராமல் வந்து சேரும் புதிய தலைவலிக்கு (பிரச்னை) முடிவு கட்ட நேரம், பணத்தை செலவு செய்வதுடன் கூடுதல் டென்சன் வேறு சுமக்க வேண்டும். எனவே, பதற்றப்படாமல், அனுமானத்தின் அடிப்படையில் (based on assumption), செயல்படாமல், சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து, சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற டென்ஷனைத் தவிர்க்கலாம், என்று முடித்தார்.