இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் வெற்றியாளர்?

Motivation article
Motivation articleImage credit - pixabay.com
Published on

வாழ்வில் சீக்கிரம் வெல்ல வேண்டும். சீக்கிரம் முன்னேற வேண்டும். என்ற எண்ணம் நமக்கு எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். அதற்கு ஏதாவது குறுக்கு வழிகள் இருந்தால் அதைக் கண்டிப்பாகத் தேடிக்கண்டுபிடித்து வெற்றி அடைந்து விடலாம் என்ற எண்ணமும் இருக்கும். அப்படி நீங்கள் வாழ்வினை வெல்ல ஒரு குட்டிக்கதையை இதில் பார்ப்போம். 

ஜப்பானில் ஒரு மிகப்பெரிய மோட்டிவேஷன் பேச்சாளர் இருந்தார் அவர் பேசப் போகிறார் என்றாலே அந்த அரங்கம் முழுவதும் நிரம்பி வழியும். அவர் சொல்லும் எல்லா விஷயங்களும் நம் வாழ்க்கையில் எளிமையாகச் செயல்படுத்தும் வகையில் இருக்கும். சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல ஒரு நிறுவனத்தின் தலைவரும் ஆவார். இவருக்கு ஒரு பழக்கம் உண்டு. அது என்னவென்றால் வருடத்திற்குச் சிறியதாகப் போட்டி ஒன்று நடத்தி, அதில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து. அவருக்கு ஒரு வருடம் முழுவதும் பயிற்சி அளித்து வெற்றியாளராக அவர்களை மாற்றுவது.

அவரிடம் பயிற்சி பெற்ற பின் தங்கள் வாழ்நாளில் பலரும் வெற்றியாளராகத் திகழ்ந்துள்ளனர். இதனால் பலரும் இவரிடம் பயிற்சி பெறுவதற்கு எப்பொழுதும் தயாராக இருப்பர். அதனால் அந்தப் போட்டியானது மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டு ஜப்பானில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர். அப்படி இருக்கும் தறுவாயில் அந்தப் போட்டிக்கான அறிவிப்பு இந்த வருடம் வந்தது. அந்தப் போட்டியும் நடந்தது. பல கட்ட தேர்வுகளுக்குப் பின்னர் மூவர் மட்டும் அந்தப் போட்டியில் பேச்சாளரை சந்திக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அந்த மூவரையும் பேச்சாளரின் உதவியாளர் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் வீட்டைப் பார்த்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். மிக அழகாகவும், பெரியதாகவும், மிகச் சுத்தமாகவும் இருந்தது அவர்களுக்குள் பிரமிப்பை ஏற்படுத்தியது.

நேர்முகத் தேர்வு நாளை நடைபெறும் என்பதால் இன்று இரவு அவர்கள் மூவருக்கும் ஓய்வு அளிக்க விரும்பினார் அந்த மோட்டிவேஷன் பேச்சாளர். அதனால் தனது உதவியாளரை அழைத்து மூவருக்கும் தனித்தனி அறையைக் கொடுத்தார். மூவரும் தங்களுக்கான அறையில் சென்று இரவு முழுவதும் ஓய்வெடுத்துக் கொண்டு, மறுநாள் காலையில் 8.00 மணிக்கு நேர்முகத் தேர்வுக்கும் அவரை சந்திப்பதற்கும் தயாராக இருந்தனர். மூவரும் ஒன்றாக நடந்து வந்து அவரை பார்த்தனர். அதில் தங்களில் யாரை அழைக்கப்போகிறார் என்று ஆவலுடன் மூவரும் காத்திருந்தனர். 

மோட்டிவேஷன் பேச்சாளர் மூன்றாம் நபரை அழைத்து அவர் நெஞ்சில் ஒரு பதக்கத்தைக் குத்தினார். அதில் வெற்றியாளர் என்று எழுதியிருந்தது இதைப் பார்த்த மீதமிருந்த இரண்டு நபர்களுக்குப் பயங்கரக் கோபம் ஏற்பட்டது. ஆனால், அதை வாய்விட்டுச் சொல்லவில்லை. இவர்கள் இருந்த நிலையைப் பார்த்த பேச்சாளர் புரிந்து கொண்டார். அதனால் மூவரையும் அழைத்துக் கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கிச் சென்றார்.

இதையும் படியுங்கள்:
எதையும் ஒத்திப் போடுதல் சரியா..?
Motivation article

அங்கு முதலாம் நபரின் அறையைத் திறந்தார் அந்த அரையானது முதல் நாள் இரவு கொடுக்கும் பொழுதும் மிகவும் சுத்தமாக இருந்தது. ஆனால் மறுநாள் காலையில் அப்படி இல்லை. எல்லாம் கண்டபடி இருந்தது. அரை சுத்தமாக வைத்துக் கொள்ளாத அவன் வாழ்வை மட்டும் எப்படி ஒழுங்காக வைத்துக் கொள்வார் என்று கேட்காமல் கேட்டுவிட்டு அடுத்த நபரின் அறைக்குச் சென்றார்.

அடுத்த நபரோ நான் அறையைச் சுத்தமாகத்தான் வைத்திருந்தேன் என்று அவர் பார்வையிலே மோட்டிவேஷன் பேச்சாளர் புரிந்து கொண்டார். அவரின் அறையில் வைத்ததை எல்லாம் வைத்த இடத்திலேயே ஒழுங்காகத்தான் வைத்திருந்தார். பின்னர் ஏன் தன்னை தேர்ந்தெடுக்கவில்லை என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அதற்கும் அந்த மோட்டிவேஷன்  பேச்சாளர் கூறினார், உங்கள் மூவருக்கும் ஒதுக்கப்பட்ட அறையில் உள்ள கழிவறையில் தண்ணீர்க் குழாய் பூட்டப்பட்டிருந்தது. அதில் முதல் நபரும், இரண்டாம் நபரும் அந்தக் குழாயினைத் திறந்து பார்த்துவிட்டு தண்ணீர் வரவில்லை என்று என்னை அழைத்துக் கூறினார்கள். ஆனால் இந்த மூன்றாம் நபரோ என்னை அழைக்காமல் அந்தக் குழாய் பூட்டப் பட்டிருந்ததை எப்படித் திறப்பது என்று சிந்தித்து அந்தத் தண்ணீர்க் குழாயினைத் திறந்து பயன்படுத்தினார்.

தனக்கு ஏற்பட்ட சின்ன சிக்கலைப் பெரிதாக எண்ணி மற்றவரை உதவிக்கு அழைக்காமல். அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துத் தீர்வை எளிமையான முறையில் கண்டுபிடித்தார்  மூன்றாம் நபர். இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் வெற்றியாளர் என்று. இதைக் கூறியதும் இருவரும் தங்களின் உண்மை நிலையை உணர்ந்து அடுத்த முறை போட்டியில் தேர்வாகப் பயிற்சி எடுக்கச் சென்றனர். 

இதுபோல்தான் நாமும் சாதனையாளர்கள் ஆக வேண்டும் என்று முடிவு செய்துவிடுவோம். ஆனால் அந்த சாதனைக்கு ஏற்றார்போல் தங்களை எப்படி மாற்றிக் கொள்வது என்று சிந்தித்துப் பார்க்க மாட்டோம். தனிமனித ஒழுக்கம், பிரச்சனைக்கான தீர்வை காணும் சிந்தனையும் இருந்தாலே வாழ்க்கையை நாம் வென்று விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com