வாழ்க்கை ஏராளமான சவால்களின் கூட்டுத் தொகை. சவால்களை சந்திக்கும்போது தொடர்ந்து வெற்றி மட்டுமே வருவதில்லை. வெற்றியுடன் தோல்விகளும், சங்கடங்களும் வரத்தான் செய்யும். தோல்விகளை வெற்றியின் படிக்கற்களாக மாற்றுபவர்கள் சங்கடங்களை சந்திப்பதில்லை. படிப்பினையினை மட்டுமே பெறுகின்றனர். பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கி நின்றால் பிரச்னைகளின் தன்மை பல மடங்காகத் தெரியும். எந்தப் பிரச்னையைச் சந்தித்தாலும் மன உறுதியுடன் அதை எதிர் கொள்ளவேண்டும். தைரியமாக எதிர்கொள்ளும்போது தன்னம்பிக்கையும் கூடவே வரும்.
நீண்ட வருடங்களுக்கு முன் ஒரு போர் நடைபெறுவதாக இருந்தது. தளபதி ஒருவர் தன் வீரர்களுடன் போரில் வெற்றி பெறுவது குறித்த தந்திரங்களையும், செயல் முறைகளையும் விவரித்தார். ஒரு அதிகாரி அவரைக் குறுக்கிட்டு,"இந்த யுத்த தந்திரங்களால் பயன் ஏதும் இல்லை. நாம் வெற்றி பெறுவோமா அல்லது தோல்வி பெறுவோமா என்பதை தெய்வங்கள் ஏற்கெனவே முடிவு செய்து விட்டன." என்றார் உடனே தளபதி விதி தீர்மானித்து விட்டதாகக் கூறுகிறீர்களா என கேட்க அவர் ஆமாம் என்றார்.
எல்லோர் முன்னிலையிலும் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நாணயத்தை எடுத்தார் தளபதி. இதை எறிகிறேன் தலை வந்தால் விதி நமக்கு உதவி நாம் வெற்றி பெறுவோம் என்று அர்த்தம். தலை வராவிட்டால் தோல்வி என எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார். அந்த அதிகாரியும் ஒப்புக் கொண்டார்.
நாணயத்தை மேலே வீச தலை வந்தது. உடனே தளபதி "பாருங்கள். தெய்வங்கள் நமக்கு வெற்றியைத் தீர்மானித்து விட்டு. தோற்க முடியாது. " எனக்கூறி படையினருடன் உத்வேகத்துடன் போரிட்டனர். போரில் வெற்றியும் பெற்றனர். இப்போது அதிகாரி தளபதியிடம்" இப்போது விதியை நம்புகிறீர்களா" என்று கேட்டார்.
தளபதி புன்னகைத்து தன்னிடமிருந்த நாணயத்தை மற்றவர்களிடம் காண்பித்தார். அந்த நாணயத்தின் இருபுறங்களிலும் தலைகள் பொறிக்கப்பட்டிருந்தன. அவர் அதிகாரியிடம் "நான் விதியை நம்பவில்லை .தன்னம்பிக்கையைத்தான் நம்புகிறேன். படைவீரர்கள் அனைவரும் தாங்கள் தோற்க மாட்டோம் என்ற நம்பிக்கையுடன் போரிட்டதால் வெற்றி பெற்றோம்.விதியை விட சுய நம்பிக்கை பெரியது." என்றார்.
சில நேரங்களில் நம்மால் முடியாது என்று எண்ணுகிற ஒரே காரணத்தால் மற்றவர்கள் வெற்றிக் கனியைப் பறித்து விடுகின்றனர். தன்னம்பிக்கை உள்ளபோது தோல்விகள் வெற்றிக்கு வழி வகுக்கும்.