succeed in any situation
to success...Image credit - pixabay

எந்த சூழ்நிலையிலும் வெற்றிபெற வைக்கும் சமயோசித புத்தி!

Published on

ஒரு மனிதனுக்கு அறிவுக் கூர்மை இருக்கின்றதோ, இல்லையோ ஆனால், சமயோசிதம் மட்டும் நிச்சயம் இருக்கவேண்டும். 

அறிவுக் கூர்மையால் கூட சில செயல்களை சாதிக்க முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது. ஆனால், சமயோசிதப் பண்பால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

சிலர் தன்னுடன் ஒத்த சூழ்நிலையில் இருந்து விலகி இருப்பவர்களையும் தனது சமயோசிதப் புத்தியினால் சூழ்நிலைக்குள் கொண்டு வரும் திறமையினைப் பெற்றிருப்பார்கள். இத்திறமை இயல்பாகச் சிலருக்கு அமைந்திருக்கும், சிலர் தங்களது சுயமுயற்சியின் மூலமாக இதனை வளர்த்து இருப்பார்கள்.

பீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்பார். மன்னர் பலமுறை சொல்லியும் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள அவரால் முடியவில்லை. 

அக்பரின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு பீர்பால் புகையிலை உபயோகிப்பது மிகவும் அருவறுப்பாக இருந்தது. 

நல்ல சந்தர்ப்பம் பார்த்து புகையிலைப் பழக்கத்துக்காகப் பீர்பாலை அவமானப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.

ஒருமுறை மன்னர் காற்றோட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார். அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் சேர்ந்து உலவியவாறு உரையாடிக் கொண்டிருந்தனர்.

அரண்மனைத் தோட்டத்தின் வேலியோரத்தில் புகையிலைச் செடி ஒன்று தானாக முளைத்து வளர்ந்து இருந்தது.

தெருவிலே சென்று கொண்டிருந்த கழுதை ஒன்று வேலியின் இடுக்கு வழியாக முகத்தினை நுழைத்து அந்தப் புகையிலைச் செடியைத் தின்னப் பார்த்தது. இலையில் வாயை வைத்தவுடன் அதன் காரமும் நாற்றமும் பிடிக்காமல் செடியை விட்டு விட்டுத் திங்காமல் வெறுப்போடு போய்விட்டது.

அதனைச் சுட்டிக் காட்டிய மூத்த அமைச்சர், "மன்னர் அவர்களே, பார்த்தீர்களா? நம் பீர்பாலுக்கு மிகவும் பிடித்தமான புகையிலைக் கேவலம் அந்தக் கழுதைக்குக் கூடப் பிடிக்கவில்லை!" என்றார் சிரிப்புடன். அவர் முகத்தில் இப்போது நிம்மதி.

இதையும் படியுங்கள்:
எதையும் வெல்வதற்கு தேவை என்ன தெரியுமா?
succeed in any situation

உடனே பீர்பால் சிரித்துக் கொண்டே, 

"அமைச்சர் அவர்களே, உண்மையைத்தான் சொன்னீர்கள். புகையிலை எனக்கு மிகவும் பிடித்தப் பொருள்தான். ஆனால் கழுதைகளுக்குத்தான் புகையிலையைப் பிடிப்பதில்லை!" என்றார் ஒரே போடாக!

தனது வாக்கு வன்மையால் மூக்குடைத்தார் மூத்த அமைச்சரை பீர்பால். ஒரு மனிதன் வெற்றிக்கு அறிவுக் கூர்மை இருபது சதவீதம் மட்டுமே அணுசரனையாக இருக்கிறது, 

சமயோசித ஆளுமையோ எண்பது சதவீதம் துணை புரிகிறது. பரபரப்பானச் சூழலில் பதற்றப்படாமல் சமயோசிதம் ஆகச் சிந்தித்து நடந்துக் கொள்ள வேண்டும். சமயோசிதப் புத்தி உள்ளவன் எந்தச் சூழலிலும் பிழைத்துக் கொள்வான்.

logo
Kalki Online
kalkionline.com