

கார் பங்களா என வாழ்ந்தாலும், ஒட்டு வீட்டில் வாழ்ந்தாலும் வாழ்க்கை நிம்மதியாக கழியவேண்டும் என்பதுதான் பெரும்பாலானவர்கள் ஆசை. அதென்ன நிம்மதி? அது நம்மைத்தேடி வருமா? அல்லது அதைத்தேடி நாம் செல்லவேண்டுமா?
வாழ்க்கையை நிம்மதியாக (peacefully) கழிப்பது என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி பொருந்தாத விஷயம். அது ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கை, பொறுப்பு, மனநிலை, சூழல் எல்லாவற்றையும் பொறுத்து மாறும். "இது தெரியாமல்தான் நாங்களே குழம்பிப்போய் இருக்கோம்.. இதுல நீங்க வேற" என்பவர்களுக்காக நிம்மதியாக வாழும் வழிகள் பற்றி நடைமுறைக்கு உதவும் 10 எளிய வழிகள் இதோ..
மன அமைதியை பாதுகாப்பது
தினமும் சில நிமிடங்கள் தியானம் மூச்சுப்பயிற்சி (meditation, breathing exercises) என செய்வதன் மூலம் அமைதியாக அமரவும். பிறருடன் நம்மை ஒப்பிடுவதை குறைக்கவும். மனதில் வரும் தேவையற்ற கவலைகளை எழுதிப் பார்த்து உடனே வெளியில் விடவும். நமக்குள்ளேயே வைப்பதால் கவலைகள் குறையாது.
தேவையற்றதைக் கழிப்பது
எந்தப் பொருளையும் வாங்கும் முன் “எனக்கு உண்மையில் தேவைதான்?” என்று உங்களையே கேளுங்கள். ஏனெனில் நம் மனசாட்சி உண்மையான பதில் கூறும். தேவையற்ற பொருட்கள் மட்டுமல்ல அழுத்தம் தரும் உறவுகள், அதிக பொறுப்புகள் போன்றவற்றையும் முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள்.
உடல் நலத்தில் அக்கறை
நிம்மதி வேண்டும் எனில் நமது உடல் நலம் முதலில் நன்றாக இருக்கவேண்டும். போதுமான தூக்கம், ஆரோக்கியமான எளிய உணவு, தினசரி 20–30 நிமிடம் நடை அல்லது உடற்பயிற்சி ஆகியவை கட்டாயம் தேவை. உடல் நலம் எப்படியோ அப்படியே மனநிலையும் அமையும்.
நல்ல மனிதர்களுடன் இணைந்திருப்பது
உங்கள் தவறுகளை உரிமையுடன் தட்டிக்கேட்கும் மனிதர்களைத் தேர்ந்தெடுந்து பழகினால் தவறுகள் தவிர்க்கப்படும். எப்போதும் எதிர்மறை சிந்தனை (egative energy) உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். குடும்பத்துடன் உண்மையான மகிழ்வான நேரத்தைப் பகிருங்கள்.
ஒரு அர்த்தமுள்ள இலக்கை வைத்திருப்பது
வேலை, கலை, சேவை – எதுவாக இருந்தாலும் அதை தினமும் பயற்சி செய்யுங்கள். இதனால் உள்ளமும் உடலும் மேம்பட்டு புத்துணர்வு கிடைக்கும். இலக்கு பெரியதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. தினமும் தொடர்ந்து சிறிதளவு மேம்படுத்தும் எளிய செயல்களாகவும் இருக்கலாம்.
உங்களை மன்னிக்க கற்றுக்கொள்வது
இது மிகவும் முக்கியம். கடந்த தவறுகளுக்காக அதையே நினைத்து உங்களுக்குள் குற்றவுணர்வை அதிகமாக்க வேண்டாம். ஒவ்வொரு நாளையும் புதிதாக தொடங்க ஒரு வாய்ப்பாக கருதி துவங்குங்கள். நாள்தோறும் நிம்மதி தரும் பழக்கங்களை உருவாக்குவது காலை ஒரு கப் காபி / தேநீரை அமைதியாக குடிப்பது, இயற்கையில் சிறிது நேரம் செலவிடுவது, பிடித்த இசையை கேட்பது புத்தகங்களைப் படிப்பது போன்றவற்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
பண விஷயங்களில் சமநிலையுடன் வாழ்வது
“குறைந்த பணத்திலும் திருப்தியுடன் வாழலாம்” என்ற மனப்பக்குவம் நிச்சயம் தேவை. அதேசமயம் தேவையற்ற கடன், அதிக செலவுகளை பரிசோதித்து அதை தவிர்ப்பதுடன் கண்டிப்பாக சிறு சேமிப்பு என்பது மனஅமைதிக்கு முக்கியம் என்பதை உணருங்கள்.
எதிர்பார்ப்புகளை சரியாக இருப்பது
நீங்களும் எல்லாவற்றிலும் perfect ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் மற்றவர்களும் உங்கள் எதிர்பார்ப்பை எப்போதும் பூர்த்தி செய்யமாட்டார்கள் என்பதால் உண்மையை ஏற்றுக்கொள்வது மனநிம்மதிக்கு மிக முக்கியம்.
தினமும் நன்றி சொல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது
இன்று நடந்த 3 நல்ல விஷயங்களை எழுதி அதற்கு காரணமானவர்களுக்கு மனதிலேயே நன்றி சொல்லுங்கள். நேரில் என்றால் இன்னும் சிறப்பு. நன்றி சொல்லும் மனோபாவம் கவலையை குறைத்து மனதை தெளிவாக்கி நிம்மதி தரும்.