

மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் கஷ்டங்களும் கவலைகளும் அனுபவித்தே ஆகவேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைப்பது உண்டு. அதனை விதியென்று கூட நினைத்து பார்ப்பவர்கள் உண்டு. அது மிக மிகத்தவறு என்று முதலில் உணருங்கள்.
வாழ்க்கையில் தேவையில்லாமல் பல இன்னல்களை தனக்குள் உருவாக்கிக் கொண்டு, அந்த தன்மையின் நிலையை விட்டு மீறி வரமுடியாமல் தவிப்பவர்கள் வேண்டுமானால் அப்படி நினைத்து வாழலாம். ஆனால், நேர்மறையாக சிந்திக்கும் ஒரு நல்ல மனிதனால் இவைகளைத் தவிர்த்து, சிறந்து வாழமுடியும்.
எந்த நேரத்திலும் நம் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் எதனால் வந்தது என்று சிந்தித்து, அதை கடக்கும் வழி பார்க்கவேண்டும். அந்த கஷ்டங்கள் நம்மை சுற்றியுள்ள மனிதர்களால் உண்டானது என்று நினைத்து காலத்தில் கரைந்து விடக்கூடாது. கழிந்த நாட்களை நாம் சரியாக கையாளவில்லை என்பதை உணர்ந்து, அதுவே இன்று நம் கண்முன்னே கஷ்டமாக வருகிறது அவ்வளவுதான் என்று நினையுங்கள்.
மனக்கஷ்டம் மற்றும் கவலைகளைப் போக்க உதவும் பொதுவான வழிகள் மற்றும் யோசனைகள் பற்றிய சிந்தனை நமக்குள் வளரவேண்டும். அதற்கு முதலில் பொறுமையாக நமக்கு ஆராய்ந்து பார்க்கும் மனோபாவம் இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழியை சற்று மாற்றி, பொறுத்தார், தன்னிலை மாற்றம் காணுவார் என்று நினைத்து, பொறுமையாக செயல்படுத்துங்கள்.
கஷ்டங்கள் வந்த பிறகு அதற்கு காரணங்கள் தேடவேண்டாம். அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள். ஏனெனில் வாழ்க்கை என்பது கடல் போன்றது. அதில் அமைதியும் இருக்கும், சீற்றமும் இருக்கும். அதற்காக கடல் தன் தன்மையை இழந்துவிடுவது இல்லை. அதேபோல்தான் வாழ்க்கையும் என்று நினைத்து எளிமையாக கடந்து செல்லுங்கள்.
இன்பமும் துன்பமும் சேர்ந்தது தான் வாழ்க்கை. இதில் இன்ப காலங்களை அனுபவித்து வாழ்ந்துவிடுங்கள். துன்ப காலங்களில், எப்படி கடக்க வேண்டும் என்பதை உணர்ந்து, முயற்சி செய்து, கடந்து செல்ல தன்னை தயார்படுத்திக்கொள்ள முற்படுங்கள். இரவும் பகலும் மாறிவரும் என்ற தத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் குறிக்கோளோடு வாழ்வது அவசியம். அந்த பாதை செல்லும் வழித்தடத்தில் கஷ்டங்கள் எனும் தடைகளைத்தாண்டி செல்வது கடினமான காரியம் இல்லை என்பதை உணர்ந்துகொண்டு, கடந்து செல்லுங்கள்.
வாழ்க்கையில் தன் குடும்பங்களை விட்டு விட்டு, நாட்டு மக்களுக்காக பணிபுரியும் ராணுவ வீரர்களின் தங்கள் அர்ப்பணித்த வாழ்க்கை முறையை எண்ணிப் பாருங்கள். மழையிலும், பனியிலும் இரவு பகல் பாராது ஆற்றும் பணியை சிந்தித்து பாருங்கள். கஷ்டங்களை தன் தோல் மேல் சுமந்து, தன் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கடந்து, நாட்டு மக்களுக்காக வென்று காட்டுகிறார்கள்.
கஷ்டங்களையும் கவலைகளையும் நினைத்து வாழ்பவர்கள் நிலைத்து வாழ்வதில்லை. அதனை துணிச்சலுடன் எதிர்கொண்டு, அதனைக் கடந்து வாழத் தெரிந்துகொண்டு வாழ்பவர்கள் நிமிர்ந்து வாழ தவறியது இல்லை. கஷ்டங்கள் விட்டில் பூச்சிகள் என்று நினைத்து வாழுங்கள். ஒரே நாளில் அது கடந்து போகும்!