

முன்னேற நினைப்பவர்களை சுற்றி பல வகைகளில் வாய்ப்புக்கள் ஒவ்வொரு ரூபத்தில் காத்துக் கொண்டு இருக்கின்றன.
அதில் ஒன்று அறிவை வலுப்படுத்தி பயன்படுத்திக் கொள்ள உதவுவதற்கு.
முன்னேற துடிப்பவர்கள் போட வேண்டிய மூலதனம் உழைப்பு, அதற்கு உதவும் கடும் உழைப்பு.
உழைப்பு ஒரு பகுதிதான். நம்பிக்கை என்ற அடித்தளம் வலிமையுடன் இருக்க வேண்டியது அத்தியாவசியம்.
ஈடுபாட்டுடன் அறிந்துக் கொள்ள முனைப்புக் காட்ட வேண்டியது ஒரு பகுதி.
இதற்கு கட்டாயம் முக்கியத்துவம் தொடர்ச்சியாக அளித்து வந்தால் அறிவு வளர்ந்து பெருகி வருவதை அனுபவம் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
அறிவை அதிகப்படுத்திக் கொள்ள படித்தும், எழுதியும், கேட்டும், விவாதித்தும், பார்த்தும், சிந்தித்தும் செயல்பட்டு பெறலாம்.
வேகமாக வளர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் டெக்னாலஜி சாதனங்கள் மூலமும் அறிவை விருத்தி செய்து கொள்ள பல்வேறு வழிமுறைகளும் இருக்கின்றன.
இவற்றுடன் அறிவை விஸ்தாரித்துக் கொள்ள இருக்கும் அனுபவஸ்தர்களின் அனுபவங்கள் தங்கள் பங்கை அளிக்க காத்துக் கொண்டு இருக்கின்றன. என்பதும் அவற்றை வெகு சிலரே பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதும் யதார்த்த உண்மை ஆகும்.
முன்னேற எண்ணுபவர் தயக்கம் இன்றி கற்றுக் கொள்ள முன் வர வேண்டும்.
ஒவ்வொரு மனிதரிடமும் அவர் அவரது தனிப்பட்ட அனுபவம் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர், படிக்காதவர், மெத்த படித்தவர், பிரபலம் அடைந்தவர், பிரபலம் அடையாதவர் என்று வேறுபாடு, பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் அனுபவங்கள் உண்டு.
குறிப்பிட்ட சிலரின் சில அனுபவங்கள் எழுத்து மூலமாக (புத்தக வடிவில், பத்திரிகைகள் வாயிலாக, சுய சரித்திரங்கள் போன்றவற்றால்) வேறு விதமாக (மேடை பேச்சு, பட்டிமன்றங்கள், சினிமா, டிராமா, கதாகாலட்சேபம், பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவைகள் மூலமாகவும்) அறிவை வளர்த்துக் கொள்ள ஏதுவாகும்.
இவைகளில் பொதுவாக இல்லாதது, கிடைக்காதது, ஆனால் ஆர்வத்தோடு தேடினால் கிடைக்க கூடியது ஒன்று இருக்கின்றது.
அத்தகையது முன்னேற நினைப்பவர்களின் அறிவை வலுப்படுத்தும். வருந்தக்கூடிய விஷயம் என்னவென்றால் பலரும் உபயோக்கித்துக் கொள்வது இல்லை. மேலும் தவிர்த்து விடுபவர்களே அதிகம்.
அதுதான் பிறரின் அனுபவங்கள். எந்த துறையில் இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் தனி மனிதர்களின் தனிப்பட்ட அனுபவங்கள், அவர்கள் பார்த்த, கண்ட, கேட்ட அனுபவங்கள் விவரங்கள் அவர்களிடம் இருக்கும்.
முன்னேற்றத்தில் விருப்பம் உள்ள நபர்கள் அப்படிப்பட்ட அனுபவஸ்தர்களுடன் உரையாடி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டியது முன்னேற துடிப்பவர்களின் தலையாய கடமை ஆகும்.
தனிப்பட்ட நபரின் அனுபவத்தை அந்த குறிப்பிட்டவரின் வாயிலாக அறிந்துக் கொள்வது தான் சால சிறந்தது.
அத்தகையை விவரங்கள் முன்னேறும் பாதையில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்சனைகள் எதிர்கொள்ளவும், பிரச்சனைகளை கடந்து பொருத்தமான தீர்வுகளை அடைய கைகொடுத்து உதவலாம்.
எனவே முன்னேற முயல்பவர்கள் கேட்டு தெரிந்துக் கொண்ட பிறரின் முக்கிய அனுபவ விவரங்களை குறித்து வைத்துக் கொள்வது அவசியம் மட்டும் அல்லாமல் எதிர்காலங்களில் பயனுள்ள குறிப்புகளாகவும் பயன்படும்.
அதற்கு முன்னேற நினைப்பவர்கள் தங்கள் கைப்பட ஒரு நோட்டில் அல்லது டைரியில் அத்தகைய விவரங்களை நேரம் கடத்தாமல் எழுதி வைக்கும் பழக்கத்திற்கு அடிமையாக வேண்டியதை தவிர்க்கவே கூடாது.
சோம்பேறித்தனம், நான் மறக்கவே மாட்டேன், எனக்கு எல்லாம் தெரியும் போன்ற தேவையில்லாத எதற்கும் உதவாத தன்மைகளுக்கு இடம் கொடுக்காமல் உண்மையான ஆர்வத்துடன் பிறரின் அனுபவத்தை கற்றுக் கொண்ட பாடங்களை, அனுபவங்களை தங்கள் கையினால் எழுதி வைத்துக் கொள்வதை தொய்வில்லாமல் தொடர்வது அவர்களுக்கு கூடுதல் நன்மை அளிக்கும் வழிமுறையாகும் என்பது உரிய தருணத்தில் கைகொடுக்கும் பலன்களால் அறிந்துக் கொள்ளலாம்.