

கழுத்துல புதுசா ஐடி கார்டை மாட்டிக்கிட்டு முதல் நாளு ஆபீஸ்குள்ள நுழையும் போது, ஏதோ உலகத்தையே ஜெயிச்சிட்ட மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். ஏசி காத்து, காபி மெஷின், புது நண்பர்கள்னு அந்த ஆரம்பக்கட்ட உற்சாகம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. சில பல வருஷங்கள் வேலை செஞ்ச அப்புறம் தான், கார்ப்பரேட் உலகம்ங்கிறது வெளிய பாக்க பளபளன்னு இருந்தாலும், உள்ளே நிறைய முட்கள் நிறைந்த பாதைனு புரிய வரும்.
ஒரு கம்பெனில எப்படி வேலை பாக்கணும்னு எல்லாரும் சொல்வாங்க, ஆனா அங்க எப்படி Survive ஆகணும்னு யாரும் சொல்லித்தர மாட்டாங்க. அப்படி பலரும் அடிபட்டு கத்துக்கிட்ட சில எழுதப்படாத ஆபீஸ் விதிகளப் பத்தி இப்போ பாக்கலாம்.
'நாங்க எல்லாம் ஒரு குடும்பம்' - நம்பாதீங்க!
"We Are Family" அப்படின்னு கம்பெனிகள் சொல்றது எல்லாமே ஒரு மாயை தான். ஆபீஸ்ல இருக்க HR டிபார்ட்மெண்ட் எப்பவுமே தொழிலாளர்களின் நலனுக்காக சண்டை போடுவாங்கனு தப்புக்கணக்கு போட்டுறாதீங்க. அவங்க சம்பளம் வாங்குறதே நிர்வாகத்தை எந்தப் பிரச்னையும் இல்லாம பாத்துக்க தான்.
அதே போல, பக்கத்து சீட்ல உக்காந்து சிரிச்சுப் பேசுற எல்லாரும் நமக்கு நெருக்கமானவங்க கிடையாது. உங்களுக்குப் பின்னாடி உங்க வளர்ச்சியைப் பிடிக்காதவங்க நிறைய பேர் இருப்பாங்க. அதனால, உங்க வீட்டுப் பிரச்னைகள், பர்சனலான விஷயங்களை காபி குடிக்கும்போதோ, லஞ்ச் டைம்லயோ எல்லார் கிட்டயும் கதை கதையா சொல்றத மொதல்ல நிறுத்துங்க. உங்க பலவீனம் நாளைக்கு உங்களுக்கு எதிராவே திரும்பலாம்.
வேலைக்கான அங்கீகாரம் பிட்சாவா?
ராப்பகலா முழிச்சு நீங்க ஒரு ப்ராஜெக்ட்டை முடிச்சு குடுத்தா, அதுக்கு முறையான அங்கீகாரம் பணமாவோ இல்ல போனஸாவோ தான் இருக்கணும். அதை விட்டுட்டு, சும்மா ஒரு 'பிட்சா பார்ட்டி' வச்சு உங்களை கூல் பண்ண நினைச்சாங்கனா, உங்க உழைப்பு சுரண்டப்படுதுனு அர்த்தம்.
அதுமட்டுமில்லாம, உங்க திறமைய காட்டுறேன்னு சொல்லி உங்களுக்கு சம்பந்தமே இல்லாத பத்து வேலைகளை இழுத்து போட்டு செஞ்சீங்கனா, கடைசில "இவன் நல்லா வேலை செய்வான், இவன் தலையிலயே எல்லாத்தையும் கட்டுவோம்"னு சொல்லி ஓவர்லோட் பண்ணிடுவாங்க.
உங்களை வெறும் பட்டப்பெயர வச்சு, அதாவது சம்பளத்த கொஞ்சம் கூட ஏத்தாம வெறும் 'மேனேஜர்', 'லீட்'னு போஸ்டிங்க மட்டும் மாத்தி குடுத்தா, அந்த வலையில விழாதீங்க.
எழுத்துப்பூர்வமான ஆதாரமே உங்களை காப்பாற்றும்!
ஆபீஸ் அரசியல்ல இருந்து தப்பிக்க ஒரே வழி, எல்லாமே 'ரெக்கார்டடா' வச்சுக்கிறது தான். வாய் வார்த்தையா யார் என்ன சொன்னாலும் சரி, அத ஒரு ஈமெயில்ல போட்டு கன்ஃபார்ம் பண்ணி வச்சுக்கோங்க. நாளைக்கு ஏதாவது பிரச்சனைனா, இந்த ஈமெயில்கள் தான் உங்களுக்குக் கவசமா நிக்கும்.
அடுத்ததா, கம்பெனிக்காகவே உசுர குடுக்குற மாதிரி லீவு கூட போடாம வேலை செய்யாதீங்க. உங்க உடம்புக்கும் மனசுக்கும் ரெஸ்ட் ரொம்ப அவசியம். கம்பெனி குடுத்திருக்க விடுமுறை நாட்களை உங்க இஷ்டப்படி தயங்காம அனுபவிங்க.
கடைசியா ஒன்னு நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க, எந்த ஒரு நிறுவனத்துக்கும் யாருமே இங்க அத்தியாவசியமான ஆள் கிடையாது. நீங்க இல்லனா, அடுத்த ரெண்டாவது நாள் வேற ஒருத்தரை அந்த சீட்ல உக்கார வச்சுட்டு கம்பெனி பாட்டுக்கு ஓடிட்டே இருக்கும்.
உங்க உழைப்புக்கு ஏத்த ஊதியமோ மரியாதையோ பல வருஷமா கிடைக்கலனா, ஒரே இடத்துல ஒட்டிக்கிட்டு இருக்காம துணிஞ்சு அடுத்த கம்பெனிக்கு மாறிடுங்க.
லேப்டாப்ப மூடி வச்சா, உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்க உங்க குடும்பம், பெத்தவங்க, பசங்க தான் நிஜம். அவங்க கூட செலவிடுற நேரத்தை எந்த ஒரு டெட்லைனுக்காகவும் தியாகம் செய்யாதீங்க.
வேலைய வேலையா பாருங்க, வாழ்க்கைய வாழுங்க!