
சரியான போதனைகள்தான் வாழ்நாள் முழுதும் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக அமையும். சிறு குழந்தையில் இருந்தே சரியான போதனைகளை பெற்றுக்கொண்டே வளரவேண்டும். தொடர்ந்து அப்படிப் பெற்றுக்கொண்டிருந்தால்தான் வாழ்க்கை சரியான, முறையான வாழ்க்கை வாழக்கூடியதாக இருக்கும்.
அதே சமயத்தில் முறைகேடான போதனைகளைப் பெற்று வந்ததால் அவர் முறைகேடான வாழ்க்கையை வாழ்பவராக இருப்பர். அதனால்தான் நாம் யாரிடம் பழகுகின்றோம், யாரிடம் போதனைகள் பெறுகின்றோம், எவரெவரிடம் ஆலோசனைகளையும், செயல்வழித் திட்டங்களையும் பெற்றுக் கொள்கின்றோம் என்பதெல்லாம் மிகமிக முக்கியம்.
அறிஞர்களிடம் போதனை பெற்றால் அறிவு பெறுவோம். ஞானிகளிடம் போதனை பெற்றால் ஞானம் பெறுவோம். கல்வியாளர்களின் போதனை பெற்றால் கல்வி பெறுவோம். மூடர்களிடம் போதனை பெற்றால் மூட நம்பிக்கையைப் பெறுவோம். தவறான வழிகாட்டிகளிடம் போதனை பெற்றால் தவறான வழிகளைப் பெறுவோம். சரியான முறையான போதனைகளைப் பெற்றிருந்தால்தான் சரியான முறையான காரியங்களை முழுமையாகச் செய்திட முடியும்.
வாழ்க்கையை முறையான வழியில் பயன் படுத்திக்கொள்ள முடியும். மூளைக்கு நல்லது கெட்டது தெரியாது. நல்லது கெட்டது என்று எதைப் போட்டாலும் எடுத்துக்கொள்ளும். அதன் பிறகு மூளைக்குள் இருக்கின்ற மனத்தின் வழியாக போடப்பட்ட போதனை சொல் வடிவத்திலும் செயல் வடிவத்திலும் வெளிப்படும். காரணம் நம் உடல் நம் மனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மனம் இடுகின்ற கட்டளைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு சொல் வடிவிலும் செயல்வடிவிலும் செயல்படும். இதுதான் மனித மனதின் அதிசய, அற்புத, அபூர்வ, ஆக்கபூர்வமான ஆற்றலுக்குரிய இயற்கை நியதி.
நம் ஐம்புலன்களின் வழியாக மூளைக்கும் போகின்ற செய்தி ஒருமுறை போனால் போனதுதான் அவைகளை அழிக்க முடியாது. மூளைக்குக் கிடைத்திருக்கின்றன செய்திகளை மனம் எப்படி ஏற்றுக்கொள்கிறது, நிராகரிக்கின்றது என்பதெல்லாம் அந்த மனதின் பக்குவப்பட்ட நிர்வாகத் தன்மையைப் பொறுத்திருக்கின்றது.
அதனால்தான் ஒவ்வொருவரும் தன் மனதை நிர்வகிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மனதை நல்வழிப்படுத்த சரியான போதனைகளே வழிகாட்டி.