பெரும்பாலும் இந்தக்கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒரு கழுகு கூட்டில் ஐந்து முட்டைகள் இருந்தன. அவைகளில் நான்கு முட்டைகள் குஞ்சுகள் பொறிந்து, அதனுடைய தாய்க்கழுகு அவற்றைப் பிரித்துக் கொண்டு சென்றுவிட்டது.
அதில் மீதமிருந்த ஒரு முட்டை கூட்டிலேயே தனித்து விடப்பட்டது. அவ்வழியாக சென்ற ஒரு வழிப்போக்கன், முட்டையைப் பார்த்து அதனுள் குஞ்சு இருப்பதை உணர்ந்தான். அம்முட்டையை கொண்டுபோய் தன்னுடைய கோழி அடை காக்கும் மூட்டைகளோடு வைத்தான். கோழிக்குஞ்சுகளுடன் ஒன்றாக இந்த கழுகுக் குஞ்சும் பொறிந்தது. அதன் காரணமாக, அது தன்னை கோழியாகவே நினைத்தது.
தன் தோட்டத்தில் கோழிகளோடு கோழியாக மேய்ந்து கொண்டிருக்கும் போது, வானத்தில் பறந்து செல்லும் கழுகுகளைப் பார்த்து, நாமும் அது போல் கழுகாக பிறந்திருந்தால் சுதந்திரமாக பறந்து திரிந்திருக்கலாம் என்று மனதிற்குள் நினைத்தது. ஆனால் தான் ஒரு கழுகு என்பதை இறுதிவரை அது அறிந்துகொள்ள முற்படவில்லை.
எனவே, அவ்வாறே நினைத்துக் கொண்டு இறுதிவரை கோழியகவே தனது வாழ்க்கையைக் கழித்தது.
இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் இதே நிலைதான். தன்னுள் இருக்கும் தனக்குண்டான திறமையை வெளிக்கொணர்வதை விடுத்து, பிறர் என்ன செய்கிறார்கள், தான் எந்த கூட்டத்தில் இருக்கிறோம், தான் எந்த சமூகத்தில் இருக்கிறோம் அதனையே பின்பற்றுவோம் என்று நினைத்து, தான் வாழும் காலம் வரை பிறருக்காகவே வாழ்ந்து இறுதியில் மடிகின்றனர். சாகும்வரை அவர்களுக்குள் இருக்கும் திறமை என்னவென்று, அவர்கள் அறிந்து கொள்ள முற்படுவதே கிடையாது.
நீங்களாவது உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர முயலுங்கள். திறமை இல்லை என்று நினைத்தால் உங்களுக்கு பிடித்ததில் திறமையை வளர்த்துக் கொள்ள முற்படுங்கள்.