கண்ணீர் விட்டு அழுங்கள்... கவலைகள் மறந்து போகும், மறைந்தும் போகும்!

Motivation Image
Motivation Image

‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்’

என்கிறது குறல். 

நல்லது, கெட்டது என்ற அனைத்து உணர்ச்சிகளையும் சட்டென்று வெளிப்படுத்துவது கண்ணீர். கண்ணீர் விடாத மனிதர்களே உலகத்தில் இருக்க முடியாது. அது ஆனந்த கண்ணீராகவும் இருக்கலாம். சோக கண்ணீராகவும் இருக்கலாம். வீட்டில் ஏதாவது ஒரு சோகம் நடந்து, அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மன இறுக்கத்தில் இருந்து கண்ணீர் சிந்தாமல் இருந்தால், ‘அவரைக் கதறி அழ விடு, இல்லையென்றால் மனம் பாதிக்கப்படும்’ என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம். சோகத்தைத் துடைக்க வல்லது கண்ணீர் என்பது நாமறிந்ததே. அப்படி கண்ணீர் விடுவதால் நாம் அடையும் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். 

திருமணத்தை கோலாகலமாகச் செய்துமுடித்த பின்னர் பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும் பெற்றோர்கள் கண்ணீர் விடுகின்றனர். மகள் தம்மை விட்டு செல்கிறாளே என்ற நினைப்பால்  கண்ணீர் சிந்தினாலும் அதை மங்கலக் கண்ணீர் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தன் மகள் தன்  இணையுடன் சேர்ந்து நடத்தப்போகும் வாழ்க்கை இன்பமயமாக அமைய வேண்டும் என்ற நோக்கில் விடும் கண்ணீர் அது. ஆதலால் இதை ஆனந்தக் கண்ணீர் என்று கூறி அகம் மகிழ்கிறோமே அப்பொழுது நம் மன இறுக்கம் குறைகிறது அல்லவா?

அழகான தோட்டங்கள், மலர்கள், நீர் வழிகள், தீவுகள், விலங்குகள், பறவைகள் ஆகிய காட்சிகளை காணுவோர் கண்ணீர் விடுகின்றனர். காரணம் அவர்கள் மனதில் பல்வேறு  இடையூறுகளால் உருவான இறுக்கம் அப்போது நீங்குகிறது. மகிழ்ச்சி உருவாகிறது. அந்த அக மகிழ்ச்சி உகுக்கும் கண்ணீர்  விலைமதிக்க முடியாதது அல்லவா? 

Emotional on Daughter's Wedding Day
Emotional on Daughter's Wedding Day

பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெற கண்ணீர் உதவியுள்ளது. உணர்ச்சிகளை அடக்கிவைத்தால் ஆழ்மனதில் அடங்கியுள்ள அவை பல்கிப் பெருகி வெடித்தெழக்கூடும். கண்ணீரால் உணர்ச்சிகளைக் கரைத்து விடலாம்தானே!

அச்சம், அதிர்ச்சி, சினம் ஆகிய உணர்வுகளின் திருப்புமுனையாக கண்ணீர் விளங்குகிறது. கண்ணீர் மனமுறிவைக் குறிப்பதில்லை. நலத்தையும், நம்பிக்கையையும் நோக்கி பயணிக்க உதவுகிறது. 

நடந்துவிட்ட ஒரு நிகழ்ச்சியைப் பற்றி  அசை போடும்போது, தன்னை அறியாமல் சோகத்தாலோ, நினைவு கூர்வதாலோ, இரக்கத்தாலோ, ரசனையாலோ, மகிழ்ச்சியாலோ வரும் கண்ணீர் தூய அறிவுபூர்வமானது. அப்பொழுது  நாம் விடும் கண்ணீர் நம் கவலைகளை மறக்கடித்து நம்மை நிம்மதிப் பெருமூச்சு
விட வைத்துவிடும்  இல்லையா?

சினம்,சோகம்,வெறுப்பு ஆகியவற்றை கைவிட்டு, அன்பு, இறக்கம் ஆகியவற்றை மேற்கொண்டு இறுக்கத்தையும், தொல்லையையும்  கை கழுவிவிட கண்ணீர் பெரிதும் உதவுகிறது. பெரும் சோகத்தை சந்தித்தவர்கள் அப்பாடா... எல்லாத்தையும் அழுதே தீர்த்துவிட்டேன் என்று   கூறுவதைக் கேட்டிருக்கிறோமே! 

எந்த ஒரு உணர்ச்சியையும் அடக்குவதால் நமது உடல் நலத்தில் தாக்கம் உருவாகும்தானே? அந்த தாக்கத்தை கண்ணீர் கரைக்கிறது. நம் சிந்தனையைத் தெளிவுபடுத்துகிறது. 

இதையும் படியுங்கள்:
விட்டு விலகி டென்ஷனை போக்குங்கள்!
Motivation Image

மேலும், ஆண்கள் அழுதால் கோழை என்பார்கள். பெண்கள் அழுதால் நீலிக் கண்ணீர் வடிக்கிறாள் என்பார்கள். அதையெல்லாம் தூக்கி தூர போட்டுவிட வேண்டும். கண்ணீர் சுரப்பிகளை உடலில் படைத்திருப்பதே தேவைப்படும்போது கண்ணீர்விட்டு கவலைகளையும், துயரங்களையும் கழுவுவதற்குதான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். 

நண்பர்களிடம் பேசி உரையாடி துயரங்களை வெளி செலுத்துவது பழைய முறையாக இருப்பினும் பயனுள்ள முறையே ஆகும். "வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்" என்பார்கள். அதுபோன்றே “வாய்விட்டு அழுதால் கண்ணீர்விட்டுக் கதறினால் கவலைகள் மறந்து போகும்" என்பதும் உண்மைதானே. 

பொருள் இழப்பு, பதவி இழப்பு, உடல் நல பாதிப்பு, உற்றார் உறவினர் இழப்பு எதுவாக இருப்பினும் அவற்றிற்கும் ஓர் எல்லை உண்டு. எந்த ஒரு துயரமும் வெறும் துயரமாக இல்லாது நமக்கு ஒரு படிப்பினையைக் கொடுக்கும். அது உடனடியான தீர்வாக இல்லாவிடினும் காலம் தக்க தீர்வை அளிக்கும். 

ஆழ்ந்த துயரம், வெறுமையான நாட்கள், ஆறுதல் பலன் தராமை, வாழ்க்கையில் ஆர்வமின்மை போன்ற நமது உணர்ச்சிகளை சீராக்குவதில் கண்ணீருக்கும் பங்கு உண்டு. உற்றார், உறவினர், அன்பு, நட்பு மற்றும் ஆதரவின் மூலம் புதிய வாழ்க்கை தொடங்கவும், தொடரவும் துயரத்தை மறந்து மன அமைதி காணவும் கண்ணீர் உதவும். 

எனவே, இறந்த காலத்தை மட்டுமே எண்ணி வருந்தாது, வருங்காலத்தை வளத்துடனும், நலத்துடனும் எதிர்கொள்ள கண்ணீரை துடைத்துவிட்டு முயற்சி எடுக்க வேண்டும். அதுதான் நம் நல்வாழ்விற்கு அடிகோலும். 

ஆக, மனநலம் காக்க கண்ணீரை சிந்த வேண்டிய இடத்தில் சிந்தி;  அவற்றைத் துடைத்து விட்டு, சிந்திக்க வேண்டிய இடத்தில்  சிந்தித்து அனைத்திலும் சித்தி பெறுவோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com