
வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் அனைவருக்கும் டென்ஷன் ஏற்படுவது இயல்புதான். சமையலறையில் டென்ஷன்… அலுவலகத்தில் டென்ஷன், பள்ளியில், கல்லூரியில் டென்ஷன்...
இப்படி பல பிரச்னைகள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை டென்ஷன் இல்லாத வாழ்வை அனுபவிப்பது என்பது பெரும் பாடாக உள்ளது. தற்போதைய அவசர உலகில் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவதற்குள் அதன் பெற்றோர் படும்பாடு சொல்லி மாளாது. அந்த குழந்தைக்கு தேவையானவற்றையெல்லாம் கவனித்து முடித்து அது டாட்டா சொல்லும்போதுதான் பெற்றோருக்கு பெருமூச்சு வரும். அதுவரை ஒரே டென்ஷன்தான். இது தினப்படி நடப்பது. எல்லோரும் கடந்து வர வேண்டிய அன்றாட கடமைகளில் இதுவும் ஒன்று.
ஆனால் சில விஷயங்கள் நமது டென்ஷன் ஆக்கும்போது அதிலிருந்து கடந்து வர வழி தெரியாமல் குழம்புவோம். இந்த டென்ஷனால் நாம் மட்டுமில்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவோம். நாம் டென்ஷனில் இருக்கிறோம் என்பதே தெரியாத அவர்கள், நமது டென்ஷன் மூலம் ஏற்படும் கோபம் போன்ற பின் விளைவுகளை சந்திப்பார்கள்.
உதாரணத்திற்கு அலுவலகத்தில் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்னையை மேலதிகாரி தீர்க்க முடியாத ஒரு பிரச்னையாக ஆக்கும் போது அதிலும் அதற்கு பொறுப்பேற்கும் படியான சூழல் நமக்கு வரும்போது அப்போது வரும் டென்ஷன் பெரும் தலைவலி. ஏனெனில் முடிவு எடுக்கக்கூடிய இடத்தில் மேல் அதிகாரியும் பணி செய்யக்கூடிய இடத்தில் நாமும் இருப்பதுதான்.
இப்போது என்ன செய்ய வேண்டும்? டென்ஷனுடன் இருந்தால் உடல் நலம்தான் பாதிக்கும். அந்தப் பிரச்னைக்கு நாம் தீர்வும் காண வேண்டும். துரத்தும் மேல் அதிகாரியையும் சமாளிக்க வேண்டும். இதற்கு நாம் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு நடுவில் இருக்கும் டென்ஷனை என்ன பண்ணுவது?
தோழி ஒருவர் திடீரென டூ வீலர் எடுத்துக்கொண்டு மாயமாகி விடுவார். கேட்டால் "ஒரே டென்ஷன் அதான் அப்படியே வண்டி எடுத்துக்கிட்டு ஒரு ரவுண்ட் போய் வந்தேன் டென்ஷன் போயே போச்சு" என சிரிப்பார். இப்போது நமக்கும் இந்த யுக்திதின் பயன்படுகிறது. பிரச்னையை அப்படியே விட்டு விலகி வந்து விட வேண்டும். எந்த டென்ஷன் என்றாலும் அதை விட்டு விலகி வரும்போது நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். குளத்தில் கல் எறியும்போது கலங்கி விடும் நீர், சிறிது நேரம் சென்றதும் மீண்டும் அமைதியாகி விடுவது போலத்தான் இதுவும்.
மனம் கலங்கி டென்ஷனுடன் இருப்பதை விட்டு விலகி நமக்கு பிடித்த வேறொன்றில் கவனம் செலுத்தி நமது மனதையும் மூளையும் புத்துணர்ச்சியாக்கும்போது தீராத பிரச்னைக்கும் தீர்வு கிடைப்பது உறுதி. நமது டென்ஷனும் அகலும். செய்யும் பணியில் வெற்றியும் கிடைக்கும்.