

அழுகை என்பது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், அழுகை என்பது நமது மனத்தை லேசாக்கும் ஒரு மந்திரம்.
அழுகை என்பது மனிதர்களின் இயல்பான உணர்வுகளில் ஒன்றாகும். மகிழ்ச்சி, துயரம், கோபம், பயம் போன்ற பல உணர்வுகள் காரணமாக மனிதர்கள் அழுகின்றனர். குறிப்பாக துயரமும் வேதனையும் அதிகமான போது, அது கண்ணீராக வெளிப்படும்.
ஒரு சிலர் அதிக மனஅழுத்தத்துக்குள் இருந்தால், யாரிடமும் பேசாமல், கழிவறையில் சென்று “ஓ” என்று அழுது விட்டு வருவார்கள். வெளியே வரும் போது கண்ணை துடைத்துக் கொண்டு வருவார்கள். வந்த பின்னால் பார்த்தால் அவர்கள் முகம் மிகவும் ஃப்ரெஷ் ஆக இருக்கும்.
அழுகை மனிதர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான வழியாகும். இதில் பல வகைகள் உண்டு.
துயர அழுகை :
இது சோகம், இழப்பு, வேதனை போன்ற காரணங்களால் வரும் அழுகை.
ஒருவர் தன் அன்பானவரை இழக்கும்போது அழுவது.
மகிழ்ச்சி அழுகை :
அதிகமான சந்தோஷம் அல்லது உணர்ச்சி மிகுதியால் வரும் ஆனந்த அழுகை.
ஒருவர் தன் வெற்றிக் கோப்பையை ஏந்தும் போது கண் கலங்குவர்.
பெற்ற பிள்ளைகளின் திருமணத்தின் போது ஆனந்தக் களிப்புடன் வெளிப்படும் கண்ணீர்.
கோப அழுகை :
கோபம் அல்லது மனக்கசப்பு அதிகமானபோது, தாங்க முடியாமல் வரக்கூடிய அழுகை.
பயம் அழுகை :
இருட்டில் குழந்தைகளுக்கு பயம் அல்லது அச்சம் காரணமாக வரும் அழுகை.
வலி அழுகை :
காயம் ஏற்பட்டால், உடல் வலி காரணமாக வரும் அழுகை.
தேவைக்கான அழுகை (குழந்தைகள்) :
குழந்தைகள் பசி, தூக்கம், சுகமின்மை போன்ற தேவைகளை தெரிவிக்க அழுவார்கள்.
கவன ஈர்ப்பு அழுகை :
சிலர் மற்றவர்களின் கவனத்தை பெறுவதற்காக அழுவார்கள்.
குழந்தைகள் தங்கள் தேவைகளை சொல்ல முடியாததால், அழுகை மூலம் தான் தெரிவிக்கின்றனர். பசி, தூக்கம், வலி போன்ற காரணங்களால் அவர்கள் அழுகின்றனர். பெரியவர்கள் மன அழுத்தம், துக்கம் அல்லது ஏமாற்றம் போன்ற சூழ்நிலைகளில் அழுவார்கள்.
அழுகை மனநலத்திற்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. இது மனதில் இருக்கும் துயரத்தை குறைத்து, மனதிற்கு ஓரளவு அமைதியை தருகிறது.
ஆனால் இந்த அழுகை, சிரிப்பு போன்ற உணர்வுகள் நமக்குள் இப்போது குறைந்தும் மறைந்தும் வருவதுபோல் ஒரு அச்சம் தோன்றி மறைகிறது.
முன்பு ஒரு துக்க வீட்டிற்கு துக்கம் விசாரிக்க செல்பவர்கள், முதலில் அந்த குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறி, அந்த இடத்தில் அமைதியை காக்க முயல்வார்கள்.
ஆனால் இன்றைய நிலையில், துக்கம் விசாரிக்க சென்ற வீட்டில் அமர்ந்து கொண்டு வதந்திகள் பேசுவது மற்றும் ஆடம்பரமான ஆடை அணிவது மூலம் சமூகத்தில் தன்னை உயர்த்திக் காட்ட நினைப்பது அதிகமாகியுள்ளது.
மேலும் இளைஞர்கள் மத்தியில் இந்த உணர்வுகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
சில நேரங்களில் மகிழ்ச்சியிலும் மக்கள் அழுவார்கள்; இது உணர்ச்சியின் அதிகரிப்பைக் காட்டுகிறது.
எனவே, அழுகை என்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல; அது மனித உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடாகும். மனிதன் மனதை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான வழி அழுகையாகும்.
அழுகையை மறைக்க வேண்டாம். மனம் பேச விரும்பும் போது கண்ணீரை வெளியே விடுங்கள். அது பலவீனம் அல்ல; அது உங்கள் மனதை சுத்தம் செய்யும் ஒரு வழி.
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். துயரத்தை, வேதனையை, மகிழ்ச்சியையும் அடையாளமாக உணருங்கள். கண்ணீர் உங்கள் பலம், உங்கள் உணர்வு, உங்கள் வலிமை.
மனதில் இருக்கும் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தியவர்கள் தான் உண்மையான அமைதியையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார்கள்.