அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

-மரிய சாரா

ழுதால் அவர்கள் கோழை, பெண்கள்தான் அழுவார்கள், அழுகை என்பது இயலாமை, அடிக்கடி அழுபவர்கள் மனதளவில் மிகவும் பக்குவம் இல்லாதவர்களாக இருப்பார்கள் என்றுதான் இதுவரை நமக்கு சொல்லப் பட்டிருக்கும். ஆனால், உண்மை அது இல்லை.

சிரிப்பு, கோபம், உறக்கம், அமைதி, வலி போன்றுதான் அழுகையும் ஓர் உணர்வு. அதை அடக்கிவைக்கத் தேவை இல்லை. எப்படி நமக்கு அடிபட்டால் மருந்து தடவுகிறோமோ அதேபோலதான் அழுகையும். பல மன வலிகளுக்கு அழுகைதான் மருந்தாகிறது.

ஆண்களைவிட பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள் என்று சொல்வதைக் கேட்கும் போதெல்லாம், ஆண்கள் மனதளவில் வலிமை குறைந்துப்போவதற்குக் காரணம் அவர்கள் துன்பங்களில் கூட அழுவதற்கு தயங்குவதுதான்.

அடக்க முடியாத மன அழுத்தம், வாழ்க்கை சிக்கல்களில் தலை வெடித்துவிடும்போல தோன்றும்போது சத்தமாக கத்தி அழவேண்டும்போல இருக்கும்போது அழுவதில் தவறேதும் இல்லை. அப்படி அழுது முடிக்கும்போது மனபாரம் பெருமளவில் குறைந்திருப்பதையும், மனம் இலகுவானதையும் நிச்சயமாக உணர முடியும்.

அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது, இனி வாழ வழியே இல்லை என தோன்றும் நிலைகளில்கூட அழத் தோன்றினால் அழுதுவிட்டு பார்த்தால், தெளிவான மனநிலையுடன் அசாதாரணமான திடமான மன வலிமையுடன் மீண்டு விடுவோம்!

சிறு குழந்தைகள் அழும்போது, பெண்ணைப்போல அழாதே, அழுவது கோழைத்தனம் நீ ஒரு வீரன் என்றெல்லாம் சொல்லிக்கொடுக்காதீர்கள். வீரனும் அழலாம் தவறில்லை. அழத் தோன்றினால் அழுத்துவிடு பரவாயில்லை. ஆனால், அழுது முடித்து உன் மனநிலை சீரானதும் சிந்தித்து முடிவெடு என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.

உங்களிடம் யாரேனும் பிரச்னையைச் சொல்லி அழுதால் அவர்களைத் தடுக்கவேண்டாம். நன்றாக அழு. நான் இருக்கிறேன். பார்த்துக்கொள்ளலாம் என்று மட்டும் சொல்லுங்கள். அவர்கள் அழுத்து முடித்த பின்னர் அவர்களுக்கு என்ன பிரச்னை எனக் கேளுங்கள். அவர்கள் உங்களிடம் அறிவுரை கேட்டால், உன் மனம் சொல்வதை தைரியமாய் செய் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டுங்கள்! இங்கு பலருக்கு நம்மிடமிருந்து தேவைப்படுவது பணமோ பொருளோ இல்லை. ஆறுதலான வார்த்தைகள்தான்.

நீங்கள் அடிக்கடி அழுபவராக இருந்தால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர் கள், தைரியமானவர்கள், எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்கள் என்பதை எண்ணி பெருமைகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
இளம் பெண்களுக்கு ஏற்ற பிக்னிக் / டூர் உடைகள்!
Motivation image

சோகங்களில் மட்டுமல்ல, சில சந்தோஷமான தருணங்களில்கூட நம்மை அறியாமல் அழுகை வந்துவிடும். எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் மகிழ்ச்சிகூட கண்களைக் கலங்க வைக்கும். இதற்கு காரணம் அதீத மகிழ்ச்சிதான்.

அதீத சோகம் மட்டுமல்ல, அதீத மகிழ்ச்சியும் அழுகையை தரும். அதிகப்படியான கோவத்தில் கூட சிலர் அழுவதுண்டு. அப்படி அழுபவர்கள் உண்மையில் மனது தூய்மையானவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் இருப்பார்கள் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

துக்கம் தொண்டையை அடைக்கும் உணர்வு வரும்போதெல்லாம் நிச்சயமாக கண்ணீர் வரும். அப்படி வரும்போது கட்டுப்படுத்தி அடக்கி ஆள வேண்டாம். மாறாக கண்ணீர் வழிந்தோடட்டும். அந்தக் கண்ணீரோடு நம் கவலைகளும், மன பாரங்களும் வழிந்தோடி மறையட்டும். ஆகவே, இனி நாம் அழுவதை இயலாமை என கருதாமல் மனதின் வலிகளுக்கு மருந்தாக நினைப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com