முறிந்த கையைக்கொண்டு உழைக்கலாம்; ஒடிந்த மனதோடு உழைக்க முடியாது!

Motivation Image
Motivation Image

நீ வாழும் வரை எப்படி வாழவேண்டும் என்பதை
கற்றுக்கொண்டே இரு. - புல்வர் லிட்டன். 

அனுபவத்தால் தக்க நடத்தைகளைக் கற்றுக்கொள்வதே கற்றலாகும். சமூக வாழ்விற்கும், குடும்ப வாழ்விற்கும் கற்றல் ஒரு அடிப்படைத் தேவை. எதிர்விளைவுகளை பழக்கப் படுத்திக்கொள்ள, வலியுறுத்திக் கொள்ளல் அவசியமாகிறது. 

முயற்சி, தோல்வி, திருத்தல், வெற்றி மற்றும் உள்ளுணர்வு அடிப்படையிலும் கற்றுக்கொள்வது உண்டு. தூண்டல், எதிர்வினை, உறவுகளைப் பற்றிய பார்வை களின் மாறுதல் ஆகியவையும் கற்றல் செயல்முறைகளில் இடம்பெறுகின்றன.

திறன்களை வளர்த்துக்கொள்ள தவறுகளை குறைப்பது, துல்லியத்தை அதிகரிப்பது, உடல் இறுக்கத்தைக் குறைத்தல், செயல்பாட்டில் ஒருமை, கவனித்தல், கவனச் சிதறல்களைத் தவிர்த்தல், முயற்சியில் ஆர்வம்  முதலியன தேவை. 

பயனுள்ள முறையில் படிப்பதற்கு தக்க மனப்பாங்கும், செயல் நோக்கமும் முக்கிய காரணிகளாகும். மேலும் படித்ததை திரும்பச் சொல்லிப் பார்த்தல், மற்றவர்களிடம் ஒப்பித்தல், பயிற்சி, சரிபார்த்தல், சரியான சூழல் ஆகியவையும் படிப்பதற்கு துணை புரிகின்றன.

எந்த இடத்தில் எப்படி அமர்ந்து படித்தோம் என்று அடையாளம் காணல், திரும்ப நினைவில் கொணரல், மறந்ததை மீண்டும்  கற்றல் ஆகியவை கற்றதை நினைவில் நிறுத்த துணை புரிகின்றன. புதியதாக கற்பவை பழையவற்றை மறக்கத் தூண்டலாம்.

பழையதையும் நினைவுப்படுத்திக்கொண்டு, புதியதை படிக்கும்போது, படித்தது மறப்பது குறையும். இவை பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது புத்தகங்கள் படிப்பதற்கும், கல்வி கற்பதற்கும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள். 

டைமுறை வாழ்க்கையில் ஏதோ ஒரு சரிவை சந்திக்கும் பொழுது, ஒரு விஷயத்தில் வீழ்ச்சி அடையும்போது மன இறுக்கம் ஏற்படுவது அனைவருக்கும் சகஜம். அப்பொழுது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சஞ்சலப்படுபவரைப் பார்த்து, ‘வெளியில் சிறிது நேரம் சென்று விட்டு வா, மனதிற்கு அமைதி கிடைக்கும்’ என்பார்கள். 

தொழிலில் சரிவை சந்தித்த ஒருவர், அப்படி ஒரு மாறுதலுக்காக கடற்கரைக்கு வந்தார். இரண்டு குழந்தைகள் அழகிய மணல் வீடு ஒன்றை கட்டிக்கொண்டிருந்தனர்.  ஏறக்குறைய கட்டி முடித்தபோது ஓர் அலை வந்து மணல் வீட்டை அழித்தது. குழந்தைகள் அழப்போகின்றனர் என்று நினைத்தால், அவர்கள் கலகலவென்று சிரித்தபடி கைகோர்த்துக் கொண்டு சற்றே தள்ளிபோய் இன்னொரு மணல் வீட்டைக் கட்டத் தொடங்கினர்.

இதையும் படியுங்கள்:
பனங்கற்கண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? 
Motivation Image

வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் வீழ்ச்சி நிகழும். அடுத்த முயற்சியை அதிக உற்சாகத்தோடு தொடங்குவதே வெற்றிக்கு  வழி என்பதை அந்தக் குழந்தைகளிடம் கற்றுக்கொண்ட மகிழ்வோடு அந்த தொழிலதிபர், புதிய உற்சாகத்துடன் புறப்பட்டார். 

அன்பர்களே! 
‘முறிந்த கையைக் கொண்டு உழைக்கலாம்.
ஒடிந்த மனதோடு உழைக்க முடியாது.’

சிங்கத்திடம் நடை, புலியிடம் வீரம், நாயிடம் நன்றி, யானையிடம் பலம், காகத்திடம் பகிர்ந்தும் பண்பு, மாடுகளிடம் கடுமையான உழைப்பு, குதிரையிடம் வேகம், எருமையிடம் பொறுமை, எறும்பிடம் சுறுசுறுப்பு இவை அனைத்தும் மனிதன் கற்க வேண்டிய இனிய பாடங்கள்.  எதில் இருந்தும் மனிதன் பாடம் கற்கலாம் என்பதற்கு இவையெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு. இதை இதயத்தில் நிறுத்துங்கள் மக்களே! இனிமையான வாழ்வு கிட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com