இலக்கை தீர்மானியுங்கள் வெற்றி நிச்சயம்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

ந்த ஒரு செயலில் வெற்றி பெறவேண்டும்  என்றாலும் அதற்கான இலக்கைத் தீர்மானித்துக் கொண்டு செயலில் ஈடுபட்டால் போதும். கட்டாயமாக வெற்றி வாகையைச் சூடலாம். அது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம்.

குடும்பத் தலைவர் ஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். அதில் போதுமான அளவு பொருள் ஈட்டியும் வந்தார். அவர்கள் குடும்பம் தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குடும்பம். ஆதலால் அவர்கள் வீட்டில் பிறக்கும் பையன் சிறுவனாக இருக்கும் பொழுதே வியாபார நுணுக்கங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்ப்பது அவர்கள் குடும்பத்தின் பாரம்பரியம். ஆனால் இந்த தலைமுறை பையனுக்கு வியாபாரம் செய்ய விருப்பமில்லை. 

ஆதலால் பல்வேறு விதமான இசைக்கருவிகளை வாசித்து அவை அனைத்திலும் வெற்றி பெறவேண்டும். எல்லோரும் நம்மை வித்தியாசமாக பார்க்கும் அளவிற்கு உயர்ந்து வர வேண்டுமென்று  விரும்பி அனைத்தையும் வாசிக்கக் கற்றுக் கொண்டான். ஆனால் அவனால் எதிலும்  தான் நினைத்தது போல் உச்சத்தைப் பெற முடியவில்லை. அதனால் தளர்ந்து போனான். 

இதைக் கவனித்த பெற்றோர் ஒரு வாரம் உன் மாமா வீட்டிற்குப் போய் விட்டு வா என்று அவனை அனுப்பி வைத்தார்கள். அவன் அங்கு சென்று அவன் மாமாவிடம் தன் உள்ளத்தில் உள்ள அனைத்தையும் கூறினான். என்னால் ஏன் ஜெயிக்க முடியவில்லை? என்று அவரிடம் காரணம் கேட்டான்.

 அவனது மாமா அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றார். அங்கே மூடி வைக்கப் பட்டிருந்த ஒரு கூடையை அப்படியே தூக்கச் சொன்னார். அவன் தூக்கிய பொழுது அதன் உள்ளே அடைபட்டிருந்த கோழிகள் அனைத்தும் திறந்து விட்டதும் வெவ்வேறு திசைகளில் சிதறி ஓடின. தோட்டத்தில் கிடைக்கும் தீனிகளைத் கொத்தி தின்ன ஆரம்பித்தன.

அப்பொழுது அவனைப் பார்த்த மாமா நீ வேகமாக அந்தக் கோழிகள் அனைத்தையும் பிடித்து வந்து பழையபடி இந்தக் கூடையில் அடைத்து விடு என்று கூறினார். அவனும் அந்த கோழிகளை விரட்டிக் கொண்டு ஓடினான். கோழிகள் தோட்டத்தில் எல்லா திசைகளிலும் மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்ததால் எந்தக் கோழியைப் பிடிப்பது என்று தெரியாமல் அங்குமிங்கும் ஓடி இறுதியில் எதையும் பிடிக்காமல் சோர்ந்து போய் வந்தான். என்னால் எந்தக் கோழியையும் பிடிக்க முடியவில்லை மாமா என்று சோகமாகச் சொன்னான்.

மாமா சிரித்தபடி ,தூரத்தில் இருந்த ஒரு கோழியை அவனிடம் காட்டி, அதோ அந்த கருப்பு கோழியை முதலில் பிடித்து வா. மெல்லவா ஒன்றும் அவசரம் இல்லை. பிறகு மற்ற கோழிகளைப் பிடித்து கொள்ளலாம் என்றார். அவனும் அந்த கோழியை மட்டும் குறி வைத்து துரத்திச் சென்றான்.  சில நிமிடங்களில் அது அங்குமிங்கும் ஓடி களைப்படைந்து தடுமாறியது. அந்த நேரத்தில் அவன் அதைப் பிடித்தான். கோழியுடன் திரும்பியவனைப் பார்த்த மாமா உன் கேள்விக்கு இதுதான் விடை என்றார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. 

இதையும் படியுங்கள்:
உஷாரய்யா உஷாரு! உஷாரம்மா உஷாரு!
Motivation image

என் கேள்விக்கும் இந்த கோழியைப் பிடித்து  வந்ததற்கும் என்ன சம்மந்தம்? என்று கேட்டான். எல்லா கோழி களையும் துரத்தியபோது உன்னால் எதையும் பிடிக்க முடியவில்லை .ஒரு கருப்பு நிற கோழியை மட்டும் குறி வைத்து துரத்தி சென்றபோது எளிதாக அதை பிடித்து வந்துவிட்டாய் அல்லவா?

வெற்றியடைய வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற நினைப்பில் நீ இதுவரை பல இலக்குகளை துரத்திக் கொண்டு ஓடினாய். எதிலும் பொறுமையாகவும் முழுமையாகவும் முயற்சி செய்யவில்லை. ஏதேனும் ஒரு இலக்கை தீர்மானித்துக் கொண்டு அதை உறுதியாக பின்தொடர்ந்து செல். எளிதில் வெற்றி பெறலாம் என்றார். இளைஞனுக்கு தன் தவறு புரிந்தது. வெற்றிக்கான வழியும் தெரிந்தது. பிறகு ஒரு இசைக் கருவியை நன்றாக இயக்கி, அதில் மென்மேலும்  முயற்சித்து நுணுக்கங்களை ஆராய்ந்து அறிந்து தேர்ச்சி பெற்று வெற்றிக் கனியைப் பறித்தான் என்று சொல்லவும் வேண்டுமோ?  

ஆக எதிலும் வெற்றி வேண்டுமா? கொக்குக்கு ஒரே புத்தி என்பது போல்  ஒரு இலக்கை தீர்மானித்துக் கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வருங்காலத் தூண்களே! இதை நினைவில் கொள்வீர்களாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com