முன்னேற்றம் தடுக்கும் இந்த 7 விஷயங்களை கண்டிப்பாக விட்டு விடுங்கள்!

motivation image
motivation imagepixabay.com

வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டியது ஒன்றே நமது வாழ்வின் கடமை. ஆனால் மனிதனாக பிறந்த அனைவருக்கும் பொதுவான  இந்த உணர்வுகளால் வெற்றியும் தள்ளிப் போகும் அபாயம் உண்டு. நமது முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய இந்த ஏழு விஷயங்களை நிச்சயம் தவிர்த்து செயல்களில் கவனமாக முன்னேறினால் வெற்றி தேவதை நம்மை பார்த்து புன்னகைப்பாள். இதோ அந்த ஏழு விஷயங்கள்.

1. தயக்கம் அல்லது வெட்கம்
ஒரு செயலை செய்யும்போது அதனை நம்மால் செய்ய முடியுமா அல்லது அதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா? அதில் தோல்வி அடைந்தால்  மற்றவர்கள் கேலி செய்வார்களே என்றெல்லாம் தோன்றுவது சகஜமே.  ஆனால் இப்படி எல்லாம் நினைத்து வெட்கப்பட்டு நின்றால் நிச்சயம் முன்னேற முடியாது. இந்த தயக்கத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள். புது உலகம் புரியும்.

2. பயம்
ஒரு புது தொழில் அல்லது துறையில் இறங்கும்போது இதனை நம்மால் செய்ய முடியுமா அல்லது இந்த செயலை செய்வதால் நமக்கு இடைஞ்சல்கள் வருமா? போன்ற எதிர்கால விளைவுகளை நினைத்து பயந்து கொண்டு இருந்தால் நிச்சயம் வெற்றியும் நம்மைக் கண்டு பயந்து ஓடிவிடும். எதிலும் துணிவுடன் இறங்குவதே புத்திசாலித்தனம்.

3. தாழ்வு மனப்பான்மை
"உனக்கெல்லாம் தைரியம் இருக்குப்பா எனக்கெல்லாம் சுத்தமா சுட்டுப் போட்டாலும் இந்த தைரியம் வராது"  "இதை செய்யக்கூடிய தகுதி எனக்கு இல்லை" என்று நினைத்து வருந்தும் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளும் தாழ்வு மனப்பான்மை வெற்றிக்கு முதல் எதிரி. நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய முதல் நபர் நாமே.

4. தள்ளிப் போடுதல்
எந்த செயலையும் உடனே செய்யாமல் அதற்குரிய கெடுகாலம் வரும் வரை காத்திருந்து அதை தள்ளி போட்டு பின் அரைகுறையாக செய்வது  என்பது முன்னேற்றம் தடுக்கும் முக்கிய காரணி.  நாளை நாளை என்று தள்ளிப் போட்டுக் கொண்டே செல்லும் எந்த செயலும் தோல்வியைத்தான் தழுவும். சிறியதோ பெரியதோ எதையும் சட்டென்று செய்து முடிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
ஆழ்கடல் அருவியை பார்த்ததுண்டா? அப்போ நீங்க இங்க கண்டிப்பா போகணும்!
motivation image

5. சோம்பல் 
சோம்பல்  இருந்து விட்டால் உங்களுக்கு வரும் வாய்ப்புகள் கூட நின்று போகும் அபாயம் உண்டு. சோம்பலுடன் எந்த செயலையும் செய்யாமல் அதை தவிர்ப்பது என்பது வெற்றிக்கு முட்டுக்கட்டை போடும். வெற்றி வேண்டுமெனில் உடலும் மனமும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.

6. மூடப் பழக்க வழக்கங்கள்
அந்தக் காலம் வேறு, இந்த காலம் வேறு என்று எண்ணாமல் பெற்றோர் கடைபிடித்த பிற்போக்கான எண்ணங்கள் அல்லது செயல்கள் செய்வது நமது வெற்றியை நாமே தூரத் தள்ளுவதற்கு காரணம். முக்கியமாக டெக்னாலஜி வளர்ந்த இந்த காலத்தில் பிற்போக்கு எண்ணங்களை தவிர்த்து முற்போக்கான எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் வெற்றி உறுதி. மூடப் பழக்க வழக்கங்கள் முன்னேற்றம் தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

7. எதிர்மறை எண்ணம்
நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரியாக இருப்பது இந்த எதிர்மறை எண்ணங்களே. மனதில் வரும் இந்த எதிர்மறை எண்ணத்தை தவிர்த்து நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வெற்றியும் வசப்படும். நம் எண்ணங்களின் வழிதான் நம் வாழ்வும் வெற்றியும் அமையும். எண்ணங்களை ஒருமுகப்படுத்தி செயலை செய்தால் முன்னேற்றம் நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com