
பெரியோர்கள் சும்மாவா சொல்லி சென்றார்கள் பழையன கழிதலும் புதியன புகுதலும் வாழ்க்கை உயர்வுக்கு நன்று என்று. பழையன கழிதல் என்றால் நாமெல்லாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் வீட்டில் இருக்கும் பழைய சாமான்களை எல்லாம் கழித்துவிட்டு வீட்டுக்கு வெள்ளை அடித்து கொண்டாடுவோம் அல்லவா? இந்த முறை எதற்காக?
வீட்டில் பழைய சாமான்கள் அதிகம் சேரும்போது வீட்டின் சுகாதாரம் பாதிக்கப்படும். வீட்டின் சுகாதாரம் பாதிக்கப்பட்டால் அங்கு வாழ்பவர்களின் மனநிலையில் மாறுதல் ஏற்பட்டு உற்சாகம் குறையும். மன உற்சாகம் குறைந்தால் மன அழுத்தம் உண்டாகும். மன அழுத்தத்தால் வாழ்க்கையில் வெற்றிபெaற முடியாது. இதனால் தான் வீட்டில் உள்ள பழைய குப்பைகளை களைந்துவிட சொல்கிறது நமது பாரம்பரியம்.
தற்போது குறைந்த பட்சத்தேவைகளுடன் வாழ்தல் என்ற வகையிலான `மினிமலிசம்` எனப்படும் வாழ்வியல் உலக அளவில் நிறையப்பேரை கவர்ந்து வருகிறது.
தேவையானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை தேவைப்படுபவர்களுக்கு தந்துவிடும் பழக்கம். அல்லது குறைந்த அளவு பொருட்களை மட்டுமே தேவைக்கு மட்டுமே வாங்கி பயன்படுத்துவது என்பது இதன் அடிப்படை. இதனால் தேவையற்ற மன அழுத்தங்கள் குறையும்.
உதாரணமாக அன்று திருமணங்கள் என்றால் பித்தளை முதல் அனேக பண்ட பாத்திரங்கள் சீர்வரிசையாக கொடுப்பது பழக்கம். ஏனெனில் அன்று இருந்தது கூட்டுக்sகுடும்பங்கள் என்பதால் பெரிய சமையலறைக்கு தேவையான அத்தனை பாத்திரங்களையும் தர வேண்டியது பெற்றோர்களின் கடமையாக இருந்தது. ஆனால் இன்று அந்த பாத்திரங்கள் எல்லாம் பரணில் தூங்கிக்கொண்டிருக்கிறது. காரணம் கூட்டுக்குடும்பம் அழிந்து தனிக்குடித்தனம் பெருகிவிட்ட நிலை.
சரி இந்த பழையன கழிதல் எப்படி வெற்றிக்கு உதவும் பார்ப்போம்.
ஏற்கனவே யாரோ ஒருவர் சொல்லிவிட்டு சென்றதை ஏன் நாம் காப்பி அடிக்க வேண்டும்? மற்றவர்கள் சொல்வதை ஏன் நமது எல்லைகளாகவும் குறிக்கோள்களாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்? 10 வருடங்களுக்கு முன்னால் மனிதரின் இருந்த லட்சியங்கள் இன்று லட்சியங்களாக கருதப்படவில்லை. அதற்கு மாற்றாக நிறைய வந்தாயிற்று. ஏனெனில் அன்று இப்போது இருப்பதுபோல் அறிவியல் முன்னேற்றம் இல்லை.
பழைய பழக்கங்கள் கொள்கைகளையே விடாப்பிடியாக பிடிக்காமல் நமக்கு எது சௌகரியம் என்று பார்க்கவேண்டும். நமது இலக்கை அவ்வப்போது மறுபரிசீலனை செய்வது நலம். நாகரீக வளர்ச்சிக்கு ஏற்றவாறு வாழ்க்கையின் குறிக்கோள்கள் மாறவேண்டும். மாறுவதில் ஒன்றும் தவறில்லை. ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாதது.
பழம் கருத்துக்கள், வாழ்க்கை முறைகள் கழுத்தை சுற்றிய பாம்பாக நம்மையே அழித்துவிடக்கூடாது.
என்றோ நிகழ்ந்த பழைய தோல்விகளை நினைத்து புதியதாக வரும் வாய்ப்புகளை ஏற்கத் தயங்கினால் வெற்றியும் தயங்கி நம்மிடமிருந்து விலகிவிடும். வருடந்தோறும் புதுவருடம் பிறப்பது போல் நமது எண்ணங்களிலும் செயல்களிலும் பழையதைக் கழித்து புதியதை வரவேற்று உற்சாக வெற்றி பெறுவோம்.