
எத்தனையோ கோபக்காரர்கள் சாதுக்களாக மாறி நற்பெயர் எடுக்கும்போது நாம் என் முயலக்கூடாது? நல்லவர்களாக வாழ வேண்டும் மன்று முடிவெடுங்கள். திரும்பத் திரும்ப அதுபற்றியே சிந்தியுங்கள். நிச்சயம் உங்களால் நல்லவர்களாக முடியும்.
நல்ல காரியங்களைச் செய்வதைவிட நல்லகாரியங்களை செய்வதற்குக் காரணமாக இருப்பவரே உயர்ந்தவர் என்கிறது ஹிப்ரு பழமொழி.
நல்லவர்களுக்குக் கிடைக்கும் நற்புகழையும் எண்ணிப் பாருங்கள். அப்படியே ஆகவேண்டும் என்ற ஆசை உள்மனதில் எழும். தவறு செய்தவர்களை இந்த உலகம் தவறு செய்தவர்களாகவே எண்ணும். அவர்கள் திருந்தி வாழ்ந்தாலும் அவர்களை உலகம் 'நல்லவர்கள்' என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்கும்.
உங்கள் மனதிலாவது நீங்கள் நல்லவர் என்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள். தனக்குத்தானே நல்லவனாக இல்லாத ஒருவன் மற்றவர்களுக்கு எப்படி நல்லவனாக இருக்கமுடியும்.
ஊரும் உலகும் என்ன நினைத்தால் உங்களுக்கென்ன? உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... உங்களுக்கு நீங்கள்தான் நீதிபதி என்பதை மனதில் கொள்ளுங்கள். அதே உலகம் உங்களது அடக்கமான அமைதியான வாழ்வைப் பார்த்து ஆச்சர்யப்படும்; பின்னர் புகழாரம் சூட்ட ஆரம்பிக்கும்.
மனத்தளவில் நல்லவர்களாக ஆகிவிட்டால் செயலும் நல்லதையே செய்ய முயலும், உங்களது மனோபாவங்களை உங்களது கட்டுப்பாட்டில் வைக்க முயலுங்கள் 'நல்லவர்' பட்டம் நாளும் தொடரும்.
அண்ணல் காந்தியடிகளின் சத்திய சோதனையைப் படித்துப் பாருங்கள், சின்ன வயதில் அவர் மனம் எப்படியெல்லாம் அலை பாய்ந்தது, திருட்டு, பொய், கோபம் போன்றவைகளுக்கு எப்படி இடம் கொடுத்திருந்தார் என்பதை உணர்வீர்கள்.
அப்படிபட்டவர் ' மகாத்மாவாக ' ஆனது எப்படி? மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்ததுதான் அந்த அளவிற்கு உங்களால் முடியாவிட்டாலும் நடைமுறை சாத்தியத்திற்கு ஏற்பட்டவாறு உங்கள் மனதைக் கட்டுப்பாட்டிற்குள் வையுங்கள்.
சுவாமி விவேகானந்தர் பள்ளிப் பருவத்தில் அன்னைக்கு அடங்கும் பிள்ளையாக இருந்தவர்தான், பின்னர் அன்பு வழியில் ஆன்மீக வழியில் அடக்கமான வாழ்வை அகிலமே பாராட்டக்கூடிய வாழ்வை வாழ்ந்தாரல்லவா.
'தொட்டில் பழக்கம் கடுகாடுமட்டும்' என்ற பழமொழிக்கேற்ப சான்றாளர்கள் நம்மிடையே நிறைய பேர்கள் உள்ளனர். எட்டாவது வகுப்புவரை மந்தமாக இருந்தவர்கள் இறுதித்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்கள் என்பதை எல்லாம் செய்தித்தாள்களில் படிக்கின்றோம்.
சோம்பேறிகளாகத் திரிந்தவர்கள் எல்லாம் சுறுசுறுப்பாகி வாகை சூடி வாழ்வாங்கு வாழ்க்கை நடத்தி உள்ளார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும் மனதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததுதான். அவர்களின் சாதனைக்கு அடிப்படையான காரணமாகும்.
உள்மனதில் உள்ள சாட்சிகளே மனிதச் செயல்களாக வடிவம் பெறுகின்றன. மனமென்னும் மகாசக்திக்கு அவ்வளவு ஆற்றல் உண்டு .அதனால்தான் மனிதன் என்ன நினைக்கின்றானோ அப்படியே ஆகின்றான் என்று பைபிள் கூறுகிறது.
செய்த தவறுகளை உணர்ந்து வருந்தினாலே நீங்கள் நல்லவர் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தி. தலை நிமிர்ந்து நடக்க முயலுங்கள்.
'நல்லவர்களோடு நாம் சேரும்போது நாம் 'நல்லவர்களாகி விடுகிறோம்.