
மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் ஆசை உண்டு. சிலருக்கு செல்வம் சேர்ப்பதில் ஆசை. சிலருக்கோ நிறைய படிக்கவேண்டும் என்று படிப்பாசை. சிலருக்கு பணம், பதவி, புகழ் இவற்றில் ஆசை இருக்கும். எந்த வகையான முன்னேற்றத்திற்கும் முதல் படி ஆசைதான். ஆசை எதனுடன் தொடர்புடையதாக இருந்தாலும் அதற்கும் அளவு உண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம். ஆசை பேராசையாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பேராசை பெருநஷ்டம் என்பார்கள்.
ஆசைக்கு அளவுண்டு என்பது பொதுவான பழமொழி. எவ்வித ஆசைகள் இருந்தாலும் அவற்றுக்கென்று ஒரு எல்லை உண்டு என்பதை இது உணர்த்துகிறது. அளவுக்கு மீறி ஆசைப்பட்டால் துன்பத்தைத்தான் தரும் என்றும், வாழ்க்கையில் சமநிலையைப் பேண வேண்டுமானால் ஆசைகளை குறைத்து கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆசைகள் இருக்கலாம்.
ஆனால் அளவுக்கு மீறி ஆசைப்பட்டால் மன அமைதி கெடுவதுடன் இன்னும் இன்னும் என்று பேராசையாக மாறி நம்மையே அழித்துவிடும்.
மனித வாழ்க்கையே விசித்திரமானது. "ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்று புத்தர் கூற, "அனைத்திற்கும் ஆசைப்படு" என்று வேறொருவர் கூற குழம்பித்தான் போவோம். ஆனால் உண்மையில் உற்று நோக்கினால் இந்த உலகில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் உலகம் இயங்குவது எல்லாமே ஆசையினால்தான். ஆசை இல்லையென்றால் எதையும் புதிது புதிதாக கண்டுபிடிக்க முடியாது; வளர்ச்சிபெற முடியாது. மண்ணசை, பெண்ணாசை, பொன்னாசை என்று ஆசைகளை வகைப்படுத்துவார்கள். எந்த ஆசைக்கும் ஒரு அளவுண்டு என்பதை மறக்க வேண்டாம்.
மன்னனுக்கு இந்த மண்ணுலகமே அவன் ஆட்சியின் கீழ் இருந்தாலும் மேலும் மேலும் தன் அதிகாரத்தை பரப்ப வேண்டும் என்ற பேராசை வளர்ந்து எல்லையை விரிவுபடுத்த அண்டை நாடுகள் மீது போர் தொடுத்து அவற்றையும் கைப்பற்ற எண்ணுவான். ஆசைக்கு அளவே இல்லை என்றாலும் அவன் இறுதியில் ஆடி அடங்கப்போவது ஆறடி மண்ணுக்குள்தான் என்பதை எண்ணி அளவுடன் ஆசைப்படுவது இல்லை. ஆசைக்கு அளவுண்டு பேராசைக்கு அழிவு உண்டு.
ஆசை என்பது ஒரு காரியத்தை செய்யவேண்டும் அல்லது ஒரு பொருளை அடையவேண்டும் என்ற விருப்பமாகும். ஆனால் இந்த ஆசைக்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்; இல்லையெனில் அளவுக்கு மீறிய ஆசை துன்பத்தைத்தான் தரும்.
ஆசைகளை நல்ல வழிகளில் நிறைவேற்றினால் அது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். ஆசை இல்லாத மனிதர்கள் உண்டா என்றால் நிச்சயம் கிடையாது. ஆசை இல்லாமல் வாழவும் முடியாது. ஆசை தான் வாழ்க்கையை தொடங்குகிறது, இயக்குகிறது, கடைசியில் முடித்தும் வைக்கிறது.
தீமை விளைவிக்கும் ஆசைகளை கட்டுக்குள் வைத்துக்கொண்டால் துன்பமில்லாத வாழ்வு பெறலாம். புள்ளிகள் இல்லாமல் கோலங்கள் இல்லை; ஆனால் புள்ளிகளே கோலங்கள் ஆவதும் இல்லை. ஆசைகள் இல்லாமல் வாழ்வியல் இல்லை; ஆனால் ஆசைகள் மட்டுமே வாழ்வியலும் இல்லை என்பதை புரிந்து கொண்டால் நிம்மதியான வாழ்வு பெறலாம்.