லட்டு தின்ன ஆசை..! ஆனால்...

motivation articles
motivation articles
Published on

பின்னடைவை சந்தித்த ஒருவனை முன்னேற்றம் அடையவைத்த உண்மை நிகழ்வு பற்றியது இப்பதிவு:

ந்த மாணவனுக்கு மிகவும் பிடித்த இனிப்பு லட்டு.
உறவினர் ஒருவர் அவனது கணிதம் நடத்தும் வாத்தியார். இவனுக்கு கணக்கு அவ்வளவாக வராது. இவன் தந்தை செல்லும் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு இவனையும் அழைத்து செல்வார். அந்த நிகழ்ச்சிகளுக்கு இவனது கணக்கு வாத்தியாரும் வந்து விடுவார். இவன் போதாத காலம் சொல்லி வைத்தார் போல் இவனது அப்பாவிடம், "இந்த முறையும் கணக்கில் வெகு குறைவாக மார்க் வாங்கி இருக்கிறான்" என்று இவன் அப்பா கேட்காமலேயே கூறுவார். இவனுக்கு அவமானமாக இருக்கும். ஒன்றும் சொல்ல முடியாது. விருந்தில் இலையில் வைத்து இருக்கும் லட்டு கூட கசக்கும்.

ஒரு வழியாக அந்த வருடம் பாஸ் செய்து அடுத்த வகுப்பிற்கு போய்விட்டான். அவனுக்கு நிம்மதி. இந்த புது வகுப்பில் அந்த கணக்கு வாத்தியார் அவனுக்கு கணக்கு பாடம் எடுக்கவில்லை. வேறு ஒரு டீச்சர். அப்பொழுது தான் கால் வருட பரீட்சை முடிந்து இருந்தது. இவனும் இவன் தந்தையும் உறவினர் வீட்டு பங்ஷனுக்கு சென்று இருந்தனர். அங்கும் அவனது போன வருட கணக்கு வாத்தியார் ஆஜர். ஆனால் இவனுக்கு கவலையில்லை. அவர்தான் இந்த முறை அவனுக்கு கணக்கு பாடம் எடுக்கவில்லையயே!

விருந்துக்கு அமர்ந்தனர். இவனுக்கு பக்கத்தில் இவன் தந்தை அமர்ந்துக் கொண்டார். அவருக்கு அடுத்து அந்த கணக்கு வாத்தியார் அமர்ந்தார். அவர் இவனுடைய தந்தையிடம் கூறினார். "இந்த பரீட்சையிலும் உங்க பையன் கணக்கில் தேர்ச்சி பெறவில்லை", என்றார். இவனுக்கு அதிர்ச்சயாக இருந்தது. தூக்கி வாரிப்போட்டது. அவர் தொடர்ந்து, "எதிர் பாராதவிதமாக அவன் கணக்கு டீச்சர் நீண்ட விடுமுறையில் சென்றுள்ளதால், ஹெட் மாஸ்டர் அந்த வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைதாள்களை என்னை திருத்த சொன்னார்" என்று கூறிவிட்டு, சாப்பிடுவதில் கவனம் செலுத்தினார்.

இலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்டுக்கள் இவனை பார்த்தன. இவன் பரிதாபமாக விழித்தான்.

இதையும் படியுங்கள்:
எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்; ஏற்றம் நிச்சயம்!
motivation articles

அந்த நிகழ்வு அவன் மனதை மிகவும் பாதித்தது. துளைத்தது. உடன் வைராக்கியம் பிறந்தது. அவனது நண்பன் நன்றாக படிப்பான். குறிப்பாக கணக்கில் எப்பொழுதும் 100 மதிப்பெண்கள் எடுப்பான். அவனிடம் உதவி பெற்று கணக்கின் நெளிவு, சுளிவு எல்லாம் நன்றாக முழு மனதோடும், ஆர்வத்தோடும் கற்றுக் கொண்டான். அடுத்து அடுத்த பரீட்சைகளில் நல்ல மார்க்குக்கள் எடுத்தான். பைனல் பரீட்சையில் 95 மார்க்குகள் எடுத்தான். அந்த கணக்கு வாத்தியாரிடம் பாராட்டும் பெற்றான்.

எட்டிக் காயாக கசந்த கணக்கு பாடம் லட்டு மாதிரி இனித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com