‘’அவங்க இதை எனக்கு செய்வாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா ஏமாத்திட்டாங்க’’ என்று யாரைப்பற்றியாவது நாம் எப்போதாவது புகார் சொல்லி இருப்போம். பிறர் நமக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்கும்போது சில சமயங்களில் நாம் ஏமாற்றப்படலாம். அவர்கள் நமக்கு உதவாமல் போகும்போது ஏமாற்றமே நமக்கு பரிசாக கிடைக்கலாம். எனவே நாம் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது பிறரிடம் அல்ல, நம்மிடம்தான் என்கிற உண்மையை புரிந்துகொண்டால் வாழ்வில் ஏற்றத்தை அடையலாம்.
எதிர்பார்ப்புகள் எப்படி ஏற்றத்தை தரும்?
ஒவ்வொரு மனிதரும் தான் இப்போது இருக்கும் நிலையை விட மேம்பட்ட நிலையை அடைய வேண்டும் என்று விரும்ப வேண்டும். மனித வாழ்வில் வளர்ச்சி என்பது வெறும் உடல் சார்ந்த வளர்ச்சி மட்டும் அல்ல; அது மனம் சார்ந்த மற்றும் பொருள், தொழில், சமூக நிலை என எல்லாவற்றிலும் ஏற்றமும் மாற்றமும் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் ஒரு மனிதர் வளர்ச்சி அடைந்திருக்கிறார் என்று சொல்ல முடியும்.
ஒருவர் ஒரு தொழில் தொடங்குகிறார் என வைத்துக் கொள்வோம். தனது தொழிலில் வெற்றி பெற்ற ஒரு நபராக மாற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவருடைய விருப்பமே எதிர்பார்ப்பாக மாறுகிறது. அப்போது அவருடைய நடத்தையில் மாறுபாடுகள் உண்டாகும். தான் சிறந்த தொழிலதிபராக வேண்டும் என்கிற உயர்ந்த இலக்குகளை அவர் நிர்ணயிப்பார். அதற்கான திட்டமிடுதலில் ஈடுபடுவார். தன்னுடைய இலக்கை அடைய சவால்களை எதிர்கொள்வது, போராடுவது போன்ற குணங்களையும் வளர்த்துக் கொள்வார்.
தேர்வில் சிறப்பாக வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்க்கும் மாணவன் ஆர்வத்துடன் படிப்பார். தனக்கு படிப்பில் சந்தேகம் தோன்றினால் ஆசிரியரிடம் கேட்டு தெளிவு பெறுவார். மேலும் சிறப்பு வகுப்புகளில் சேர்ந்துகூட தான் விரும்பிய முதல் இடத்தை அடைய முயல்வார். அவரது கடின உழைப்புக்கான பலனும் கிட்டி அவர் எதிர்பார்த்த வெற்றி வந்து சேரும். போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு தடகள வீரர் கடினமாக பயிற்சி செய்து தன் முயற்சியில் வெற்றி பெறுவார்.
யாரிடம் எதிர்பார்க்க வேண்டும்?
வாழ்வில் வெற்றி, முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என நினைக்கும் நபர்கள் முதலில் எதிர்பார்க்க வேண்டியது தன்னிடம் தான். இதையெல்லாம் செய்து முடிக்க வேண்டும், நான் வாழ்க்கையில் உயர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை தனக்குள்ளையே ஒருவர் வளர்த்துக் கொண்டால் மட்டுமே அவரால் முன்னேற முடியும். ஒரு மனிதனின் முயற்சிக்கு யாராவது உதவக்கூடும். ஆனால் முயற்சி எதுவும் செய்யாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாருக்கும் வெற்றியோ அல்லது முன்னேற்றமோ கிடைப்பது சாத்தியமில்லை.
எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும்போது அவரை அறியாமலேயே ஒரு நபர் தன்னுடைய செயல்களை மிகவும் சிறப்பாக செய்யத் தொடங்குகிறார். தன் நடத்தையை சீரமைக்கிறார். கடினமாக முயல்கிறார். வெற்றி கோப்பையைப் பறிக்கிறார். எனவே நேர்மறையான எதிர்பார்ப்புகளின் மூலம் அடையப்படும் வெற்றியானது நம்பிக்கையை வலுப்படுத்தும். ஒவ்வொரு வெற்றியும் அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளுக்கும் வெற்றிகளுக்கும் வழி வகுக்கிறது.