சில மனிதர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் உணர்ச்சிகளை பெரிதாக வெளிக்காட்டி கொள்ளாதவர்களாக இருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே, மனிதர்கள் பட்டும் படாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். தாமரை இலையில் உள்ள நீரைப் போல பட்டும் படாமல் வாழ்வதே சிறப்பாகும். ஒருவரோடு அதிகமாகவும் இணைந்திருக்க வேண்டாம், பிரிந்தும் இருக்க வேண்டாம். அப்படி வாழ கற்றுக்கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
சிலர் தங்கள் குழந்தைகளின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள். குழந்தையின் நல்லதுக்காக செய்கிறேன் என்று சொல்லி குழந்தையின் விருப்பம் என்னவென்று கூட கேட்காமல் அவர்களே அனைத்தையும் முடிவு செய்து விடுவார்கள். குழந்தையின் பெற்றோர் என்ற உரிமையில் இதையெல்லாம் செய்வதாக சொல்வார்கள். இது குழந்தையாக இருக்கும் வரை ஓரளவுக்கு பிரச்சனையில்லாமல் போகும். இதுவே அந்த குழந்தை வளர்ந்து பெரியவனானதும் அங்கேயும் எல்லா விஷயத்திலும் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைப்பார்கள். உரிமையாளனுக்கும், பாதுகாவலனுக்கும் வித்தியாசம் உண்டு. இது என்னுடையது என்று ஒருவரை உரிமை கொண்டாடுவது சரியா?
ஆங்கிலத்தில் Detached attachment என்ற கான்செப்ட் ஒன்று இருக்கிறது. உதாரணத்திற்கு இரண்டு நண்பர்கள் சிறு வயது முதலே மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். அவரவர் வேலையிலே பிஸியாக இருக்கிறார்கள். எனினும் அவர்கள் ஒன்றாக பகிர்ந்து கொண்ட நினைவுகளை எண்ணி மகிழ்ச்சியடைகிறார்கள். இப்போது ஒன்றாக நேரம் செலவு செய்ய முடியவில்லையே என்று குறை கண்டுப்பிடிக்காமல் புரிதலோடு இருப்பதும், காலத்துக்கு ஏற்ற மாற்றத்தை உணர்ந்து கொண்டு அதை ஏற்றுக்கொள்வதும் தான் Detached attachment. இதன் மூலம் உறவினுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
நமக்கு எவ்வளவு தான் நெருங்கிய உறவாக இருந்தாலும், தன்னுடையது என்று உரிமை கொண்டாடுவது ஏற்புடையதன்று. ஒரு உறவில் பாதுகாவலனாக இருக்கலாம். ஆனால் என்னுடையது என்று உரிமை கொண்டாடுவது அந்த உறவு முறிவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தையாகவே இருந்தாலும் என்னுடையது என்ற உரிமையை துறந்து விடுவது நல்லது. காலத்திற்கு ஏற்ற மாற்றத்தை உணர்ந்து கொண்டு வாழ்வது ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்கிறது. நம் கையிலே ஒரு பிடி கடல் மண்ணை எடுத்து இறுக்கி பிடிக்கும் போது மண் கையை விட்டு நழுவும். இதுவே கையை தளர்வாக வைக்கும் போது மண் கைகளிலேயே தங்கிவிடும். இது உறவுகளுக்கும் பொருந்தும்.