

உழைக்கவேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் உயரமுடியும்' என்று கூறும்போது, இது ஏதோ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தத்துவம் என்பதுபோல யாரும் எண்ணிவிடக்கூடாது. உலகத்தில் உயிரினங்கள் என்று தோன்றினவோ அன்று முதல் உழைப்பின் சக்தியால் உலகமே இயங்குகிறது என்று சொல்ல வேண்டும்.
பண்டைய கிரேக்க நாடுகளில் மக்கள் மிகவும் முன்னேற்ற வாழ்க்கை நடத்தினர் என்று படிக்கிறோம். அந்த மிகவும் உயர்ந்த நாகரிக அடிப்படையிலான வாழ்க்கைக்கு அடிப்படையாக இருந்தது அந்தக்கால மனிதனின் பிரமிப்பூட்டும் உழைப்புச் சக்திதான்.
நாகரீகமாக வாழ்ந்த கிரேக்க அரசும் மக்களும் பிற்காலத்தில் படுபயங்கரமான வீழ்ச்சியை அடைந்து கடுமையான அழிவுக்கு ஆட்பட்டனர். இதற்கு மிகவும் முக்கியமான காரணம், அவர்கள் தங்கள் உழைப்புச் சக்தியை அலட்சியப்படுத்திச் செயல் படுத்தாமல் விட்டு விட்டதுதான் சோம்பல், ஆடம்பர வாழ்க்கை. சுய உழைப்பை நம்பாமை போன்ற காரணங்கள்தான் பண்டைச் சிறப்பு வாய்ந்த ரோமானியப் பேரரசுகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சரித்திரம் தரும் இந்தப் படிப்பினையைச் சமூக ரீதியாக உணர்ந்து, தனி மனிதர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளும் போதுதான் மனிதன் உயர்வு நிலையை எட்டமுடிகின்றது.
பண்டைய நாள்தொட்டு இன்றளவும் மனித சமுதாயம் திட்டமிட்ட உழைப்பினை நல்கியே சிறுகச் சிறுக முன்னேற்றமடைந்து வந்திருக்கின்றது.
குதிரை இழுத்துச் சென்ற வண்டிகள் பழங்கதையாகும். இன்று பெட்ரோல் அல்லது மின்சாரம் ஆகியவற்றின் அடிப்படையைக் கொண்டு சொகுசான வாகனங்களில் நாம் உல்லாசச் சவாரி செய்கிறோம் என்றால் அதற்கு வழிவழியாக எவ்வளவு மனித உழைப்பு செலவிடப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் எந்த அளவுக்கு யோசிக்க முடிகிறது.
தரையில் சக்கரங்களை மாற்றுவதன் மூலம் வண்டிகளை ஓட்டிய மனிதன், தனது அற்புத உழைப்பின் காரணமாக ஆழ் கடலிலும் ,பரந்த வானிலும் நாம் மிகவும் வசதிகளோடு பயணம் செய்வதற்கு வழி அமைத்து தந்திருக்கிறான்.
குழந்தைப் பருவமாக இருக்கும்போதே பெற்றோர் குழந்தைகளுக்கு உழைப்பின் பெருமையை உணர்த்த கடமைப்பட்டிருக்கிறார்கள். கடுமையான உழைப்பினால் எதிர்காலத்தில் நமது வாழ்க்கை எவ்விதம் பிரகாசமடையும் என்பதைச் சின்னஞ்சிறு வயதிலேயே நமது குழந்தைகளுக்குப் போதித்துவிட வேண்டும். குழந்தைப்பருவத்தில் சுயமாகச் சிந்திக்கவும், செயற்படவும் முற்படும்போது தந்திருக்கும் பயிற்சி அவர்கள் சுயமாக உழைப்பினை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை, ஆசையைத் தோற்றுவிக்கும்.
ஆகவே, கருத்தறியாத சின்ன வயதிலேயே மனிதன் எதிர்காலத்துக்காக உழைக்கத் தயாராகிவிட வேண்டும். அதற்கான நுண்ணறிவு ஒரு சில குழந்தைகளின் உள்ளத்தில் தாமாகவே மலர்வதுண்டு. மற்ற குழந்தைகளுக்குப் பெற்றோர்கள்தான் வழிகாட்டி உதவவேண்டும்.
வாழ்க்கையில் சுயமுயற்சியாலும், சொந்த உழைப்பாலும் உயர்ந்து சிறப்பாக வாழ்க்கை நடத்தியோர் நடத்துவோர் வாழ்க்கையைக் கவனித்தால் அவர்கள் சின்னஞ்சிறு வயதிலேயே தங்களது எதிர்கால நல்வாழ்வுக்காகக் கடினமாக உழைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற உண்மையை உணரலாம்.
ஆகவே, எந்தப் பருவத்தில் உழைக்கத் தொடங்குவது என்று யோசனை செய்து கொண்டு இருக்காமல் முடிந்த அளவு சிறு பருவத்திலேயே தமது எதிர்காலத்துக்கான திட்டங்களை வகுத்து உழைக்கத் தொடங்கிவிட வேண்டும்.