

சிலர் மற்றவர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் எதற்கெடுத்தாலும் கேலி செய்வதும் கிண்டல் பண்ணுவதுமாக இருப்பார்கள். இந்த செயல் அவர்களை எவ்வளவு புண்படுத்தும் என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் நான்கு பேர் எதிரில் அவர்கள் அவமானப்படும் வகையில் பேசுவார்கள். கிண்டல் செய்பவர்களை சமாளிக்க முதலில் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு புன்னகைக்கலாம்.
இது அவர்களின் நம்மை காயப்படுத்தும் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும். அவர்களை அமைதியாக ஒரு புன்னகையுடன் கடந்து செல்லப் பழகினால் அது அவர்களை கட்டுப்படுத்தவும், உங்கள் மன அமைதியை காக்கவும் உதவும்.
அவர்களின் கேலி கிண்டல் பேச்சை அமைதியாகக் கேட்டு ஏன் இப்படி சொல்கிறீர்கள்? என்று கேளுங்கள். இது அவர்களுக்கு நம் மீது கவனம் செலுத்தவும், அவர்களின் வார்த்தைகளை திரும்பப் பெறவும் வாய்ப்பளிக்கும். அவர்களின் கேலி கிண்டல் பேச்சுக்கு பயந்து ஒதுங்கிப் போவதைவிட எதிர்க்கேள்வி கேட்பது அவர்களுக்கு சிறந்த பதிலடியாக இருக்கும். அவர்கள் பதில் அளிக்க முடியாமல் திக்கி திணறுவதைக்கண்டு ரசிக்கலாம்.
இப்படி மற்றவர்களின் மனம் வேதனைப்படுமே என்று சிறிதும் எண்ணாமல் கிண்டல் பண்ணுபவர்களை புறக்கணிப்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். அவர்களின் கிண்டலைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும், அவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் அவர்களை அடுத்த முறை இம்மாதிரி பேசத் தூண்டாது. மூக்கு உடைபட்டுவிடுமே என்று பயந்து சிறிது அடக்கி வாசிப்பார்கள். அத்துடன் அவர்களின் வார்த்தைகள் நம்மை மிகவும் பாதிக்கும்போது அதைப்பற்றி நம்பகமான ஒருவருடன் மனம் திறந்து பேச சரியான தீர்வு கிடைக்கும்.
அதையும் மீறி சிலர் கேலி கிண்டல் செய்வதைத் தொடரும் பொழுது, அவர்களின் வார்த்தைகள் நம்மை எவ்வளவு பாதிக்கிறது, எந்த அளவு காயப்படுத்துகிறது என்பதைத் தெளிவாகவும், சிறிது கண்டிப்புடனும் சொல்லலாம். அடுத்தமுறை இவ்வாறு நடந்து கொண்டால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிப்பதும், இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுவதும் நல்ல பலன் தரும். பிறர் கேலி செய்வதை சரியாக கையாள்வது நம் கண்ணியத்தை பாதுகாப்பதுடன், மீண்டும் அவை நிகழும் அபாயத்தையும் குறைக்கிறது.
அவர்களுடைய செயலை புறக்கணித்தல் அல்லது அவர்களின் தொடர்பை துண்டித்தல், அவர்களிடம் இருந்து விலகிச்செல்லுதல், மௌனம் காத்தல் போன்ற பல வழிகளில் இவற்றை சிறந்த முறையில் கையாளலாம்.