

சார்லஸ் டிக்கன்ஸின் தந்தைக்குக் கடன் வாங்கும் பழக்கம் இருந்தது. அவருடைய தந்தை நாற்பது பவுன் கடனைக்கட்ட முடியாததனால், கடனாளிகளின் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
தன்னிடமிருக்கும் சாமான்கள், துணிகள், பணம், வெள்ளிக் கடிகாரம் அனைத்தையும் கோர்ட்டில் ஒப்படைத்து அவரை விடுதலை செய்யும்படி, அவருடைய மனைவி கேட்டுக கொண்டார். ஆனால் அந்த சாமான்கள் பத்து பவுன்தான் பெறும் என்று கூறி அவரை விடுதலை செய்யமுடியாது என்று கூறிவிட்டார்கள்.
சார்லஸ் டிக்கன்ஸினுடைய தாய் சில நாட்களுக்குத் தன் குழந்தைகளுடன் தங்கி அவர்களைக் கவனித்து வந்தார். அவருக்கு எந்தவிதமான வருமானமும் கிடைக் காததினால், தன் குழந்தைகளை அனாதைகளாக விட்டு விட்டுத் தன் கணவனுடன் சேர்ந்து வாழச்சிறைக்கு சென்றுவிட்டார்.
தன் தந்தை சிறைக்குச் சென்றபோது சார்லஸ் டிக்கன்சுக்கு வயது பன்னிரண்டு நடந்து கொண்டிருந்தது. அனாதையாக விடப்பட்ட அவர் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு ஷில்லிங் தான் சம்பளம் கொடுக்கப்பட்டது.
மிகவும் சாதாரணமான சாப்பாடு சாப்பிடுவதற்குக் கூட அந்தப் பணம் போதவில்லை. தொழிற்சாலையிலிருந்து பல மைல்கள் தூரம் தள்ளி வசித்து வந்த அவர் தினமும் நடந்து தொழிற்சாலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்.
சில மாதங்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வெளியில் வந்த சார்லஸ் டிக்கன்ஸின் தந்தை பத்திரிகை நிருபராக வேலையில் சேர்ந்தார். டிக்கன்ஸ் தன்னுடைய பதிமூன்றாவது வயதில் பள்ளியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் படித்தார். அதற்குப் பின் ஆபீஸ் பையனாகவும், குமாஸ்தாவாகவும், பத்திரிகை நிருபராகவும் வேலை பார்த்தார்.
டிக்கன்ஸ் சிறுவயதில் நடிகனாக வரவேண்டுமென்று ஆசைப் பட்டார். அதற்காகத் தீவிரமாக முயற்சி செய்து கடைசியில் தோல்வி தான் கண்டார். நடிகனாக வரும் ஆசையை மறந்துவிட்டுச் சிறந்த எழுத்தாளனாக வர அவர் தீவிரமான முயற்சிகளை எடுத்துக் கொண்டார். கடினமான உழைப்பின் துணைகொண்டு உலகமே மதிக்கும் படியான எழுத்தாளனாகத் தன்னை உயர்த்திக்கொண்டார்.
'இரண்டு நகரங்களின் கதை' என்ற தலைப்பில் அவர் எழுதிய நாவல் உலக மக்கள் அனைவரையும் கவர்ந்தது. அவர் எழுதிய புத்தகங்கள் கோடிக்கணக்கில் விற்பனையாயின.
அவர் அமெரிக்கா சென்றபோது, சொந்த முயற்சியின் துணையால் முன்னுக்கு வந்த அவரைப் பார்க்கவும், அவருடைய பேச்சைக் கேட்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர் பல நாடுகளுக்குச் சென்று நிறைய சொற்பொழிவுகள் ஆற்றினார். அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் திரண்டு வந்தார்கள்.
நிறைய ஊர்களுக்குச் சென்று எண்ணற்ற கூட்டங்களில் பேசிவிட்டு இரவும் பகலும் சரியாக ஓய்வெடுத்துக் கொள்ளாமல் எழுதுவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அவர் ஒருநாள் இறந்தே போய்விட்டார். இவ்வளவு சின்ன வயதில் அவர் இறந்துவிட்டது. உலகின் துரதிர்ஷ்டம் என்று அறிஞர்கள் கருதினார்கள்.
அவருடைய புத்தகங்களினால் பல நல்ல விளைவுகள் ஏற்பட்டன. படிப்பின் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்தார்கள். பள்ளியில் நிலவி வந்த ஊழல்களும் தவறுகளும் அகற்றப்பட்டன. கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்களைச் சிறையில் அடைக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
சுலபமாக, ஒருவன் செல்வத்தையும் புகழையும் அடைய முடியாது. அயராத உழைப்பு ஒன்றின் துணை கொண்டுதான் ஒருவர் பல புதுமைகளையும், மக்களுக்குப் பயன்படும் நல்ல திட்டங்களையும் செய்யமுடியும்.