

இந்த உலகில் வெற்றி பெறவேண்டும் என்று ஆசைப்படாத மனிதர்கள் குறைவு. வெற்றிபெற எத்தனையோ வழிகள் இருந்தாலும தினமும் இரண்டு நிமிடங்கள் மட்டும் செலவழித்தாலே காலப்போக்கில் வெற்றி கிடைக்கும். அது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வெற்றி பெறுவது எளிதா?
வெற்றி பெறுவது என்றால் அது ஒரு இமாலயச் செயல். அதற்கு நீண்ட வருடங்களும் நிறைய மெனக்கெடல்களும் தேவைப்படும் என்று நினைத்து பலர் தயங்குகிறார்கள். சிலர் மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் திட்டம் தீட்டிக்கொண்டே இருப்பார்களே தவிர செயலில் இறங்க மாட்டார்கள். ஆனால் தினமும் இரண்டே இரண்டு நிமிடங்கள் மட்டும் செலவழித்தால் நாம் நினைத்த இலக்கில் வெற்றி அடையலாம் என்பதுதான் உண்மை.
ஏன் இரண்டு நிமிடங்கள்?
இரண்டு நிமிடங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று சொன்னால் முதலில் நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். மகத்தான செயல்கள் அனைத்தும் ஒரே நாளில் செய்து முடிக்கப்பட்டவை அல்ல. தினந்தோறும் செய்யும் சிறிய முயற்சிகளால்தான் ஒரு நாள் வெற்றி கிட்டும். ஒரு பெரிய மரம் வளர்வதற்கு ஒரு சிறிய விதை எப்படிக் காரணமாக இருக்கிறது? அதுபோலத்தான் இந்த இரண்டு நிமிட மந்திரமும் வாழ்க்கையில் பல அற்புதங்களை புரியும்.
இரண்டு நிமிடங்கள் என்பது தினமும் வாட்ஸ் அப்பில் செய்திகளை பார்ப்பது அல்லது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்க நாம் எடுத்துக் கொள்ளும் நேரத்தைவிட மிக மிகக்குறைவு. இந்த இரண்டு நிமிடங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் படித்தால் போதும். அதற்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே செலவாகும்.
இரண்டு நிமிடத்தின் சக்தி
நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்று விரும்புபவர்கள் முதலில் எடுத்த எடுப்பில் பத்தாயிரம் அடிகள் நடக்க வேண்டாம். இரண்டு நிமிடங்கள் மட்டும் நடக்க வேண்டும். இதைத் தினமும் பயிற்சி செய்யும்போது விரைவில் இன்னும் கொஞ்ச நேரம் நடக்கலாம், புத்தகம் படிக்கலாம் என்று தோன்றும். தினந்தோறும் செய்யும் பயிற்சி பழக்கமாக மாறிவிடும். இரண்டு நிமிடத்தின் சக்தி என்பது அதனுடைய குறுகிய காலத்தில் இல்லை. அதன் நிலைத்தன்மையில் உள்ளது.
பயிற்சியும் வெற்றியும்
ஒவ்வொரு நாளும் சிறிய விஷயம் ஒன்றை செய்யும்போது அது மனிதரின் ஆளுமைத் தன்மையின் ஒரு பகுதியாக மாறிவிடும். சிறந்த விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் ஒரே இரவில் வெற்றி பெறவில்லை. ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் செய்யும் சிறிய செயல்கள் மற்றும் பயிற்சிகளால் ஒருநாள் வெற்றி பெறுகிறார்கள்.
இரண்டு நிமிடம்தான் அந்தக் காரியத்தை செய்யப் போகிறோம் என்று நினைக்கும்போதே மனம் அதை செய்ய ஆவலாக இருக்கும். அதைத் தள்ளிபோடத் தோன்றாது. எந்த ஒரு பெரிய செயலுக்கும் அடித்தளம் என்று ஒன்று உண்டு. இரண்டு நிமிடங்கள் சுவாசப்பயிற்சி செய்வது ஒரு நீடித்த தியானமாக விரைவில் வளரும். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல தினந்தோறும் செய்யும் இரண்டு நிமிடப் பயிற்சி ஒருவரின் மனம், குணம் அல்லது தொழிலை முன்னேற்றும்.
படிப்பில் ஆர்வம் இல்லாத மாணவர்கள் முதலில் ஒரு நாளைக்கு இரண்டு நிமிடங்கள் மட்டும் மிகுந்த கவனத்துடன் படிப்பதை பயிற்சி செய்ய வேண்டும். விரைவில் படிப்பில் ஆர்வம் ஏற்பட்டு அதிக நேரம் படிக்கத் தொடங்குவார்கள். வீடு முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது மலைப்பாகத் தோன்றும். ஆனால் ‘மேசையை மட்டும் நான் இன்று சுத்தம் செய்யப்போகிறேன்’ என்று நினைத்தால் அது இரண்டு நிமிடத்தில் முடிந்துவிடும். மீண்டும் நாளை இன்னொரு இடத்தை எடுத்து சுத்தம் செய்யும்போது விரைவில் வீடு சுத்தமாகிவிடும். நிச்சயம் இரண்டு நிமிட மந்திரம் வாழ்வை மாற்றும்.