
எங்கள் வீட்டிற்கு எனக்கு உதவிக்கு வரும் பெண்மணி மூன்று வயது நிரம்பிய ஒரு சிறுமியை அழைத்து வந்திருந்தார். அந்தச் சிறுமியை அவரது கண்காணிப்பில் விட்டு விட்டுதான் அவளது பெற்றோர் வேலைக்குச் செல்கின்றனர். எனக்கு சிறிது நேரம் உதவியதுபோக மற்ற நேரம் முழுவதும் அந்த குழந்தையைக் கவனித்துக் கொள்வதுதான் அவர் வேலை.
அன்று அவர் வீட்டிற்கு வந்தவுடன் இந்தக் குழந்தையிடம் கனிவாக பேசி இன்று டாக்டரிடம் செல்ல போகிறோம். போனவுடன் உனக்கு என்ன செய்கிறது என்று தெளிவாக சொல்லத் தெரியவேண்டும். ஆதலால் டாக்டரை பார்த்து பயந்துவிடாமல் அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நன்றாக பதில் சொல்ல வேண்டும். போனதும் குட் ஈவினிங் சொல் என்று சொல்லிக்கொடுத்திருந்தார்.
அந்தக் குழந்தையும் எதிர்ப்பேச்சு எதுவும் பேசாமல் பவ்யமாக சரி ஆயா என்று கேட்டுக்கொண்டது. அதேபோல் என்னைப் பார்த்ததும் குட் மார்னிங் கிராண்ட்மா என்று சொன்னது. வீட்டிலிருந்த கை குழந்தையுடன் அதனின் பொம்மையைக் காட்டி விளையாடியது.
அதேபோல் அவர்கள் உறவினர் வீட்டுக்கு அன்று போவதாக இருந்தால் முன்கூட்டியே அவளின் பெற்றோர் என்னிடம் சொல்லிவிட்டு செல்வார்கள். நான் அதற்கு தகுந்தாற்போல் அங்கு சென்றால் எப்படி அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விடுவேன். அதேபோல் அங்கு நடந்து சபாஷ் வாங்கிக் கொண்டு வருவாள்.
சுற்றுலா செல்லும்போது, மாலையில் குழந்தைகளுடன் விளையாட செல்லும் போது, பள்ளிக்கு எப்படி செல்ல வேண்டும் என்று ஒவ்வொன்றாக சொல்லித் தருவதை அழகாக கற்றுக்கொண்டு செய்கிறாள். இதனால் அவளின் பெற்றோர்கள் இவளை வெளியில் கூட்டிச் செல்வது என்றால் எந்த விதமான பிரச்னையும் ஏற்படுவதில்லை. எல்லோருடனும் அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி ஒன்றிப்போய் அழகாக நடந்து வருவதாக அவளின் பெற்றோர்கள் சொல்கிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எந்தக் குழந்தையைப் பார்த்துக்கொண்டால் என்னங்க? நாம் சரியான பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுத்துவிட்டால் குழந்தைகள் கடைசி வரையில் அதை பின்பற்றுவார்கள்தானே. அதற்காகத்தான் இப்படி செய்கிறேன் என்று கூறினார்.
ஏதோ வேலைக்கு வந்தோம். குழந்தையைப் பார்த்துக் கொண்டோம். கூலி கிடைத்தால் போதும் என்று மட்டும் இல்லாமல், அந்தக் குழந்தையை அழகாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தேவையான பொழுது தகுந்த விஷயங்களை சொல்லிக்கொடுத்து செயல்பட்ட அந்த ஆயாவின் பெருமிதம் என்னை புல்லரிக்க வைத்தது.