உணர்ச்சி பிணைப்பு (Emotional bonding) வாழ்க்கைக்கு அவசியம் தேவையா?
உணர்ச்சிப் பிணைப்பு என்பது ஒரு நெருக்கமான உறவை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது எப்போதும் தேவையில்லை. உணர்ச்சி பிணைப்பு என்பது எப்போதெல்லாம் தேவை என்று பார்த்தால் ஆரோக்கியமான உறவுகளை வளர்ப்பதற்கு மிகவும் தேவை. ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும், நம்பிக்கையை வளர்ப்பதற்கும் நெருக்கமான உறவுகளில் உணர்ச்சிப் பிணைப்பு அவசியம் தேவை.
குழந்தைகள் மற்றும் பெற்றோரின் உறவில் இந்த பிணைப்பு உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பிள்ளைகளுக்கு பிரச்சனை அல்லது மன அழுத்தம் ஏற்படும்போது நம்மை பார்த்துக் கொள்ள பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளின் உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
அதேபோல் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மன கஷ்டமோ அல்லது மன அழுத்தமோ ஏற்படும்பொழுது உணர்ச்சி ரீதியாக ஆதரவளிப்பது என்பது மிகவும் அவசியம். நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று ஆதரவாக கையைப் பிடித்து அவர்களுக்கு பக்க பலமாக இருப்பது என்பது மிகவும் தேவையான ஒன்று.
சமூகத்தில் மற்றவர்களுடன் இணைந்து செயல்படும்பொழுது இந்த உணர்ச்சி பிணைப்பு அவசியமாகிறது. உணர்ச்சிப் பிணைப்பு என்பது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் இது எல்லா நேரத்திலும், எல்லோருக்கும் தேவைப்படுவதில்லை. சூழ்நிலையை பொறுத்தும், தேவைகளைப் பொறுத்தும் தீர்மானிக்கப்பட வேண்டியது.
உணர்ச்சிப் பிணைப்பு என்பது தேவைப்படாத இடங்களும் சில உண்டு. சில நேரங்களில் நம்முடைய சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டு விடுகிறது. உணர்ச்சிப் பிணைப்பைக் காட்டிலும் நம்முடைய சுயத்தை நேசிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையும், அவசியமும் ஏற்பட்டு விடுகிறது.
சில நேரங்களில் சிலர் மற்றவர்களுடன் தவறான உறவில் இருக்கும்பொழுது உணர்ச்சிப் பிணைப்பு என்பதிலிருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. இதனால் தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க முடியும். உணர்ச்சிப் பிணைப்பு என்பது சில சமயங்களில் ஒருதலை பட்சமாகக் கூட இருக்கலாம்.
இது ஒருவர் மீது அக்கறை கொள்ளவும், அவர்களைப் பற்றி சிந்திக்கவும் வைத்து வலுவான உணர்வுகளை வளர்க்கும். அவர்களிடமிருந்து உடல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ பிரித்துக் கொள்ள முயற்சித்தால் வலியை ஏற்படுத்தும். எனவே வந்த பின் குணப்படுத்துவதை விட தடுப்பு முறை சிறந்ததல்லவா? வருமுன் காப்பது நல்லதல்லவா?
தேவையற்ற இடங்களில் உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்க்கலாம். அதற்கு நமக்கு விருப்பமான சில துறைகளில் நம்மை மும்முரமாக ஈடுபடுத்திக்கொள்வது நல்லது. மனதை வேறிடத்தில் செலுத்தி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பழகலாம். உணர்வுகளை நேர்மறையான முறையில் எதிர்கொள்ளப் பழகலாம். முதலில் சாத்தியமற்றதாக தோன்றும். பிறகு நம் உறுதியான எண்ணமும் நம்பிக்கையும் நம்மை நன்றாக வழி நடத்திச் செல்லும்.