
சோம்பேறியாக இருந்துவிட்டால் சோறு கிடைக்காது தம்பி என்ற வரியை உச்சரிக்காத நாக்கு இருக்கவே முடியாது. உழைப்பு அப்பேற்பட்டது என்பதை உணர்த்தும் வரி அது. சமீபத்தில் எனது தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு அவரது பேரன் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தான். நாங்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்றதும் அவன்தான் அவர்கள் வீட்டு கேட்டை வந்து திறந்தான். அதன் பிறகு எங்களை சோஃபாவில் அமர வைத்ததும், அதன் ஓரங்களில் என் தோழி ஒட்டி வைத்திருந்த பொட்டுக்களையெல்லாம் பிரித்து எடுத்து சுத்தம் செய்தவன் மொத்தம் 20 ரூபாய் எனக்குத் தரவேண்டும் என்று கேட்டான்.
எதற்கு என்று விவரம் புரியாமல் நான் கேட்க, அதற்கு என் தோழி கேட்டை திறந்ததற்கு பத்து ரூபாய் சோபாவை சுத்தம் செய்ததற்கு பத்து ரூபாய் என்று கூறினார். அவர்கள் வீட்டில் அவனை அவ்வாறு பழக்கி வைத்திருக்கிறார்கள். எந்த ஒரு சிறு வேலையை செய்தாலும் அதற்கான ஊதியத்தை வாங்கி விட வேண்டும். கொடுத்து விட வேண்டும் என்பதுதான் அவனின் பெற்றோர் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் பாடம். சிறுவயதில் இருந்தே உழைக்கவேண்டும். அந்த உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெறவேண்டும் அதற்கு கௌரவம் பார்க்கக் கூடாது.
அதை நாம் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நடத்தி வைத்திருக்கும் பாடம். அதற்காக அந்தப் பையனின் தாத்தா, பாட்டியோ பெற்றோரோ ஒவ்வொரு வேலைக்கும் பைசா வாங்குகிறோமே என்று அந்தப் பையனோ மனதில் சங்கடப்பட்டதில்லை. எல்லோருமே அதை வரவேற்கிறார்கள். நமக்கும் அதை வரவேற்கத்தான் தோன்றுகிறது. அமெரிக்காவில் 18 வயதிற்கு மேல் அவரவர் உழைத்து சம்பாதித்து வாழவேண்டும் என்று இருக்கும் சட்டத்திற்கு ஒத்திகைதான் இந்தப் பழக்கம். இது அவர்களுக்கு உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற உற்சாகத்தையும், உழைத்தால்தான் முன்னேறலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
உழைப்பில்தான் சுகம் உள்ளது. உழைப்பில்லாமல் முன்னேற முடியாது. வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்குச் சமம். வேலை இன்றி அடுத்தவர் உழைப்பில் நிம்மதியாக எவன் தூங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல். எவன் ஒருவன் உடம்பை உழைப்பினாலும், மனதை அந்த உழைப்பால் ஏற்படும் உற்சாகத்துடனும் வைத்துள்ளானோ அவனே சாதனையாளனாக மாறுவான்.
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைந்து விடுவதில்லை. சில குடும்பங்களில் உழைத்து உழைத்து சேர்த்து வைத்த செல்வத்தை சில இளைய தலைமுறையினர் சோம்பலுடன் இருந்து அவற்றையெல்லாம் தகாத வழியில் செலவழித்து அழகாய் அமைத்து தந்த வாழ்க்கையை கூட வாழத்தெரியாமல் வீணாக்குவதும் உண்டு. தங்கத்தை உரசினால் வலிக்கிறது என்று சொல்வதில்லை. ஜொலிக்கிறது என்றே சொல்கிறோம். அப்படித்தான் உழைப்பும். நாம் எவ்வளவு ஊக்கத்துடன் கவனமாய் உழைக்கிறோமோ அவ்வளவு உயரத்தில் ஜொலிப்போம் என்பது உறுதி. உழைப்போம் அதன் கனியை சுவைப்போம்!