சிலருக்கு அடுத்தவர்களிடம் எப்படிப் பேசவேண்டும் என்ற இங்கிதம் தெரியாது. மற்றவர்கள் மனம் புண்படும்படி பேசிவிட்டு சென்று விடுவார்கள். ஆனால், மனம் புண்பட்டவர்களுக்கு அது ஆறாத வடுவாகிவிடும். எனவே, எப்போதும் மற்றவர்களிடம் கனிவாகப் பேச வேண்டியது மிகவும் அவசியமாகும். இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு நாள் அந்த நாட்டினுடைய அரசர் பக்கத்து நாட்டு அரசருக்கு செய்தி அனுப்ப தன் நாட்டிலிருந்து யாரை தூதுவராக அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு தன் நாட்டிலிருக்கும் குள்ள மந்திரியை அனுப்பலாம் என்ற யோசனை வருகிறது.
என்ன தான் அந்த மந்திரி உயரத்தில் குறைவாக இருந்தாலும், பயங்கரமான புத்திசாலி. அதனால், இவரை அங்கு அனுப்பினால்தான் சரியாக இருக்கும் என்று மன்னர் யோசித்து அவரையே அனுப்பி வைக்கிறார்.
ஆனால், பக்கத்து நாட்டு அரசருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அடுத்தவர்கள் மனதை புண்படுத்திப் பேசுவதை ஒரு பழக்கமாக வைத்திருந்தார். இப்போது தூதுவராக வந்த குள்ள மந்திரியைப் பார்த்து பக்கத்து நாட்டு அரசர், ‘உங்கள் நாட்டில் உன்னை விட உயரமான தூதுவன் யாருமேயில்லையா?’ என்று எல்லோர் முன்னிலையிலும் அரசவையில் கிண்டல் செய்து சிரிக்கிறார்.
அதற்கு குள்ள மந்திரி கூறுகிறார், ‘எங்கள் நாட்டுக்கென்று ஒரு வழக்கம் இருக்கிறது. அந்த வழக்கத்திற்கு ஏற்ற மாதிரிதான் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்’ என்று சொல்கிறார். அரசரும், ‘அப்படி என்ன வழக்கம்?’ என்று கேட்கிறார்.
அதற்கு மந்திரி சொல்கிறார், ‘புத்திசாலியான அரசர்கள் இருக்கும் நாட்டிற்கு புத்திசாலியான தூதுவர்களை அனுப்புவார்கள். முட்டாள் அரசர்கள் இருக்கும் நாட்டிற்கு முட்டாள் தூதுவர்கள் அனுப்புவார்கள். எங்கள் நாட்டிலேயே வடிகட்டின முட்டாள் நான்தான். அதனால் தான் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்கள்’ என்று கூறும் பொழுது அரசர் பதில் பேச முடியாமல் தலைக்குனிந்து நின்றார். இப்போதுதான் அரசருக்கு அவர் இவ்வளவு நாள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதே புரிந்தது.
இந்த கதையில் வந்ததுப்போலத்தான், அடுத்தவர்கள் மனதைப் புண்படுத்தி அதன் மூலம் சந்தோஷப்பட நினைத்தால், கடைசியில் அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலையே ஏற்படும். இதை உணர்ந்துக் கொண்டு மற்றவர்களிடம் இனிமையான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.