
தனித்து இயங்குவதை விட நம்மை புரிந்து கொண்டவர்களுடன் இணைந்து இயங்குவது எளிதான வெற்றியை பெற்று தரும். ஆனால் நம்மை எல்லோருக்கும் பிடித்து விடுமா? ஒவ்வொருவரின் குணநலன்களும் வெவ்வேறு என்ற நிலையில் முரண்பாடுகள் எழுவது இயல்பானது. ஒரே வயிற்றில் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கூட பிடிக்கும், பிடிக்காது என்ற எண்ணம் இருக்கக் கூடும்.
அனைவரும் விரும்புபவராக இருப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று என்றாலும் சில வழிமுறைகளைப் பின்பற்றி பெரும்பாலானவர்களுக்கு விரும்பத்தக்கவராக இருக்க நிச்சயம் முடியும், நாம் மனது வைத்தால். சரி எப்படி இருந்தால் மற்றவர்களுக்கு பிடிக்கும்? இங்கு உங்களுக்காகவே சில டிப்ஸ்.
எதிராளியின் செயல் குறித்த தனிநபர் விமர்சனத்தை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் எதிராளியை குறைத்துப் பேசும் போது உங்களுடைய மதிப்பும் குறைந்து நீங்கள் பேசும் வார்த்தைகள் வலிமையற்று விடும்.
நேரத்தை வீணடிக்கும் சர்ச்சைகளில் ஈடுபடாதீர்கள். எதிராளி விவாதிக்கும் நோக்கில் கேள்விகளை வீசினாலும் நகர்ந்து விடுங்கள்.
ஏதோ ஒரு செயலால் கோபம் ஏற்படும் போது அதை எதிராளி மீது காட்டாதீர்கள். அவர் உங்களை கோபப்படுத்தினாலும் நிதானமாக இருங்கள். இல்லையெனில் அந்த இடத்தை விட்டு விரைந்து வெளியேறி விடுங்கள்.
எதைப் பற்றி பேசினாலும் அல்லது யாரைப் பற்றி பேசினாலும் அந்த விஷயம் மற்றும் அவர்களைப் பற்றி ஒரளவு தெரிந்து கொண்ட பின் பேசுங்கள். தவறான தகவல்கள் உங்கள் மீதான நம்பிக்கையைக் குலைத்து விடும்.
நல்ல விளைவு தரும் உரையாடலில் முரண்பாடுகளாக தோன்றுவது போல் தோன்றினால் பேச்சுப்பொருளை மாற்றுங்கள். உரையாடலை ஒருபோதும் தேவையற்ற விவாதம் ஆக்கி விடாதீர்கள்.
தகுதி, அந்தஸ்து பார்த்து பேசாதீர்கள். அனைவரிடமும் பாரபட்சம் காட்டாத குணத்துடன் சரிசமமாக பழகுங்கள். சிலரை உயர்த்திப் பேசும் போதும் பழகும் போதும் மற்றவர்களுக்கு நீங்கள் போலியானவராக தெரிவீர்கள்.
அன்பும் கண்டிப்பும் கலந்தவராக இருங்கள். எது உண்மையானதோ எது நேர்மையானதோ அதை ஆதரிங்கள். சில சமயங்களில் நேர்மை அடுத்தவருக்கு கசப்பாக இருந்தாலும் அதுவே உங்கள் மதிப்பு உயரக் காரணமாகும்.
நன்றாக கவனித்துப் பாருங்கள். சிறந்த தலைவராக இருப்பவர்கள் தமது பணியாளர்களுக்கு நல்லது நடக்க தங்கள் சொந்த நலனை கூட விட்டுக் கொடுக்க தயங்குவதில்லை. விட்டுக் கொடுப்பவர்கள் என்றும் தாழ்வதில்லை.
எதைச் சொல்கிறீர்களோ அதைச் செய்யுங்கள். எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே சொல்லுங்கள். முடியாததை சொல்லி தர்ம சங்கடத்திற்கு ஆளாகாமல் தவிர்ப்பது நல்லது.
நிறைவேறாத போலி நம்பிக்கைகளை ஏற்படுத்தாதீர்கள். போலி வாக்குறுதிகளின் சாயம் வெளுத்தால் பின்விளைவுகள் உங்களுக்கே.
புறம் பேசுபவர்களை விட்டு விலகி விடுங்கள். அடுத்தவரின் விஷயங்களைப் பற்றி உங்களிடம் சொல்பவர்கள் அடுத்தவரிடம் உங்களைப் பற்றி சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
அதேபோல் மற்றவரின் செயல்களை கண்காணித்து விமர்சிப்பதும், அவர்களது சொந்த விஷயங்களில் தலையிடுவதும் அறவே கூடாது.
- இப்படி பல விஷயங்களில் கவனமாக இருந்தால் நிச்சயம் மற்றவர்கள் நம்மை விரும்பி ஆதரவு தருவார்கள்.