ஏங்க உம்முனு இருக்கீங்க? கொஞ்சம் சிரிங்க...

Different types of smile
Smile-motivation article in tamil
Published on

பூக்களில் சிறந்த பூ எதுவெனக் கேட்டால், சிலர் தாமரை என்பார்கள், சிலர் மல்லிகை என்பார்கள்.

'தாமரைக் கன்னங்கள் தேன் மலர் சின்னங்கள்', 'மல்லிகை என் மன்னன் மயங்கும்', 'மலர்களிலே அவள் மல்லிகை' என்றெல்லாம் கவிஞர்கள் பாடிச் சென்றுள்ளார். இவை எல்லாவற்றையும் …… ஹை ஜம்பில் தாவி முதலிடம் பிடிக்கும் பூ எதுவென்றால் அது 'சிரிப்பு'தான்.

இந்த சிரிப்பை முகத்தில் சூடிக்கொள்பவர்கள் சொர்க்கத்தில் வாழ்பவர்கள்.

'பொன் நகைக் காட்டிலும் புன்னகை மதிப்பானது சிறப்பானதும் கூட'

'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும், என்பார்கள்.

சந்தோஷ் சுப்ரமணியன் என்ற திரைப்படத்தில் ஹாசினி கேரக்டரை யாருக்குத்தான் பிடிக்காது? கள்ளங்கபடமில்லாத, வெள்ளந்தியான உள்ளத்தோடு... உதட்டில் சிரிப்போடு படம் முழுவதும் உலாவரும் கதாபாத்திரமல்லவா! அந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் நடிகர் பிரகாஷ் ராஜிடம் “இந்த பொண்ணு இருக்கிற இடத்தில BP மாத்திரைக்கு அவசியமே கிடையாதுப்பா” என்பார் நடிகர் விஜயகுமார்.

இதையும் படியுங்கள்:
ஒரு சின்னச் சிரிப்பு... ஒரு சாதாரண உதவி... உங்கள் வாழ்வை இனிமையான நினைவுகளாக மாற்றும்!
Different types of smile

சிரிப்பில் பலவகை உண்டு...

புன்னகை - உதட்டில் மெல்லியதாக இழையோடும் சிரிப்பு, இதை புன்னகை அல்லது மென்னகை என்பார்கள். இவை பெரும்பாலும் பெண்கள் காதல் வயப்படும் போது, காதலருக்கு உதட்டின் சிறு புன்னகை வாயிலாக பச்சைக் கொடி காட்டுவார்கள்.

ஏளனச் சிரிப்பு – பேருந்தில் ஒருவர் ஏறும்போதே , ஓட்டுநர் திடீரென எடுத்து விடுகிறார். அந்த நபர் தடுமாறி கீழே விழுகிறார். அதைப் பார்த்தும் அவருக்கு உதவி செய்யாமல் சிரிப்பது ஏளன சிரிப்பு எனலாம். இந்த ஏளன சிரிப்புதான் ஒரு மகாபாரத போருக்கே அடித்தளமாக அமைந்து விட்டது.

ஆணவ சிரிப்பு - ஒரு பெரிய கண்ணாடி மாளிகை… அதில் நுழையும் அரசன்.. சிறிது தூரத்தில் வழி தெரியாது திகைத்து தடுமாறி கீழே விழுகிறான். உடனே ஒரு சிரிப்பு. அந்த சிரிப்பைப் பார்த்து அவமானப்படுகிறான். அப்போதே அவன் நெஞ்சில் வஞ்சகம் குடி கொண்டது. இந்த ஏளன சிரிப்பிற்கு உனக்கு தக்க பாடம் புகட்டுவேன் என பாஞ்சாலியை அரசவையில் அவமானப்படுத்தி ஆணவ சிரிப்பு சிரிக்கிறான் துரியோதணன்..

ஆர்பாட்ட சிரிப்பு – சிலர், இடி முழக்கம் போல ‘ஹா ஹா ஹா’ என சிரிப்பார்கள். இந்த சிரிப்பில் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக் காட்சி பெட்டியின் சத்தம் தானாகவே மாயமாகி விடும்.

அசட்டு சிரிப்பு – நமக்கு கைமாத்தா ஒரு ஆயிரம் ரூபாய் வேண்டும். தெரிந்தவரிடம் கேட்கும் போது ஒரு சிரிப்பு சிரிப்போம் பாருங்க அது அசட்டு சிரிப்பு.

வயிறு குலுங்கும் சிரிப்பு - சார்லி சாப்ளின், டணால் தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் மற்றும் வைகைப் புயல் வடிவேலு இவர்களின் நகைச்சுவைக்கு நமது வயிறு குலுங்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

சாகச சிரிப்பு - வெற்றி பெற்றவர்கள் சிரிக்கும் சிரிப்பு சாகச சிரிப்பு ஆகும்.

சிரிப்பு நமது ஆயுளைக் கூட்டும் சஞ்சீவி மூலிகையாகும். அவை நகைச்சுவை பட்டிமன்றங்கள் வாயிலாகவும், பத்திரிகைகளில் ஜோக்ஸ்கள் வடிவங்களிலும் இடம் பெறுகின்றன. ஒரு பக்கத்தின் கருத்தை இரண்டே வரிகளில் வெளிப்பட்டு வெற்றி பெறும் நகைச்சுவைகளும் உண்டு. அதைப் படித்து சிரித்து மகிழ்பவர்களும் உண்டு.

இதையும் படியுங்கள்:
'சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு...'
Different types of smile

எனவே, எப்பொழுதும் சிரிப்போம்… மகிழ்வோம்.. சிரிப்பாலே உயர்வோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com