ஆம். ஒழுக்கம் உள்ளவர்களே வாழ்க்கையில் மற்றவர்களால் மதிக்கப்பட்டு வெற்றியும் பெறுகிறார்கள். திருவள்ளுவர் முதல் மகாத்மா காந்தி வரை சுயஒழுக்கம் குறித்து நம்மிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.
நம் வாழ்க்கையில் குழந்தைப் பருவம் முதல் அடிப்படையான விதிகளை அல்லது மதிப்புகளை நமது பெற்றோரிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறோம். வாழ்வின் வெற்றிக்கு அடித்தளம் பெற்றோர் கற்றுத்தரும் வாழ்வியல் ஒழுக்கங்கள் என்றால் மிகையில்லை.
ஆகவே, பெற்றோர்கள் இதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக பள்ளிக்குச் சென்று வந்ததும் கை கால்கள் கழுவுவது, காலணிகளை அதன் இடத்தில் வைப்பது, படிக்கும் புத்தகங்களை பொறுப்பாக மடித்து வைப்பது, பெரியவரிடம் மரியாதை தருவது, பண்பான பேச்சு போன்ற பல செயல்களை சொல்லலாம்.
இது புற ஒழுக்கங்கள் என்றால் சமூக ஒழுக்கங்கள் எனும் விதிகளையும் கற்றுத்தர வேண்டும். உதாரணமாக வங்கிகள் அல்லது வேறு ஒன்றின் நிமித்தம் வரிசையில் நிற்பது, பொது இடங்களில் மென்மையாக பேசுவது, அசுத்தம் செய்யாமல் இருப்பது, அனாவசியமாக பிறருக்கு தொந்தரவு தராமல் இருப்பது, முக்கியமாக சாலை விதிகளை கடைப்பிடிப்பது போன்ற எண்ணற்ற சமூக ஒழுக்கங்களையும் பிள்ளைகளுக்கு கற்றுத்தந்து வளர்க்க வேண்டும். இதற்கு பெற்றோருடன் பள்ளிகளும் ஆசிரியர்களும் உதவக்கூடும்.
பெரும்பாலான பெற்றோரிடம் ஒரு சிக்கல் உண்டு. அது என்னவென்றால் தங்கள் குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது என்றும் தங்களுக்குத்தான் அனைத்தும் தெரியும் என்று நினைப்பதுதான். ஆனால் இப்போது இருக்கும் பிள்ளைகள் கற்பூர புத்தி என் என்பார்கள் அது போன்று பார்க்கும் கேட்கும் கற்கும் விஷயங்களை சட்டென்று பதிய வைப்பார்கள். ஆகவே பிள்ளைகளிடம் இருந்தும் ஒழுக்கங்களை கற்றுக்கொள்ள முடியும்.
உதாரணமாக இணையதளத்தில் படித்த நிகழ்வு இங்கு. தெரிந்த நண்பர் ஒருவர் இதைப்பற்றி பதிவு செய்து மகிழ்ந்துள்ளார். விஷயம் இதுதான்.
அவர் குழந்தைக்கு ஏழு வயது இருக்கும்போது டிராபிக் சிக்னல் பற்றி சொல்லித் தந்துள்ளார். பிறகு ஒருநாள் அது விடுமுறைநாள் என்பதால் சிவப்பு சிக்னல் விழுந்ததை கவனித்தும் கவனியாதது போல் வண்டியை எடுத்துக்கொண்டுபோய் உள்ளார். இதை பார்த்து அவர் மகன் "அப்பா கிரீன் சிக்னல் இன்னும் போடலையே அதுக்குள்ளே போறீங்களே? நீங்க விதியை மீறி நடப்பது சரியா? " எனக் கேட்டுள்ளான். இதை கேட்டதும் அவருக்கு யாரோ ஒருவர் செம்பட்டியால் அடித்ததுபோல் இருந்ததாம். தன் தவறை உணர்ந்து சிக்னலை கவனிக்காமல் போனது தனது தவறுதான் இனி இது போல் நிகழாது என்று அவனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதை குழந்தை வளர்ப்பு பிரிவின் விழிப்புணர்வாக பொதுவெளியிலும் பகிர்ந்து உள்ளார்.
குழந்தைப் பருவத்தில் ஒருமுறை கற்றுத்தரும் ஒழுக்கம் அவர்களின் வாழ்நாள் முழுக்க அவர்களின் வெற்றிக்கு உதவும் ஏணிப்படிகளாகின்றன. இதை கவனத்தில் கொண்டு பிள்ளைகளுக்கு விதிகளை மதிக்க கற்றுத்தருவோம்.