

விடுகதையே வாழ்க்கை, என்பதுபோல வாழ்க்கையின் தத்துவம் அப்படித்தான் உள்ளது. வாழ்க்கை பலருக்கு பலவித அனுபவங்களை கற்றுத்தருகிறது. அதை நாம் பயன்படுத்திக்கொள்வதில்தான் நமது நிலைபாடுகள் அமையப்பெறுகின்றன.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, என திசைகள் காட்டுவது போல, நான்கு வேதங்கள் சொல்லியுள்ளது போல, வாழ்க்கையை நான்கு பருவங்களாக பிாித்து செயல்படலாமே! அந்த நான்கில் நாம் கவனமாக செயல்பட்டாலே கேரம் விளையாட்டில் கடைசியாய் மீதமிருக்கும் ரெட் அன்ட் ஃபாலோ காயின் நமக்குத்தானே!
அதேபோல நான்கு பருவங்களில் நாம் கடைபிடிக்க வேண்டியதில் குறிப்பாக நான்கு வகைகளான "பணிவு, கவனம், உழைப்பு, பொறுமை!" இவைகளை கடைபிடித்து வாழ்வதே நமக்கு பொிய வழிகாட்டியாக அமையும். சரியான பாதையில் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்த மேடுபள்ளங்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் கவனமாக காயம் படாமல் நடக்க, சீரான வாழ்க்கையை வழி நடத்த, நமக்கு பொிய துணையாக அமையும் என்பதே நிஜம்.
இதற்கு நமக்கு ஆரம்பகாலத்தில் இருந்தே நமது நல்ல எண்ணங்களும், பண்பாடுகளும், நல்ல நெறிமுறைகளும், அதற்கும் மேலாக இறைவன் வழிபாடுகளால் கிடைக்கும் வெற்றியும் துணை நிற்குமே!
"முதல் பருவம் "பணிவு" (1முதல் 20வயதுவரை)
படிக்கிற காலத்திலிருந்தே நம்மிடம் பணிவு வரவேண்டும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வாக்கியங் களுக்கிணங்க நாம் இவைகளை சரிவர கடைபிடித்து அனைவரிடமும் அன்பு நெறிகாட்டி பண்பாடுகள், மற்றும் அறநெறிகளை கற்றுத்தோ்ந்து, நன்கு படித்து கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்கி, அனைத்து உயிா்களிடமும் அன்பு கருணை பாசம் காட்டி நல்ல இளைஞனாய் புடம் போட்ட தங்கமாய் வளரவேண்டும்.
"இரண்டாம் பருவம் கவனம்" (40வயதுவரை)
இந்த பருவம்தான் நமக்கு சவாலான பருவம், இரண்டும் கெட்டான் வயது, பெற்றோா்கள் துணையுடன் அவர்களது ஆசிகளுடன் தைாியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்ல ஒழுக்கம் கடைபிடித்து கவனச்சிதறல் இல்லாமல், கோப தாபங்கள் தவிா்த்து தாழ்வு மனப்பான்மை எனும் நோயை விலக்கி, நல்ல உறவு மற்றும் நட்பு வட்டங்களை சோ்த்து உயர் படிப்பு, நல்ல வேலை, பெற்றோா்கள் பாா்த்துவைக்கும் இணையருடன் வாழ்க்கையை தொடங்கி, சரியான திட்டமிடுதல் வகுத்து, இருவரும் வேலைக்குச்சென்று வருமானம் பாா்த்து சிக்கன இலக்கை நிா்ணயித்து, ஓாிரு மகவுகளுடன் வாழ்வைத்துவங்கும் காலத்தில் படிப்படியாய் கவனம் கடைபிடித்து முன்னேறவேண்டும்.
"மூன்றாம் பருவம் உழைப்பு" (60வயது வரை)
இந்த பருவமானது கொஞ்சம் கடினமானதே! அதை நாம் மனைவியோடு கலந்து பேசி வாழ்வில் சறுக்கல் இல்லாமல் தேவையற்ற சச்சரவுகளுடன் கூடாநட்பு சோ்ந்து வாழ்க்கையில் வழுக்கிவிழாமல், ஆடம்பரம் படாடோபம் தவிா்த்து, அகலக்கால் வைக்காத நிலைபாடுகளுடன் சுயகட்டுப்பாடுகள் கடைபிடித்து, சேமிப்பினைஅதிகமாக்கி தேவையில்லா செலவுகள் தவிா்த்து, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு பிள்ளைகளின் எதிா்காலம் கருதுதல், கடன் வாங்காமல் வீடு கட்டுதல், அளவுக்கு மீறிய பேராசை தவிா்த்து வாழ்வின் தன்மைஅறிந்து பிள்ளைகளை கரை சோ்த்திடல் நல்லதே.
"நான்காவது பருவம்பொறுமை" (80வயதுவரை)
முடிந்தவரை உழைப்பு, பின்னர் ஆரோக்கியம் காத்தல் இறை நம்பிக்கை கடவுள் வழிபாடு மருத்துவ பரிசோதனை, நல்ல சிந்தனை, சரிவிகித உணவு, ஆழ்ந்த உறக்கம், நட்பு மற்றும் உறவு வகைகளில் இருந்து விலகாமல், நிதானமாய் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல், வயோதிக தம்பதிகளில் அன்பு பொறுமை காத்து, அதிக அக்கறை கொண்டு வாழ்நாளை வயோதிகத்தின் தன்மைக்கேற்ப அமைதியான வாழ்வை கடைபிடித்து பாருங்களேன்!
எந்த சிந்தனையும் இல்லாமல் மனமே ரிலாக்ஸ் என வாழ்ந்து வந்தால் முதுமை சுமை தொியாதே!