

நமது வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பதுதான். எனவே நாம் செய்கின்ற ஒவ்வொரு சிறிய காரியத்தையும் கூட மகிழ்ச்சியுடன் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். வசதிகள் சரிவர அமையுமானால் எந்த காரியத்தையும் உற்சாகத்துடன் நம்மால் செய்ய முடிகிறது. ஆகவே, வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் நாம் தயக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் ஆடம்பரம் என எண்ணுவார்களோ என்பதற்காக நம்முடைய வசதிகளை நாம் குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
எது வசதி, எது ஆடம்பரம் என்பதை எல்லாம் நம்முடைய தேவைகளை வைத்து நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நமக்கு மகிழ்ச்சி அளிக்காத எந்த விஷயத்தையும் நாம் செய்ய வேண்டும் என்கிற கட்டாயமில்லை. நம்முடைய தேவைகள் என்ன என்று நாம்தான் தீர்மானிக்க முடியும். ஒரு விஷயத்தில் கவனமாக இருந்தால் போதும். எந்த வசதிக்காகவும் நாம் செய்கின்ற செலவு நியாயமானதுதானா என்று யோசிக்க வேண்டும்.
ஒன்றில் முதலீடு செய்து, அதற்குரிய பலன் கிடைக்காமல் போனால் அது ஆடம்பர செலவைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கடன் வாங்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்ளத் தேவையில்லை. அப்படிக் கிடைக்கின்ற வசதி சுமையாகி மகிழ்ச்சியை அழித்துவிடும்.
எனவே, நம்முடைய வருவாய்க்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த வசதியும் மகிழ்ச்சியைப் பெருக்குவதாக அமைய வேண்டுமே தவிர, மகிழ்ச்சியைச் சீர்குலைப்பதாக அமைந்துவிடக் கூடாது. வாழ்க்கை என்பது நீரோட்டம் போன்றது. அது தேங்கிவிடக் கூடாது. ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும்.
ஓடிக்கொண்டே இருப்பது என்றால், வாழ்க்கை இயங்கிக் கொண்டேதான் இருக்கவேண்டும். முடிவு அற்ற செயல்பாடுதான் வாழ்க்கை. இந்தச் செயல்பாடு சோர்வு இல்லாமல் நடைபெற வேண்டும். அதற்கு நாம் செய்கின்ற காரியங்கள் மகிழ்ச்சியானவையாக இருப்பது அவசியம் ஆகிறது.
சங்கீதக் கச்சேரிக்கு மண்டபங்கள் கட்டுகின்றபோது ஒலிக்குச் சாதகமாக அமையும்படிதான் அந்தக் கட்டிடதை நிர்மாணிப்பார்கள். எதிரொலி கேட்கின்ற கட்டடமாக இருந்தால் கச்சேரி சிறப்படையாது. பாடுகின்ற பாடல்களும் சுவாரசியமில்லாமல் போய்விடும் .கச்சேரிகளை கட்ட வேண்டும் என்றால் பாடல்களுக்குத் தேவையான வசதிகள் இருப்பது அவசியம்.
பனங்கல்கண்டும் மிளகும் போட்டு சுண்டக் காய்ச்சிய பாலை அவ்வப்போது அருந்தினால்தான் பாகவதரின் குரல் அவருடன் ஒத்துழைக்கும் என்றால், அந்த வசதியை அவருக்குச் செய்து கொடுக்கத்தான் வேண்டும். நிகழ்ச்சி சிறப்பாக சங்கீதம் இனிமையாக அமைய வசதிகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு அமைய வேண்டுமானால் அதற்கான வசதிகள் வேண்டும்.
வாழ்க்கை தேவைப்படுகின்ற வசதிகள் எதுவும் ஆடம்பரமானதற்காக சக்திக்கு மீறிய வசதிகளைத் தேடிப்போய் சங்கடத்தில் மாட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நோக்கம் மகிழ்ச்சி என்பதால், மகிழ்ச்சியை பாதிக்கக்கூடிய எதுவும் வசதி ஆகிவிடாது.
தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு செய்கிற காரியங்களை மகிழ்ச்சியுடன் செய்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும். பாடல்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வசதிகள் இல்லாவிட்டால் கச்சேரி களை கட்டாது. வாழ்க்கைப் படிகளை செவ்வனே செய்வதற்குரிய வசதிகள் அமையாவிட்டால் வாழ்க்கை சிறக்காது. வாழ்க்கை சிறக்கும் வாய்ப்பை நாம் ஏன் நழுவவிட வேண்டும்.