

கிரிக்கெட் மைதானத்தில் எத்தனையோ நெருக்கடியான நேரங்களில் கூட, பதறாமல் நிதானமாக முடிவெடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் நம் 'தல' தோனி. அவர் மட்டை பிடித்துக் களத்தில் நின்றாலே ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். ஆனால், விளையாட்டுத் துறையைத் தாண்டியும் அவர் ஒரு சிறந்த வாழ்க்கை வழிகாட்டி என்பதைப் பல மேடைகளில் நிரூபித்து வருகிறார்.
சமீபத்தில் 'மிஷன் பாசிபிள் 2025' (Mission Possible 2025) என்ற நிகழ்ச்சியில் பாரூல் பல்கலைக்கழக மாணவர்களிடையே அவர் பேசிய வார்த்தைகள், வெறும் அறிவுரையாக இல்லாமல், வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிய வைக்கும் பாடமாக அமைந்தன. இன்றைய இளைஞர்கள் எதைத் தேடி ஓடுகிறார்கள், எதைத் தவற விடுகிறார்கள் என்பதை ஒரு ஹீரோவாக நின்று அவர் சுட்டிக்காட்டிய விதம் அற்புதம்.
கவனச்சிதறல்!
இன்றைய இன்ஸ்டாகிராம் உலகில், இளைஞர்கள் அனைவரும் விரும்புவது 'புகழ்' மற்றும் 'கவனம்' மட்டுமே. ஆனால் தோனி அவர்களிடம் சொன்னது ஒரு கசப்பான உண்மை. "கவனச்சிதறல் அடைவது மிகவும் சுலபம்; ஆனால் ஒழுக்கத்துடன் (Discipline) இருப்பது மிகவும் கடினம்" என்று அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. பெயர், புகழ் எல்லாம் வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்திவிட்டு, லட்சியத்தைத் தவற விடுபவர்களுக்கு மத்தியில், எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிந்தவனே உண்மையான வெற்றியாளன்.
நம்பிக்கை எங்கிருந்து வருகிறது?
மைக்ரோசாப்ட் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைத்த மாணவர்களைப் பாராட்டிய தோனி, அவர்களின் வெற்றியைக் கொண்டாடினார். அப்போது அவர் சொன்னது, "வெற்றி என்பது ஒரே நாளில் கிடைப்பதில்லை." சரியான தூக்கம், சரியான உணவு, சரியான Preparation - இவைதான் ஒருவருக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.
"நான் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கமாக இருந்தது" என்று அவர் தன் கடந்த காலத்தை நினைவுகூர்ந்தார். வெற்றிக்கான குறுக்குவழிகளைத் தேடாமல், உழைப்பை நம்புபவனே நிஜமான ஹீரோ.
வாழ்க்கைப் பாடம்!
வாழ்க்கையில் பொறுப்புணர்வு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கத் தோனி சொன்ன அந்த 'பைக்' உதாரணம் அனைவர் மனதிலும் ஆழமாகப் பதிந்தது. "சாலையில் நீங்கள் பைக் ஓட்டும்போது, எதிரே வருபவர் தவறு செய்து விபத்து ஏற்பட்டாலும், காயம் என்னவோ உங்களுக்குத்தான் ஏற்படப்போகிறது". அதாவது, தவறு யார் செய்திருந்தாலும், பாதிப்பு நமக்குத் தான் எனும் போது, நாம் தான் கூடுதல் கவனத்தோடும், பொறுப்போடும் இருக்க வேண்டும். படிப்பாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் நம் வாழ்க்கையை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்ற ஆழமான கருத்தை இவ்வளவு எளிமையாக யாராலும் சொல்ல முடியாது.
"சில நேரங்களில் நாம் வெற்றி பெறுகிறோம், சில நேரங்களில் நாம் வளர்கிறோம்; தோல்வி என்று எதுவுமே இல்லை" என்ற தோனியின் வார்த்தைகள் மாணவர்களுக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்தன. முடிவுகள் நம் கையில் இல்லை, ஆனால் எடுக்கும் முயற்சிகள் நம் கையில் தான் உள்ளன. ஒரு தலைவனாக, ஒரு வழிகாட்டியாகத் தோனி விதைத்த விதைகள், நிச்சயம் அந்த இளைஞர்களின் எதிர்காலத்தை மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.
கிரிக்கெட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் 'தல' எப்போதும் மாஸ் தான்!