

"இன்னிக்கு வேணாம், நாளைக்கு பாத்துக்கலாம்" - இந்த ஒரு வாக்கியம் தான் பலருடைய கனவுகளுக்குக் கல்லறை கட்டியிருக்கிறது. நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தள்ளிப்போடுபவர்கள் தான். ஜிம்முக்கு போவது, படிக்க ஆரம்பிப்பது, அல்லது ஒரு பிஸ்னஸ் தொடங்குவது என எல்லாவற்றிற்கும் நாம் சொல்லும் ஒரே பதில் "நாளை".
Darius Foroux எழுதிய "Do It Today" என்ற புத்தகம் நம் நேரத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்றும், சோம்பேறித்தனத்தை விரட்டி அடிப்பது எப்படி என்றும் தெளிவாக விளக்குகிறது.
நாம் ஏன் தள்ளிப்போடுகிறோம்?
நாம் சோம்பேறியாக இருப்பதால் மட்டும் வேலைகளைத் தள்ளிப்போடுவதில்லை. அதற்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணம் பயம் மற்றும் Perfectionism. எதைச் செய்தாலும் கச்சிதமாகச் செய்ய வேண்டும், இல்லையென்றால் செய்யவே கூடாது என்று நினைப்பவர்கள்தான் அதிகம் தள்ளிப்போடுகிறார்கள். சரியான நேரம் வரும்வரை காத்திருக்காதீர்கள், ஏனென்றால் அப்படி ஒரு நேரம் வரவே வராது. கச்சிதமாகச் செய்வதை விட, செய்து முடிப்பதே சிறந்தது என்பதுதான் இந்த புத்தகத்தின் முக்கியக் கருத்து.
பணத்தை இழந்தால் சம்பாதித்துவிடலாம், ஆனால் நேரத்தை இழந்தால் திரும்பப் பெறவே முடியாது. நாம் அடிக்கடி "எனக்கு நேரம் இல்லை" என்று புலம்புகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், நமக்கு நேரம் இருக்கிறது, ஆனால் முன்னுரிமை கொடுக்கத் தெரியவில்லை. ஒரு நாளில் 24 மணி நேரம் எல்லோருக்கும் பொதுவானது.
வெற்றி பெற்றவர்கள் அந்த நேரத்தை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. தேவையற்ற சோஷியல் மீடியா ஸ்க்ரோலிங், பயனற்ற அரட்டைகள் ஆகியவற்றைக் குறைத்தாலே நமக்குப் போதுமான நேரம் கிடைக்கும்.
கவனம் சிதறாமல் இருப்பது எப்படி?
நமது கவனத்தைச் சிதறடிக்க இன்றைய காலத்தில் ஆயிரம் வழிகள் உள்ளன. ஒரு வேலையைச் செய்ய உட்கார்ந்தால், ஐந்து நிமிடத்தில் மொபைல் நோட்டிஃபிகேஷன் நம்மை திசை திருப்புகிறது. இதற்கு ஒரே தீர்வு Single-tasking. அதாவது, ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யாமல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் முழு கவனத்துடன் செய்ய வேண்டும். அந்த வேலையை முடிக்கும் வரை வேறு எதற்கும் இடம் கொடுக்கக்கூடாது.
தினசரி பழக்கவழக்கங்கள்!
வெற்றி என்பது ஒரே நாளில் கிடைப்பதில்லை. எனவே, தினமும் காலையில் எழுந்து அன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிடுங்கள். உடற்பயிற்சி செய்வது, புத்தகம் படிப்பது, அல்லது ஜர்னல் எழுதுவது போன்ற நல்ல பழக்கங்களை உருவாக்குங்கள். ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கலாம், ஆனால் பழகிவிட்டால் அதுவே உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக மாறும். உங்கள் ஆற்றலை நிர்வகிப்பது நேரத்தை நிர்வகிப்பதை விட முக்கியம்.
இலக்கை அடைவது மட்டும் வெற்றியல்ல, அந்த இலக்கை நோக்கிய பயணத்தை ரசிப்பதும் முக்கியம். வேலைப்பளு என்று உங்களை வருத்திக்கொள்ளாமல், அவ்வப்போது ஓய்வு எடுங்கள். ஆனால் அந்த ஓய்வு சோம்பேறித்தனமாக மாறிவிடக்கூடாது. "நாளை" என்பது ஒரு உத்திரவாதம் இல்லாத நாள். எனவே, உங்களுக்குப் பிடித்த விஷயங்களை, செய்ய வேண்டிய கடமைகளை இன்றே, இப்போதே செய்யத் தொடங்குங்கள்.